Published : 27 Dec 2016 04:50 PM
Last Updated : 27 Dec 2016 04:50 PM

குழந்தைகளுக்கான குறும்படம்: நாய்க் குட்டியும் சிறுவனும்!

உங்களில் நிறைய பேர் செல்லப் பிராணியாக நாய்க் குட்டியை வளர்த்திருப்பீர்கள். அந்த நாய்க் குட்டி செய்யும் சேட்டைகளைப் பார்த்து குஷியாகியிருப்பீர்கள். அதனுடன் விளையாடவும் செய்திருப்பீர்கள். ஆனால், உங்களைப் போல இல்லாமல், ஒரு சிறுவனுக்கு அவனது அம்மா பரிசாகக் கொடுத்த நாய்க் குட்டியைப் பிடிக்காமல் போகிறது. அந்த நாய்க் குட்டி சிறுவனைத் தன் நண்பனாக்கச் செய்யும் சேட்டையையும் நீதியையும் அனிமேஷன் குறும்படமாக எடுத்திருக்கிறார்கள். அந்தக் குறும்படத்தின் பெயர் ‘தி பிரெசென்ட்’.

எப்போதும் வீடியோ கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கும் அந்தச் சிறுவனுக்கு அவனது அம்மா நாய்க் குட்டியைப் பரிசாக வாங்கிக் கொடுக்கிறார். அவனும் முதலில் சந்தோஷமாக அந்த நாய்க் குட்டியைத் தூக்குகிறான். அந்த நாயைப் பார்த்ததும் அவனுக்கு வெறுப்பு வருகிறது. ஏனென்றால், அந்த நாய்க் குட்டிக்கு ஒரு கால் இல்லை. உடனே அதைத் தூக்கி வீசிவிடுகிறான். தொடர்ந்து வீடியோ கேம்ஸில் மூழ்குகிறான்.

ஆனால், அந்த நாய்க் குட்டிக்கோ அந்தச் சிறுவனை ரொம்ப பிடித்துவிடுகிறது. அழகான முக பாவனைகளைக் காட்டி அச்சிறுவனின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்கப் பல குறும்புகளைச் செய்கிறது. கேம்ஸ் விளையாடிக்கொண்டே அவ்வப்போது அந்த நாயின் சேட்டைகளைப் பார்க்கிறான். ஒரு கட்டத்தில் ஒரு பந்தை வாயில் கவ்விக்கொண்டு வந்து அந்தச் சிறுவனிடம் நாய் கொடுக்கிறது. அப்போதும் வெறுப்பில் அவன் நாயை உதைக்கிறான்.

இருந்தாலும் நாய் விடுவதாகவில்லை. திரும்பவும் அந்தப் பந்தை எடுத்துவந்து கொடுத்துச் சிறுவனின் அருகில் நிற்கிறது. இதன் பிறகு கேம்ஸ் விளையாடுவதை நிறுத்துவிட்டு, நாய் கொடுத்த பந்தைத் தனது சட்டைப் பையில் வைத்துக்கொள்கிறான். தனது ஊன்றுகோல் உதவியுடன் எழுந்து நிற்கிறான். அப்போதுதான் அந்நாய்க்குட்டி போலவே அவனுக்கும் ஒரு கால் இல்லை என்பது தெரிய வருகிறது. அதன்பின் அந்தச் சிறுவன் என்ன செய்கிறான் என்பதோடு படம் முடிகிறது.

மொத்தமே 4.18 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது இந்தப் படம். நம் குறைகளை நினைத்து நம்மை நாமே சுருக்கிக்கொள்ளக் கூடாது; வெளித் தோற்றத்தைப் பார்த்து யாரையும் குறைத்து எடை போடவும் கூடாது என்ற நீதியை இந்தக் குறும்படத்தில் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள். ஜெர்மானியக் குறும்படம் இது. ஜேக்கப் ப்ரே என்பவர் இந்தப் படத்தை கடந்த 2014-ம் ஆண்டு இயக்கினார். சர்வதேச அனிமேஷன் குறும்பட விழாக்களில் இந்தப் படம் நிறைய விருதுகளை வென்றுள்ளது. அந்தக் குறும்படத்தைப் பார்க்க உங்களுக்கு ஆசையா?



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x