Published : 30 Nov 2016 10:02 AM
Last Updated : 30 Nov 2016 10:02 AM
சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும்போது குரங்குகள் செய்யும் சேட்டைகளைப் பார்த்திருப்பீர்கள். அப்படிப் பார்த்துவிட்டு, கையில் உள்ள உணவுப் பொருட்களைப் (போடக் கூடாது என்று அறிவித்தாலும்கூட) போட்டுவிட்டு வருவோம். ஆனால், தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகே உள்ள லோப்புரி என்ற சுற்றுலாத் தலத்தில் குரங்குகளுக்கு விருந்தே வைக்கிறார்கள்.
குரங்குகளுக்கு மனிதர்கள் ஏன் விருந்து வைக்கிறார்கள்? லோப்புரிக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவருபவை குரங்குகள்தான் என்று அந்த ஊர் மக்கள் நம்புகிறார்கள். அதற்காகக் குரங்குகளுக்கு நன்றி தெரிவிக்க ஒரு தினத்தையே தேர்வு செய்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்த மெகா விருந்தைக் குரங்குகளுக்கு வைக்கிறார்கள். இதற்கு ‘லோப்புரி குரங்குத் திருவிழா’ என்று திருநாமமும் சூட்டிவிட்டார்கள்.
விருந்தில் பழங்கள், தானிய உணவுகள், முந்திரிப் பழங்கள் என ஊர் முழுவதும் வண்டிகளில் வைத்து குரங்குகளுக்குத் தருகிறார்கள். குரங்குகள் எங்கிருந்து வருகின்றன என்று தெரியாது. கும்பல் கும்பலாகத் தாவி வந்து உணவுகளைக் காலி செய்துவிட்டுப் போய்விடுகின்றன. அதோடு குரங்குகள் நடனமும் ஆடி மக்களை மகிழ்விக்கின்றன. ஒரு ஊர் அளவில் நடைபெற்று வந்த இந்தத் திருவிழா, இன்று சர்வதேசத் திருவிழாவாக மாறிவிட்டது. இந்த விழாவைப் பார்ப்பதற்காகப் பல வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் லோப்புரிக்கு வருகிறார்கள்.
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் வந்தால், அங்குள்ள குரங்குகளுக்கு ஆட்டம், கொண்டாட்டம்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT