Published : 18 Jun 2014 12:00 AM
Last Updated : 18 Jun 2014 12:00 AM
வாண்டுமாமா… பெயரே ரொம்ப வித்தியாசமா இருக்குல்ல.
கீழ்கண்ட பெயர்கள்ல ஏதாவது ஒண்ணை பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களான்னு உங்க அப்பா, அம்மாகிட்ட கேட்டுப் பாருங்க:
பூந்தளிர், பார்வதி சித்திரக் கதைகள், கோகுலம்... அப்புறம் பலே பாலு, சமத்து சாரு, குள்ளன் ஜக்கு போன்ற வித்தியாசமான பெயர்களைக் கொண்ட கதாபாத்திரங்கள். 1984ல இருந்து 95 வரையிலான காலகட்டத்துல அவங்க ஸ்கூல்ல படிச்சிருந்தா, நிச்சயம் இந்தப் பெயர்களைக் கேள்விப்பட்டிருப்பாங்க. குழந்தைகளுக்கு ரொம்பவும் பிடித்த இந்த குழந்தை இதழ்கள், கதாபாத்திரங்களை உருவாக்குனவர்தான் வாண்டுமாமா.
நாமெல்லாம் ஜாலியா பாடி, சந்தோஷமா இருக்க அழகான தமிழ் பாடல்களை அதிகம் எழுதினவர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா. குழந்தைகளுக்குப் பிடித்த கதைகள், பொது அறிவுத் தகவல்கள், அறிவியல், வரலாறு உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் எழுதினவர் வாண்டுமாமா.
அவரோட உண்மையான பேரு கிருஷ்ணமூர்த்தி. ஆனா, அப்படிச் சொன்னா யாருக்கும் தெரியாது. வாண்டுமாமான்னாதான், எல்லோருக்கும் புரியும். ஓவியம் வரையறதல இருந்த ஆர்வம் காரணமாக வாண்டுமாமா பத்திரிகைத் தொழிலுக்கு வந்தாராம். பிறகு அவருக்குப் பிடித்திருந்த விஷயங்களை எழுத, சீக்கிரமே குழந்தை எழுத்தாளரா புகழ்பெற்றுவிட்டார்.
எப்படியோ ஒரு வகைல பத்திரிகைத் தொழிலுக்கு அவர் வந்தது நல்லதாப் போச்சு. இல்லேன்னா நாமெல்லாம் சுவாரசியமா படிக்கிற வகைல நிறைய விஷயங்களை அவர் எழுதியிருக்க மாட்டாரே. அவர் எழுதிய அற்புதமான குழந்தை நாவல்கள், சித்திரக் கதைகள், குழந்தை இதழ்கள் என இந்தப் பட்டியலுக்கு முடிவே இல்ல.
அலாவுதீன் அற்புத விளக்கு, சிந்துபாத் போன்ற உலகப் புகழ்பெற்ற அரபிக் கதைகளைப் போலவோ, உலகத்துல கூட்டம் கூட்டமாக படிச்ச ஹாரி பாட்டர் மாயாஜாலக் கதையைப் போலவோ தமிழில் ஏதாவது கதை இருக்கான்னு யாராவது கேட்டா, இருக்கு. அது வாண்டுமாமாவின் குள்ளன் ஜக்குன்னு சொல்லலாம்.
ரோல் தால், ரஸ்கின் பாண்ட் போன்ற புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர்கள் எழுதிய தொடர் சாகசக் கதைகள் போல தமிழில் உண்டான்னு கேட்டா, நிச்சயமாக இருக்கு. அதுதான் பலே பாலு, சமத்துச் சாருன்னு சொல்லலாம். இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்.
இதுக்கெல்லாம் மேல ஆங்கிலத்தில் இருப்பது போல தமிழில் வந்த சிறந்த குழந்தைகள் இதழ்களுக்கு ஆசிரியரா இருந்தவர் வாண்டுமாமாதான். 1960களில் தொடங்கப்பட்ட கோகுலம் இதழின் முதல் ஆசிரியர் வாண்டுமாமா, பூந்தளிர் இதழ் வந்துகொண்டிருந்த காலம் முழுவதும் வாண்டுமாமாதான் அதன் ஆசிரியர்.
இத்தனை சிறப்புக்கும் பெருமைக்கும் உரிய வாண்டுமாமா, கடந்த வாரம் நம்மிடம் இருந்து விடைபெற்று காலமாகிவிட்டார். ஆனால், அவர் எழுதிய புத்தகங்கள் எப்போதும் நம்முடனேயே இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT