Published : 23 Feb 2022 11:23 AM
Last Updated : 23 Feb 2022 11:23 AM

என் கிராமத்தின் கதை: உகாண்டா நாட்டுக் கதை

கதை: சி.ஆர்.தாஸ், தமிழில் - உதயசங்கர்

நான் மாகுலு. என் கிராமம் அழகானது. கிராம மக்கள் பல வேலைகளையும் செய்து வாழ்கின்றனர். எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். அவன் பெயர் ஒக்கோட்டா. என் அம்மாவின் பெயர் ரூரூங்கா. அப்பா இறந்துவிட்டார். எனக்கு ஓர் அண்ணனும் உண்டு. நான் என் கிராமத்துக் கதையைத்தானே சொல்ல வந்தேன்? என்னைப் பற்றிப் பேசிவிட்டேனே!

குளங்கள், ஆறுகள், மலைகள் நிறைந்த நாடு உகாண்டா.

பலவிதமான வேலைகளைச் செய்து நாங்கள் இங்கே வாழ்க்கை நடத்துகிறோம். என்னைப் போன்ற குழந்தைகளுக்கு ஏராளமான விளையாட்டுகள் இருக்கின்றன. ஆண் குழந்தைகளுக்குத் தலையை மொட்டையடித்து விடுவதுதான் வழக்கம். பெண் குழந்தைகளுக்குக் கொஞ்சம் தலைமுடிதான் இருக்கும். ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் சேர்ந்து விளையாடுவோம்.

கிராமத்துக் குழந்தைகளான எங்களுக்கு விளையாட பொம்மைகள் கிடைக்காது. தாழம்பூக்களை நார்நாராகக் கிழித்து நீளமான கொடிகளை உண்டாக்குவோம். அந்தக் கொடிகளை வைத்து நானும் ஒக்கோட்டாவும் பந்துகளைச் செய்வோம். பந்துகள் மட்டுமல்ல, சிறிய பொம்மைகளைச் செய்யவும் நாங்கள் கற்றுக்கொண்டிருக்கிறோம். மூங்கில் குச்சிகளையும் ஓலையையும் வைத்து கார், பஸ் ஆகியவற்றைச் செய்யவும் எங்களுக்குத் தெரியும். எங்கள் பாட்டி மண்பானைகளைச் செய்வார். பாட்டிக்கு நான் மண்பானைகள் செய்ய மண்ணைக் குழைத்துக் கொடுப்பேன். என் பாட்டி என் தலையில் தட்டிச் சொல்வார், “பேத்தி நல்ல குழந்தை.”

எங்கள் பாட்டு உங்களுக்குப் புரியாது. ஆனாலும், பாட்டின் தாளத்தை நீங்கள் விரும்புவீர்கள்.

எங்கள் தாத்தா மரநாற்காலிகளைச் செய்வார். அம்மாவுக்கு விவசாய வேலை. ஒக்கோட்டாவின் அப்பா பாடகர். அவர் நல்ல மேளக்கருவிகளைச் செய்வார். மேளத்தை வாசித்துக்கொண்டே பாடுவார்.

‘எக்கேக்கியோ எக்கேக்கியோ...

இக்கேக்கியோ இக்கேக்கியோ...’

முன்பு ஒரு முறை நானும் என் தோழி காக்கோளாவும் ஒக்கோட்டாவும் சேர்ந்து காட்டுக்குப் போனோம். காட்டைப் பார்க்கப் பார்க்க அவ்வளவு அழகு. மரங்களும் செடிகளும் நன்றாக வளர்ந்து பச்சைப்பசேலென்று இருந்தன. காட்டில் ஏராளமான பறவைகளையும் வண்ணத்துப்பூச்சிகளையும் விலங்குகளையும் நாங்கள் பார்த்துக்கொண்டே நடந்தோம். ஒரு குளத்தின் கரைக்குச் சென்றோம். குளக்கரையின் அந்தப் பக்கம் மேய்ந்துகொண்டிருந்த காட்டு விலங்குகளைப் பார்த்து ஆச்சரியப்பட்டோம். காட்டெருமை, வரிக்குதிரை, மான், ஒட்டகச்சிவிங்கி, காண்டாமிருகம் எல்லாம் தெரிந்தன.

சட்டென மேகம் கறுத்து மழை பொழியத் தொடங்கியது. எங்கள் கையில் குடை இல்லை. நாங்கள் காட்டுவாழையின் இலைகளைப் பறித்துத் தலைக்கு மேல் பிடித்துக்கொண்டோம். அப்போது எங்களுக்குப் பயம் தோன்றியது. நாங்கள் திரும்பி நடந்தோம். இல்லையில்லை ஓடினோம்.

மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும் என்று எங்கள் ஊர்க்காரர்கள் சொல்வார்கள். மழையில் நனைந்துகொண்டு வீட்டுக்குப் போனால் நிச்சயம் திட்டு கிடைக்கும்.

என் பள்ளிக்கூடத்தைப் பற்றி நான் சொல்லவில்லையே... பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் மிகவும் குறைவு. எங்கள் மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. அதனால், நாங்கள் ஆங்கிலம் கற்கிறோம். நகரத்திலுள்ள பள்ளியில் மதியத்துக்குக் கஞ்சி கொடுப்பார்கள். ஆனால், இங்கே நாங்கள் மதியம் பட்டினிதான். சீக்கிரம் மதிய உணவு எங்களுக்கும் கிடைக்கும் என்று ஆசிரியர்கள் சொல்கிறார்கள். கஞ்சி குடித்தால் பசியிருக்காது. பசியில்லையென்றால் நன்றாக விளையாடலாம்.

ஒரு நாள் நாங்கள் மறுபடியும் காட்டைப் பார்க்கப் போயிருந்தோம். அங்கே மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுவதைக் கண்டோம். பறவைகள் எல்லாம் அழுதுகொண்டே பறந்தன. எங்களுக்குக் கஷ்டமாகிவிட்டது. ஆப்பிரிக்காவின் முத்து உகாண்டா என்று ஆசிரியர் சொல்லியிருந்தார். உகாண்டாவில் ஏராளமான மரங்கள் உண்டு. காடுகள் உண்டு. மழையும் உண்டு. மரங்களை வெட்டினால் பருவநிலையில் கோளாறு ஏற்படுமென்று ஆசிரியர் சொல்லியிருந்தார். மழை பெய்யாது. மரங்கள் இருக்காது. நானும் காக்கோளாவும் ஒக்கோட்டாவும் பள்ளிக்கூடத்துக்கு ஓடினோம்.

அங்கே ஆசிரியரைப் பார்த்தோம். ஆசிரியர் கிராமத்து மக்களையெல்லாம் அழைத்துக்கொண்டு காட்டுக்கு வந்தார். மரம் வெட்டுபவர்களைக் கிராம மக்கள் விரட்டியடித்தனர். கொஞ்சம் மரங்கள் வெட்டப்பட்டு வீழ்ந்திருந்தன. ஆசிரியர் சொன்னார்: “மரம் வெட்டுவது சரியல்ல. புதர்க்காட்டைத் தீ வைத்து எரிப்பதும் தவறு. நாம் நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். அதனால் நாம் மரங்களை நட வேண்டும்.”

நாங்களும் கிராமத்து மக்களும் சேர்ந்து குழி தோண்டி மரக்கன்றுகளை நட்டு வைத்தோம். நீர் ஊற்றினோம். அது பெரிதாக வளர்ந்தது. நல்ல காடாக மாறியது. பறவைகள் வந்தன. வண்ணத்துப் பூச்சிகள் வந்தன. விலங்குகள் வந்தன. வானம் கறுத்து மழை பெய்தது. எங்களின் கனவுகள் பூத்தன. வண்ணமும் வாசமும் உள்ள பூக்கள் உகாண்டாவிலுள்ள குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் புதிய வாழ்வின் பாடல்களாயின. மனத்துக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தருகிற அந்த நல்ல காலம் எங்களுக்குத் திரும்பவும் கிடைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x