Published : 30 Jul 2014 12:00 PM
Last Updated : 30 Jul 2014 12:00 PM
நம் ஊரில் பூங்காக்கள் மற்றும் பொருட்காட்சிகளில் குட்டீஸ்களை குதூகலப்படுத்துவதற்காக ஓடும் குட்டி ரயிலில் நீங்கள் போயிருக்கிறீர்களா? மைதானத்தைச் சுற்றிச் சுற்றி ரயில் போகும்போது ரொம்ப ஜாலியாக இருக்கும் அல்லவா? உண்மையிலேயே அதே சைஸில் உள்ள பயணிகள் ரயில்கள் இங்கிலாந்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.
இங்கிலாந்தில் கென்ட் மாநிலத்தில் ரோம்னி - ஹைத் டைம்சர்ச் என்ற பெயரில் ரயில்வே நிர்வாகம் உள்ளது. இந்த நிர்வாகம்தான் குட்டியூண்டு பயணிகள் ரயிலை முதன் முதலாக இயக்கியது. 1927-ம் ஆண்டு முதல் 1978-ம் ஆண்டு வரை இந்தக் குட்டி ரயில் ஓடியது. பன்னிரெண்டே கால் இஞ்ச் (311 மில்லி மீட்டர்) இடைவெளி கொண்ட தண்டவாளத்தில் இந்தப் பயணிகள் ரயில் ஓடியது. அங்குள்ள ஹைத் சின்க்யூ துறைமுகத்தில் தொடங்கி டைம்சர்ச், செயின்ட் மேரிஸ் கடற்கரை, நியூ ரோம்னி வழியாக டங்ஜென்னஸ் கலங்கரை விளக்கம் வரை 21.7 கிலோ மீட்டர் தூரம் ஓடியது இந்த குட்டி ரயில்.
ரயிலில் ஏறி ஓட்டுநர் நின்று பார்த்தால், அவரது உயரத்துக்கும் குறைவாக ரயில் பெட்டிகள் இருக்கும் என்றால், எவ்வளவு குட்டியூண்டு ரயில் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
1978-ம் ஆண்டு வரை உலகின் குட்டி ரயில் என்ற பெருமை ரோம்னி-ஹைத்டைம் சர்ச் ரயிலுக்கு இருந்தது. ஆனால், இதை விஞ்சும் வகையில் பிரான்ஸில் பத்தே கால் (260 மில்லி மீட்டர்) இடைவெளி கொண்ட தண்டவாளத்தில் ரிசியூகுர்லிடான் ரயில் 1978-ம் ஆண்டு அறிமுகமானது. ஆனால், இது 1979-ம் ஆண்டு வரை மட்டுமே ஓடியது.
தற்போது சுற்றுலாவை வளர்க்கவும், குழந்தைகளைக் குஷிப்படுத்தவும் குட்டி ரயில்கள் இங்கு தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்குச் சுமார் ஒரு லட்சம் பேர் வரை இதில் பயணம் செய்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT