Last Updated : 16 May, 2022 12:51 PM

 

Published : 16 May 2022 12:51 PM
Last Updated : 16 May 2022 12:51 PM

புத்தரின் பிறந்தநாள்: அங்குலிமாலா கதை - மருதன்

ஒரு நாள் கௌதம புத்தர் கோசல நாட்டுக்குச் சென்றிருந்தார். அவரை மகிழ்ச்சியோடும் மரியாதையோடும் அங்குள்ள மக்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர். "நீங்கள் எங்கள் மண்ணில் கால் பதித்தது நாங்கள் செய்த பாக்கியம். உங்கள் உபதேசங்களைக் கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். இங்கே எங்கு வேண்டுமானாலும் நீங்கள் பயணம் செய்யலாம். அங்குலிமாலாவிடம் மட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். அவனுக்கு அருகில் மட்டும் போய்விடாதீர்கள்.”

"அது யார் அங்குலிமாலா?” என்று கேட்டார் புத்தர். "ஐயோ, அவன் பெயரைச் சொல்லும்போதே எங்கள் உடல் நடுங்குகிறது. அவன் ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன். இங்குள்ள அடர்த்தியான காட்டில் அவன் வசித்து வருகிறான். விலங்குகள்கூட அவனைக் கண்டால் அஞ்சி ஓடிவிடும். அவனிடம் மாட்டிக்கொண்டால் கையில் உள்ள அனைத்தையும் பிடுங்கிக்கொண்டுவிடுவான். பல நேரம் ஆளையே கொன்றுவிடுவான். அவனை ஒருவராலும் இதுவரை பிடிக்க முடியவில்லை.”

"ஓ... ஆனால், என்னிடம் இருந்து திருடுவதற்கு எதுவும் இருக்காதே" என்று புன்னகை செய்தார் புத்தர். "ஐயோ, அப்படிச் சொல்லாதீர்கள்! நீங்கள் புறாவைப் போல் சாதுவாக இருக்கிறீர்கள். அங்குலிமாலா உங்களை அப்படியே கடித்து விழுங்கிவிடுவான்!”

அப்படியானால் அந்த அங்குலிமாலாவை நான் பார்த்தே தீரவேண்டும் என்று எவ்வளவு தடுத்தும் கேட்காமல் கிளம்பிவிட்டார் புத்தர். அந்தக் காடு கும்மிருட்டாக இருந்தது. புத்தர் தொடர்ந்து நடந்துசென்றார். அப்போது ஒரு முரட்டுத்தனமான கை புத்தரின் தோளை அழுத்தமாகப் பிடித்தது. "யார் நீ? என்ன தைரியம் இருந்தால் என் காட்டில் இப்படித் தனியாக வருவாய்? நான் யாரென்று தெரியுமா உனக்கு?”

"தெரியுமே, அங்குலிமாலாதானே நீங்கள்? உங்களைப் பார்க்கதான் நான் கோசலை நாட்டுக்கே வந்தேன். என்னிடம் விலை மதிக்கமுடியாத ஒரு பொருள் இருக்கிறது. அதை உங்களுக்குக் கொடுத்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன்" என்றார் புத்தர்.
"ஹா! நீ என்ன கொடுப்பது? உன்னிடம் இருப்பதைப் பிடுங்கிக்கொண்டு உன்னைக் கொன்றுபோடுகிறேன் பார்!”

"அங்குலிமாலா, கவனம். என்னிடம் இருப்பதை நீங்கள் எடுத்துக்கொண்டால், அதற்குப் பிறகு என்னை மட்டுமல்ல ஒருவரையும் உங்களால் கொல்ல முடியாமல் போய்விடும். என்னிடம் இருப்பது உங்களிடம் வந்தால் பிறகு எவரிடமும் எதையும் நீங்கள் பறிக்க முடியாது. மேலும், இதுவரை நீங்கள் சேர்த்து வைத்திருந்தது அனைத்தும் காணாமல் போய்விடும். நீங்களும் என்னைப் போல் மாறிவிடுவீர்கள். பரவாயில்லை என்றால் என்னிடம் இருப்பதை நீங்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்."

உயர்த்திய வாளுடன் நெருங்கிய அங்குலிமாலாவைப் பார்த்து, புத்தர் புன்னகை செய்தார். இதோ எடுத்துக்கொள் என்று தன்னிடமிருந்த அன்பை எடுத்து அவருக்கு அளித்தார். பிறகு என்ன? கோசல நாடே ஆச்சரியப்படும் அளவுக்கு அங்குலிமாலா ஒரு நல்ல மனிதராக மட்டுமல்லாமல் ஒரு பௌத்தத் துறவியாகவும் மாறினார்.

இந்தப் புகழ்பெற்ற புத்தர் கதையை ஆராய்ந்து பார்த்தபோது இன்னொரு புதிய கதை கிடைத்தது. அந்தக் காலத்து மக்களுக்கு இருள் என்றால் பயம். காடு என்றால் பயம். காட்டில் இரவு நேரத்தில் பலவிதமான பிசாசுகளும் பேய்களும் சுற்றிக்கொண்டிருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். கொஞ்சம் இருட்டினால்கூடப் போதும், ஒருவரும் வெளியில் வரமாட்டார்கள். எங்காவது ஒரு தவளை கத்தினால்கூட, ஐயோ பூதம் என்று வீட்டுக்குள் ஓடிவிடுவார்கள்.

மக்களின் அறியாமையைப் போக்க விரும்பிய புத்தர் நல்ல வெளிச்சத்தில் மக்களைக் காட்டுக்கு அழைத்துச் சென்று காட்டினார். நீங்கள் இதுவரை காட்டைப் பார்த்ததில்லை என்பதால் காடு பற்றிப் பல கதைகளை உருவாக்கி, அவற்றை நம்பிக்கொண்டிருக்கிறீர்கள். இதோ இதுதான் நீங்கள் பயந்த காடு. மனிதர்கள் ஊரில் வசிப்பதுபோல் விலங்குகள் இங்கே வசிக்கின்றன. மனிதர்களைப் போலவே விலங்குகளும் உயிர்கள்தாம். அநாவசியமாக அவை நம்மைத் தாக்குவதில்லை.
நீங்களும் விலங்குகளைத் தாக்காமல் அவர்களோடு நட்போடு இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். காடு மட்டுமல்ல, எதைப் பற்றியெல்லாம் உங்களுக்கு பயம் ஏற்படுகிறதோ அதைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள். பயம் பறந்துவிடும்!
ஆக, புத்தர் செய்ததெல்லாம் அறிவைக் கொண்டு பயத்தை விரட்டியதுதான். இதுதான் ஒரு கதையாகப் பின்னர் மாற்றப்பட்டது. உண்மையில் அங்குலிமாலா என்பது காட்டில் உள்ள வழிப்பறிக் கொள்ளையனின் பெயர் அல்ல. அந்தக் காடுதான் அங்குலிமாலா!

இருங்கள், இத்துடன் முடியவில்லை. இந்தக் கதைக்குள் இன்னொரு கதையும் இருக்கிறது. புத்தர் குறிப்பிட்ட காடு என்பது விலங்குகள் வசிக்கும் காடு அல்ல. நம் எல்லோருக்குள்ளும் ஒரு காடு இருக்கிறது. அது நம்மை அச்சுறுத்துகிறது. அது நம் வளர்ச்சியைத் தடுக்கிறது. மனிதர்களுக்கு இடையில் பகையை ஏற்படுத்துகிறது. மனிதர்களை அழிக்கவும் செய்கிறது. அந்தக் காடு என்ன தெரியுமா? கோபம். அங்குலிமாலா என்பது நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் கோபத்தின் பெயர். அன்பைக் கொண்டு அந்தக் கோபத்தை எப்படி வெல்வது என்று புத்தர் கற்றுக்கொடுத்தார். அதுதான் இந்தக் கதை.

முதலில் பார்த்தது எளிமையான ஒரு கதை. இரண்டாவது கதை, கதையைத் தாண்டி நம்மைச் சிந்திக்க வைக்கிறது. மூன்றாவது, ஒரு கதைக்குள் ஒளிந்திருக்கும் அர்த்தங்களைப் புரிந்துகொள்ள நம்மைத் தூண்டிவிடுகிறது. ஒவ்வொரு கதைக்குள்ளும் இப்படிப் பல கதைகள் இருக்கும். பல அர்த்தங்கள் இருக்கும். நாம் புதிதாகச் சிந்திக்கும்போது கதைகளும் புதிதாக மாறிவிடுகின்றன. அதனால்தான் எல்லாவற்றையும் ஆழமாக ஆராய்ந்து பாருங்கள் என்றார் புத்தர்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

ஓவியம்: லலிதா

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x