Published : 06 Apr 2022 08:15 PM
Last Updated : 06 Apr 2022 08:15 PM
முதல் திரைப்படத்திலேயே தன்னுடைய நடிப்புக்காகப் பாராட்டுகளைக் குவித்து வருவதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் சூர்யா காசிபட்லா. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான 14 வயது சூர்யா, சமீபத்தில் வெளியான ஜல்சா திரைப்படத்தில் வித்யா பாலனின் மகனாக 'ஆயுஷ்' என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
செரிப்ரல் பால்சி எனும் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஆயுஷ். சூர்யாவும் அதே பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர். நான்கு வயதிலிருந்தே நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது. டெக்ஸாஸ் பள்ளியில் மாறுவேடப் போட்டிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார். பாட்டு கற்றுக்கொண்டார். கிரிக்கெட் கற்றுக்கொண்டார். மொழிகளை அறிந்துகொள்வதிலும் ஆர்வம் அதிகம். தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மொழிகள் இவருக்கு நன்றாகத் தெரியும். ஸ்பானிய மொழியைக் கற்று வருகிறார். கன்னடம் புரிந்துகொள்ள முடியும்.
தன்னுடைய குறைபாட்டை ஒரு குறைபாடாகவே எடுத்துக்கொள்ள மாட்டார் சூர்யா. அதனால்தான் அவரால் பல விஷயங்களை ஆர்வத்துடன் கற்றுக்கொள்ள முடிகிறது. இன்ஸ்டாகிராமிலும் யூடியூப் சானலிலும் இவரை ஏராளமானவர்கள் பின்தொடர்கிறார்கள். பாட்டு, கிரிக்கெட், கம்ப்யூட்டர் புரோகிராமிங் குறித்தெல்லாம் விரிவாக வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார்.
தற்போது ஒரு நடிகராகவும் பிரபலமாகிவிட்ட சூர்யா, “எனக்கு நடிப்பதில் எந்தச் சிரமமும் ஏற்படவில்லை. ஏனென்றால் ஆயுஷும் என்னைப் போல் செரிப்ரல் பால்சியால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம்தான். திரைப்படத்தில் ஒரு காட்சி உருவாக எவ்வளவு பேரின் பங்களிப்பு தேவைப்படுகிறது என்பதை இந்தத் திரைப்படம் மூலம் அறிந்துகொண்டேன். என்னைப் போல் செரிப்ரல் பால்சியால் பாதிக்கப்பட்டவர்களும் திரைப்படத் துறையில் நுழைய முடியும் என்ற நம்பிக்கை என் மூலம் ஏற்பட்டால் மகிழ்ச்சி” என்கிறார் சூர்யா.
“சின்ன வயதிலேயே செரிப்ரல் பால்சி என்பது தெரிந்துவிட்டது. நாங்கள் சூர்யாவுக்கு மகிழ்ச்சியான, இயல்பான வாழ்க்கையைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். புத்திசாலி சூர்யா எதையும் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வான். அவனின் ஆர்வத்துக்கு எப்போதும் துணை நின்றிருக்கிறோம். செரிப்ரல் பால்சி குழந்தைகளைப் பெற்றவர்களிடம் இருக்க வேண்டியது நம்பிக்கை மட்டுமே” என்கிறார் சூர்யாவின் அம்மா சுனிதா.
ஜல்சா திரைப்படத்துக்குப் பிறகு தன்னுடைய யூடியூப் சானலுக்கு சந்தாதாரர்கள் அதிகரித்திருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சியில் இருக்கும் சூர்யா, எதிர்காலத்தில் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராமராக வேண்டும் என்று விரும்புகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT