Published : 19 Oct 2016 11:11 AM
Last Updated : 19 Oct 2016 11:11 AM
விதவிதமான கதைப் புத்தகங்கள்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். சென்னையிலிருந்து வந்த எங்க மாமா, எனக்கு ஒரு கதைப் புத்தகம் வாங்கி வந்து கொடுத்தாரு. புத்தகத்தைப் பார்த்ததுமே எனக்கு மகிழ்ச்சி தாங்க முடியலை. எல்லாமே பஞ்சதந்திரக் கதைகள். சொல்ல மறந்துட்டேனே, புத்தகத்தோட பேரும் ‘பஞ்சதந்திரக் கதைகள்’தான். புத்தகத்தோட ஆசிரியர் ப்ரியா பாலுன்னு போட்டிருந்துச்சு.
கொஞ்சம் பெரிய புத்தகம். எவ்ளோ கதைகள் இருக்குன்னு பார்த்தேன். அப்பாடி, 116 கதைகள் இந்தப் புத்தகத்துல இருக்குது. ஒரு நாளைக்கு ஒரு கதைன்னு படிச்சாகூட கிட்டத்தட்ட 4 மாசம் கதைகளைப் படிக்கலாம்னு மனசுக்குள்ள நினைச்சேன். ஆனா, கதைகளைப் படிக்கத் தொடங்கியவுடன் ஒரு வாரத்துக்குள்ள எல்லாத்தையும் படிச்சு முடிச்சுட்டேன். எல்லாக் கதைகளும் ரொம்ப எளிமையாவும் விறுவிறுப்பாவும் இருந்துச்சு. அதனால ஒரே மூச்சுல படிச்சுட்டேன்.
பஞ்சதந்திரக் கதைகள்ன்னா பொறுமை, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, பெருந்தன்மை, திறமைன்னு ஐந்து விஷயங்கள் இருக்கும்னு எங்க தாத்தா சொல்லியிருக்காரு. அதுமாதிரியே இதுல 116 கதைகள் இருக்கு. பெரும்பாலான கதைகள்ல விலங்குகள்தான் வருது. விலங்குகள் செய்யுற செயல்களை வைச்சு நமக்கு நல்ல அறிவுரைகளைக் கதைகள்ல சொல்லியிருக்காங்க.
‘நரியின் தீர்ப்பு’, ‘சிங்கத்தின் தந்திரம்’, ‘தவளையின் தலைக்கனம்’, ‘மரம் வளர்த்த குரங்கு’, ‘முதலையை ஏமாற்றிய முயல்’, ‘இரும்பைத் தின்ற எலி’, ‘முட்டாள் முதலை’ போன்ற கதைகளைப் படிச்சப்ப சிரிப்பாவும் இருந்துச்சு; சிந்திக்கவும் வைச்சது. புத்தகத்தோட கடைசியில 5 கதைகளைத் திரும்பவும் போட்டிருந்தாங்க. போட்ட கதைகளையே போட்டதுக்குப் பதில், வேற ஐந்து கதைகளைக் கொடுத்திருக்கலாம். மற்றப்படி புத்தகம் எனக்கு ரொம்ப பிடிச்சுருந்துச்சு.
நான் சொன்னது உங்களுக்குப் பிடிச்சிருந்தா, நீங்களும் ‘பஞ்சதந்திரக் கதைகள்’ புத்தகத்தை வாங்கிப் பாருங்களேன்.
நூல்: பஞ்சதந்திரக் கதைகள்
வெளியீடு: கண்ணப்பன் பதிப்பகம்
விலை: ரூ.250 | ஆசிரியர்: ப்ரியா பாலு
முகவரி: 4/20, திருவள்ளுவர் தெரு,
ஈக்காடுதாங்கல், சென்னை-32.
தொலைபேசி: 044-22250905
நூலை மதிப்புரை செய்தவர்: வி.ஜீவிகா, 8-ம் வகுப்பு,
வித்யவிகாஷ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, காரமடை, கோவை.
உங்களுக்குப் பிடித்த நூல் எது? குழந்தைகளே! நீங்கள் ஆர்வமாகப் படித்த நூல்கள் உங்களிடம் இருக்கின்றனவா? அந்த நூலில் பிடித்த அம்சங்களை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். மறக்காமல் நூலின் முன் பக்க அட்டையை ஸ்கேன் செய்தோ, புகைப்படம் எடுத்தோ அனுப்புங்கள். உங்கள் புகைப்படத்தை அனுப்புவதுடன் படிக்கும் வகுப்பு, பள்ளியின் பெயர், முகவரியையும் குறிப்பிடுங்கள். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT