Published : 30 Jul 2014 11:36 AM
Last Updated : 30 Jul 2014 11:36 AM
கோட்டையூரை ஆண்டு வந்த ராஜாவுக்கு வெகு நாட்கள் கழித்துக் குழந்தை பிறந்தது. குழந்தைப் பிறந்ததும், அந்தக் குழந்தையை உலகிலேயே ஈடில்லாத, மிகச் சிறந்த குழந்தையாக நான் வளர்ப்பேன் என்று ராஜா உறுதிபூண்டார். 9 மாதத்திலேயே அ, ஆ, இ, ஈ….சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். எழுந்து நடக்க ஆரம்பித்தவுடன் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தார்.
பள்ளிக்கூடம் விட்டு குழந்தை வந்ததும் ராஜா விளையாட விடவில்லை. விளையாட்டெல்லாம் வீண். குழந்தைகள் படிக்கத்தான் வேண்டும். அதைத் தவிர வேறு எதுவும் செய்யக் கூடாது என்று எல்லோரிடமும் சொன்னார். சொன்னது மட்டுமல்ல, அதை சட்டமாகவும் போட்டார்.
ராஜா போட்ட சட்டத்தை யாராவது மீற முடியுமா? நாடெங்கும் குழந்தைகளைப் படி..படி…படியென்று அம்மா, அப்பாக்கள் தொந்தரவு செய்தார்கள். தெருக்களில் குழந்தைகளைப் பார்க்கவே முடியவில்லை. குழந்தைகள் இல்லாததால் விளையாட்டுகள் விளையாடவும் ஆட்கள் இல்லை. பகலில் சூரியனும் இரவில் சந்திரனும் அழுதன. தெருவிலுள்ள புழுதிகூட அழுதது. குழந்தைகளும் விளையாட முடியாமல் அழுது கொண்டேயிருந்தார்கள். இவர்கள் எல்லோரும் அழுகின்ற சத்தம் குழந்தைகளுக்கான தேவதைக்குக் கேட்டது.
குழந்தைகள் அழுவதைக் கேட்ட தேவதை, “ஏன் குழந்தைகள் அழுகிறார்கள்” என்று அணிலிடமும், வண்ணத்துப்பூச்சியிடமும், குட்டி நாயிடமும் கேட்டது.
அணிலும், வண்ணத்துப்பூச்சியும், நாய்க்குட்டியும் கோட்டையூரில் நடக்கிற கொடுமையைச் சொன்னார்கள். “அந்த நாட்டு ராஜாவும், அம்மா அப்பாக்களும் தங்களுடைய குழந்தைகள் ஒரே நாளில் படித்து முடித்து வேலைக்குப் போக வேண்டும் என்று பேராசைப்படுகிறார்கள்” என்று அவை கூறின.
அதைக் கேட்ட குழந்தைகளின் தேவதைக்குக் கோபம் வந்தது. “இவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டது.
குழந்தைகள் படும் கஷ்டங்களைக் குழந்தைகளின் தேவதை, கனவுகளின் ராணியிடம் சொல்லியது. கனவுகளின் ராணி அன்றிரவு கோட்டையூருக்கு வருகை புரிந்தாள். அப்போது ராஜாவுக்கு ஒரு கனவு வந்தது.
ராஜாவுக்கு முன்னால் ஒரு மலை இருந்தது. அதை ஒரே நாளில் வெட்டித் தரை மட்டமாக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. ராஜா வெட்ட முடியாது என்று சொன்னபோது கசையடி கிடைத்தது. ராஜா அழுதார். எல்லாம் கனவில்தான்.
திடுக்கிட்டு கண்விழித்தவர் திரும்பிப் படுத்தார். இப்போது ராஜாவின் முன்னால் ஒரு ஆறு ஓடியது. அந்த ஆற்று நீரை ஒரே நாளில் குடித்து முடிக்க ஆணையிடப்பட்டது. ராஜாவால் குடிக்க முடியவில்லை. ராஜாவை விழுங்க தண்ணீர் பூதம் விரட்டியது. திடுக்கிட்டு முழித்த ராஜாவுக்கு வியர்த்தது. தூக்கம் வரவில்லை.
உடனே அவர் மந்திரியைக் கூப்பிட்டார். மந்திரியிடம் அவருடைய கனவுகளைச் சொன்னார். இந்தக் கனவுகளுக்கான காரணம் என்ன என்று அவர் கேட்டார். மந்திரிக்கும் தெரியவில்லை. மந்திரி உடனே அரண்மனை ஜோசியர்களை அழைத்தார்.
ஜோசியர்களும் ராஜாவின் கனவுகளைக் கேட்டுவிட்டு, “குழந்தைகளுக்கான தேவதையின் கோபமே இந்தக் கனவுகளுக்குக் காரணம். குழந்தைகள் அழுதால் தேவதைக்குக் கோபம் வந்து விடும். இனி இப்படி தினசரி கனவுகள் வந்து உங்கள் தூக்கத்தை கொத்தி கொத்தித் தின்றுவிடும்” என்று சொன்னார்கள்.
ராஜாவுக்குப் பயம் வந்து விட்டது. எது இல்லாமலும் இருந்துவிடுவார். ஆனால் சாப்பாடும் தூக்கமும் இல்லாமல், அவரால் இருக்க முடியாது. மறுநாள் காலையில் எழுந்தவுடன் ராஜா ஒரு ஆணை பிறப்பித்தார்.
“இனிமேல் குழந்தைகளைப் படி படி என்று யாரும் துன்புறுத்தக்கூடாது. குழந்தைகள் தங்கள் விருப்பம் போல படிக்கலாம். விளையாடலாம்.”
இப்போது கோட்டையூரில் குழந்தைகள் எல்லாம் ஆடிப் பாடி மகிழ்ந்து சிரித்தார்கள். அவர்கள் சிரிப்பதைக் கேட்ட குழந்தைகளின் தேவதையும் சிரித்தாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT