Published : 16 Jun 2022 01:07 PM
Last Updated : 16 Jun 2022 01:07 PM

சிவாஜியிடம் பரிசு வாங்கினேன்! - சுட்டி கணேசன்

ந்தக் காலத்தில் அரசு ஊழியர் பென்ஷனை ரிப்பன் பில்டிங்குக்குச் சென்றுதான் வாங்க வேண்டும். எங்கள் வீட்டில் நான்கு குழந்தைகள் என்பதால் ஒவ்வொரு மாதமும் ஒருவர் பாட்டியுடன் துணைக்குச் செல்வோம். பாட்டியுடன் வேலை செய்தவர்கள் வீடுகளில் மூன்று, நான்கு நாட்கள் தங்குவோம். அவர்கள் நன்றாக உபசரிப்பார்கள். திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். அதனால் பாட்டியுடன் செல்வதற்குப் போட்டியாக இருக்கும்.

ராயப்பேட்டை சன்னதித் தெருவில் அணில் பத்திரிகை அலுவலகம் இருந்தது. உள்ளே சென்றேன். நிறைய பேர் பேப்பரை மடித்துக்கொண்டிருந்தார்கள். அணில் அண்ணாவைப் பார்க்க வேண்டும் என்றேன். காத்திருக்கச் சொன்னார்கள். புதுசா வரப் போகிற ‘ஜகதலப் பிரதாபனின் கதை’ அந்த பேப்பரில் இருந்தது. நானும் பேப்பர் மடிக்கிறேன் என்றேன். எப்படி மடிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்கள். கதை படிக்கும் ஆவலில் மடிக்கும்போதே யாருக்கும் தெரியாமல் இரண்டு தாள்களை எடுத்துக்கொண்டேன். அணில் அண்ணா வந்தார். நான் படித்த விஷயங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டேன். ஒரு பெட்டியில் இருந்த புத்தகங்களை எடுத்துக்கொள்ளச் சொன்னார். என்னிடம் இல்லாத புத்தகங்களை அள்ளிக்கொண்டேன்.

இன்னும் வெளிவராத ஜகதலப் பிரதாபனின் கதையை இரவில் படித்து, மறுநாள் என் நண்பர்களிடம் சொன்னேன். கதை பிரமாதம் என்று எல்லாரும் பாராட்டினார்கள். ஒரு வாரத்தில் பத்திரிகையில் அதே கதை வெளிவந்தது. அதைப் பார்த்த நண்பர்கள், இது நம்ம கணேசன் எழுதிய கதை மாதிரியே இருக்கே என்று ஆச்சரியப்பட்டார்கள்!

ண்பன் ஒருவன் அவன் வீட்டில் இருந்த சந்தனக் கட்டையை உடைத்துவிட்டான். வீட்டுக்குத் தெரிந்தால் திட்டுவார்கள் என்று பயந்துகொண்டு, சந்தனக்கட்டையுடன் பள்ளிக்கு வந்தான். அதை வாங்கிக் பார்த்துக்கொண்டிருந்தபோது, இன்னொரு நண்பன் அது என்ன என்று கேட்டான். “யார் கிட்டேயும் சொல்லாதே… சந்தனக் கட்டை. நம்ம ஸ்கூல் பின்னாடி இருக்கிற காட்டிலிருந்து ஒடிச்சிக்கிட்டு வந்தேன்” என்று விளையாட்டாகச் சொன்னேன். அவன் மூலம் பள்ளி முழுவதும் இந்தத் தகவல் பரவிவிட்டது!

முதலில் மாணவர்கள் காட்டுக்குள் சென்று சந்தனமரத்தை தேடிவிட்டு வந்தார்கள். பிறகு ஆசிரியர்கள் சென்றார்கள். சந்தனமரம் இல்லை என்று திரும்பிவந்தார்கள். இந்தத் தவறான தகவலை யார் பரப்பியது என்று விசாரித்தார்கள். இறுதியில் நான் தலைமை ஆசிரியர் அறைக்கு அழைக்கப்பட்டேன். என்னை நன்றாகக் கவனித்து அனுப்பி வைத்தார் தலைமை ஆசிரியர்!

ருமுறை வானொலி நிலையத்துக்கு ‘சிறுவர் சோலை’ நிகழ்ச்சிக்காக எங்கள் குடும்பத்தினர் சென்றோம். ஒரு பாடல், ஒரு கதை, பொது அறிவு என்று அரை மணிநேர நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு எங்கள் குடும்பத்தினர் மேல் எல்லாருக்கும் மதிப்பு அதிகமாகிவிட்டது. பலரும் என்னிடம் வந்து, வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்க, சிபாரிசு செய்யச் சொன்னார்கள். என்னால் சிபாரிசு எல்லாம் செய்ய இயலாது என்றாலும் பெருமையாக இருந்தது.

என் நண்பன் வானொலி நிலையம் எப்படி இருக்கும், திரை இசைப் பாடல்களை யார் பாடுவார்கள் என்றெல்லாம் கேட்டான். பாடுவதற்காகத் தினமும் சிவாஜி கணேசன், கே.ஆர்.விஜயா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஜெய்சங்கர், ஜெயசித்ரா, நாகேஷ் போன்றவர்கள் எல்லாம் வருவார்கள். நாங்கள் சென்றபோது, சிவாஜி கணேசன் மஞ்சள் சட்டையில் வந்திருந்தார் என்று சொல்லிவிட்டேன்! அதை உண்மை என்று நம்பி அவன் பள்ளி முழுவதும் பரப்பிவிட்டான். அதன் மூலம் சில அப்பாவிகள் என் நண்பர்களாகக் கிடைத்தார்கள்!

திரைப்படங்கள், புத்தகங்களில் வரும் கதாபாத்திரங்களைப் பார்த்து என் பெயரையும் அவ்வப்போது மாற்றிக்கொள்வேன். அப்படித்தான் ஒருமுறை ‘மிஸ்டர் கே’ என்றுதான் என்னைக் கூப்பிட வேண்டும் என்று சொல்லிவிட்டேன். நண்பர்கள் கூப்பிட ஆரம்பித்து, பிறகு பள்ளி முழுவதும் அப்படியே கூப்பிட ஆரம்பித்துவிட்டனர். எனக்கே கணேசன் என்றால் திரும்பிப் பார்க்கத் தோன்றாது, மிஸ்டர் கே என்றால் சட்டென்று தலை திரும்பிவிடும்.

குப்பில் ஏதாவது பிரச்சினை என்றால், அதைச் சரிசெய்ய என்னைத்தான் அழைப்பார்கள். பல் விழும் வயது. விழுந்த பல்லை, வானத்துக்குத் தெரியாமல் புதைத்துவிட்டு, அந்தப் பெண்ணையோ பையனையோ வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும். என்னிடம் ராயல் சைக்கிள் இருந்ததால், வீட்டில் விடும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. பல் விழுந்தவர்களுக்கு அன்று விடுமுறை. அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்லும் எனக்கும் விடுமுறை! சில நேரம் யாருக்குமே பல் விழாது. அப்போது எனக்கு விடுமுறை போடும் எண்ணம் வந்தால், யாருக்குப் பல் ஆடிக்கொண்டிருக்கிறது என்று கேட்பேன். யாராவது கை தூக்குவார்கள். அவர்கள் பல்லை வேகமாக ஆட்டச் சொல்லி, விழவைத்து, விடுமுறை எடுத்துவிடுவேன்!

ருமுறை பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றதற்காக, காந்தியின் ‘சத்திய சோதனை’ புத்தகம் பரிசாகக் கிடைத்தது. காந்தி அவர் அப்பாவுக்குக் கடிதம் எழுதியதைப் படித்ததும் எனக்கும் ஒரு கடிதம் எழுதத் தோன்றியது. என் நண்பனின் அப்பாவிடம் சொல்லி, ஆங்கிலத்தில் எழுதச் சொன்னேன். அதில், ‘அப்பா, இனிமேல் நீங்கள் சொல்வது போல ஒழுங்காகப் படிக்கிறேன். குறிப்பாக ஆங்கிலத்தை நன்றாகப் படித்துப் பெரியவனாவேன். பெரியவர்கள் சொல்வதைக் கேட்பேன்’ என்றெல்லாம் நான் சொல்லச் சொல்ல, எழுதிக்கொண்டிருந்த நண்பனின் அப்பாவுக்குக் கண்ணீர் பெருகிவிட்டது! எவ்வளவு நல்ல நண்பன் உனக்குக் கிடைத்திருக்கிறான் என்று தன் மகனிடம் பெருமையாகச் சொன்னார்! அந்தக் கடிதத்தை என் அப்பாவிடம் கொடுத்தேன். அவருக்குத்தான் என்னைப் பற்றித் தெரியுமே, கிழித்து எறிந்துவிட்டார்.

ருமுறை ‘கிராமமா, நகரமா?’ என்கிற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. புதிதாகச் சேர்ந்த மாணவன் ஒருவன் பாரதியார் வேடம் போட்டு, ஏற்ற இறக்கத்துடன் உணர்வை வெளிப்படுத்தி, மிக அழகாகப் பேசினான். அவனுக்குத்தான் முதல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். கிராமமே சிறந்தது என்று நான் பேசும்போது, நேரு இப்படிச் சொன்னார், காந்தி அப்படிச் சொன்னார் என்று படித்தவற்றை எல்லாம் எடுத்துவிட்டேன்! நேரு, காந்தியை மீறி வேறு யாருக்கும் பரிசு கொடுப்பார்களா என்ன? இந்தப் பரிசு ஏனோ என்னைச் சிந்திக்க வைத்துவிட்டது. நன்றாகப் பேசிய மாணவனிடம் என் வருத்தத்தைச் சொல்லிவிட்டு, இனிமேல் நீ கலந்துகொள்ளும் போட்டியில் நான் கலந்துகொள்ள மாட்டேன், உனக்குக் குறிப்புகளை எழுதிக் கொடுக்கிறேன் என்றேன். அன்று முதல் அவன் என் நண்பனாகிவிட்டான்.

ரில் சுதந்திர தின விளையாட்டுப் போட்டி நடத்தினார்கள். எல்லாப் போட்டிகளிலும் என் பெயரைச் சேர்த்துவிட்டார் பக்கத்து வீட்டு அண்ணன். நானும் ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிட்டேன். நடிகர் சிவாஜி கணேசன் பரிசளிக்க வந்தார். அவருடன் போட்டோ எடுக்க எங்கள் வீட்டில் எல்லாருக்கும் ஆர்வம் என்பதால், நான் ஒரு போட்டியில் பரிசைப் பெற்றேன். மற்ற போட்டிகளில் மற்றவர்களைப் பரிசு வாங்க வைத்தேன். எங்கள் வீட்டினரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!

எழுத்தாளர் சுட்டி கணேசன்


னிக்கிழமை என்சிசி வகுப்பு. 21 மாணவர்கள், 4 ஆசிரியர்களுக்கு மணிகண்ட விலாஸில் 25 பூரி செட், 21 சாதா தோசை, 4 மசால் தோசை வாங்கிவந்து கொடுக்க வேண்டும். பார்சல் கட்டி முடிப்பதற்குள் நான் ஒரு செட் பூரி மசால் சாப்பிட்டுவிடுவேன். மாதம் ஒருமுறை பணம் கொடுக்கும்போது, எனக்கு ஒரு காபி இலவசமாகக் கிடைக்கும். இதுதான் என்னுடைய நாட்டு நலப்பணி!

‘நாட்டை முன்னேற்றுவது எப்படி?’ என்கிற தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டி. கலந்துகொண்டேனே தவிர, என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. கரும்பலகையைப் பார்த்தேன். அதில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்ட 20 அம்ச கொள்கைகளை விவரித்து எழுதப்படிருந்தது. அவற்றை வைத்து கட்டுரை எழுதி முடித்தேன். எல்லாக் கட்டுரைகளையும் மேலோட்டமாகப் படித்துக்கொண்டே வந்த ஆசிரியர், என் கட்டுரையை முழுவதுமாகப் படித்தார். ஆச்சரியப்பட்டார். தலைமை ஆசிரியரிடம் என்னை அழைத்துச் சென்று, கட்டுரையைக் காட்டினார். அவரும் படித்துவிட்டுப் பாராட்டினார். ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று என் கட்டுரையைப் படித்துக் காட்டச் சொன்னார். எனக்கு ஜிவ்வென்று வானில் பறப்பது போலிருந்தது!

கட்டுரையாளர், பத்திரிகையாளர், எழுத்தாளர்.

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x