Published : 22 Dec 2021 11:14 AM
Last Updated : 22 Dec 2021 11:14 AM
நிலாவிலிருந்து தெறித்த பாறை ஒன்று பூமியைத் துரத்திவருகிறது என்கிறார் அரிசோனா பல்கலைக்கழக கோள் ஆய்வாளர் விஷ்ணு. Kamo‘oalewa என்று பெயரிடப்பட்டுள்ள 2016HO3 விண்பாறை நிலாவிலிருந்து வந்தது என்று கண்டுபிடித்துள்ளனர்.
தொலைநோக்கி மூலம் நிலாவைக் காணும்போது அம்மைத் தழும்பு போன்ற கிண்ணக்குழிகள் தென்படும். இவை செயலிழந்த எரிமலைகள் என்று நினைத்தனர். ரவா உப்புமா கிளறும்போது அங்கும் இங்கும் கொப்புளம் போன்று அடியில் உள்ள நீர் ஆவியாகி வெடிக்கும். அப்போது உப்புமா மீது சிறு சிறு கிண்ணம் போன்ற குழிகள் ஏற்படும். இப்படித்தான் இளம் நிலா குழம்பு போன்று இருந்தது என்றும், அதன் பின்னர் குளிர்ந்து இறுகியபோது தரைப் பரப்பில் கிண்ணக்குழிகள் வெடித்தன என்றும் கருதியிருந்தனர்.
காலப்போக்கில் நிலாவின் மீது தென்படும் லட்சக்கணக்கான கிண்ணக் குழிகள் விண்பாறைகள் மோதி ஏற்பட்டவை என்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கும் இங்கும் எரிமலைகள் வெடித்திருந்தாலும், பெரும்பாலும் விண்பாறை மோதலில் உருவானவைதாம் இந்தக் கிண்ணக்குழிகள். சூரியனும் கோள்களும் உருவானபோது சிறிதும் பெரிதுமாகப் பல கோடி விண்பாறைகளும் உருவாயின.
தொடக்கக் காலத்தில் இந்த விண்பாறைகள் கோள்கள், நிலாக்களின் மீது மோதியபடி இருந்தன. இதன் தொடர்ச்சியாகக் கிண்ணக்குழிகள் உருவாயின. காற்று, மழை போன்றவற்றின் காரணமாகப் பூமி போன்ற கோள்களின் மீது இந்தத் தடயங்கள் பெரும்பாலும் மறைந்துவிட்டன. குறிப்பிடத் தகுந்த அளவு வளிமண்டலம் இல்லாத நிலாக்கள், புதன் கோள் ஆகியவற்றில் கிண்ணங்கள் நிலைத்துவிட்டன.
மோதும் விண்பாறையின் கோணம், வேகம் முதலியவை சரியாக அமைந்தால் சில நேரம் நிலாவின் துணுக்கு பிளந்து விண்ணில் தெறிக்கக்கூடும். அவ்வாறு தெறித்த துணுக்குகள் சில பூமியில் வந்து விழும். அப்படிப் பூமியில் விழுந்த சில சந்திர விண்கற்கள் அண்டார்டிகாவில் உள்ளன. 1982 இல் ஜான் ஷட் என்கிற ஆய்வாளர் சந்திர விண்கல்லைக் கண்டுபிடித்தார். இதுவரை சுமார் 371 சந்திர விண்கற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
ஹவாய் தீவில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் 2016 ஏப்ரல் 27 அன்று விண்பாறைகளைத் தேடிக்கொண்டிருந்தபோது, பூமியோடு சேர்ந்து சூரியனைச் சுற்றும் விண்பொருள் ஒன்றைக் கண்டனர்.
ஹவாய் மொழியில் ‘தள்ளாடும் வான்பொருள்’ என்கிற பொருளைத் தரும் இந்தப் பாறை 41 மீட்டர் விட்டம் கொண்டது. பூமியைப் போலவே இந்தப் பொருளும் சூரியனை 366 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவருகிறது. பூமியைச் சுற்றி வந்துகொண்டே சூரியனையும் நிலா வலம்வருவது போல, இந்த விண்பாறையும் பூமியைச் சுற்றியபடியே சூரியனைச் சுற்றிவருகிறது.
இதேபோல் பூமியைச் சுற்றியபடியே சூரியனைச் சுற்றிவரும் மேலும் நான்கு விண்பாறைகளை இதுவரை கண்டுபிடித்துள்ளனர். நீரில் நீந்திச் செல்லும் தாய் வாத்தை, பின்தொடர்ந்து செல்லும் குட்டி வாத்துகள் போல விண்பாறைகள் சுற்றிவருகின்றன.
டிஸ்கவரி தொலைநோக்கிகள் கொண்டு விஷ்ணு ஆய்வு மேற்கொண்டார். விண்பாறையில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி கூடுதல் அகச்சிவப்பு அலை நீளங்களில் உள்ளதைக் கண்டார்கள். இந்த விண்பாறையிலிருந்து வெளிப்படும் அகச்சிவப்பு கதிர்களை ஆராய்ந்தபோது சிலிக்கேட் பொருள்கள் செறிவாக இருப்பதைக் காட்டியது.
பூமிக்கு அருகே உள்ள விண்பாறைகள் எதுவும் இது போன்று இருக்கவில்லை. ஆனால், அப்போலோ விண்கலத்தில் நிலாவுக்குச் சென்று திரும்பிய வீரர்கள் எடுத்துவந்த சிலிக்கேட் பாறைகளுடன் இது ஒத்துப் போனது. எனவே, நிலாவில் ஏற்பட்ட மோதலில் விண்ணில் தெறித்த துண்டுதான் இந்தப் பாறை என்று கருதுகிறார்கள்.
பூமி சூரியனைச் சுற்றுகிறது. பூமியோடு நிலாவும் இந்தப் பாறையும் சூரியனைச் சுற்றுகின்றன. பூமியின் ஈர்ப்புப் புலத்தில் உள்ள நிலா துணைக்கோள். சூரியனின் ஈர்ப்புப் புலத்தில் உள்ள இந்தப் பாறையை அரை துணைக்கோள் என்கிறார்கள்.
இந்த விண்பாறையை அணுகி, அதன் மாதிரிகளை எடுத்துவர சீனா திட்டமிட்டுள்ளது. 2024இல் ஏவப்படும் இந்த விண்கலம், பாறை மாதிரிகளுடன் 2025இல் திரும்பி வரும்.
கட்டுரையாளர், விஞ்ஞானி
தொடர்புக்கு: tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT