Published : 13 Oct 2021 05:48 AM
Last Updated : 13 Oct 2021 05:48 AM
பெர்முடா முக்கோணம் பற்றிய ரகசியங்களை எனக்குச் சொல்ல முடியுமா, டிங்கு?
- நே. சான்டோ, தோன்போஸ்கோ பள்ளி, திருப்பத்தூர்.
நடக்காத ஒன்று, நடந்தது போல் பரப்பப்பட்டு, நம்பப்பட்டு வரும் விஷயங்களில் பெர்முடா முக்கோணமும் ஒன்று. 70 ஆண்டுகளுக்கு முன்பு பெர்முடா முக்கோணம் பகுதிக்குச் சென்ற ஒரு கப்பலைக் காணவில்லை. அதற்குப் பிறகு அந்தப் பகுதியைக் கடந்த ஒரு விமானத்தைக் காணவில்லை. இவை பத்திரிகைகளில் செய்திகளாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தின. அதன் பிறகு அமெரிக்கப் பத்திரிகைகள் பெர்முடா முக்கோணத்தை வைத்து, சுவாரசியமாகச் செய்திகளை வெளியிட ஆரம்பித்துவிட்டன. அவற்றை மக்களும் உண்மை என்று நம்பி ஆர்வம் காட்டினார்கள். காணாமல் போன கப்பல், விமானம் பற்றிச் செய்திகள் வந்தன. அவை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட செய்திகள் வெளிவரவேயில்லை. இப்படித்தான் பெர்முடா முக்கோணம் அமானுஷ்யம் நிறைந்ததாக மாற்றப்பட்டது. அமெரிக்கர்கள் மட்டுமின்றி, உலகமே இந்தக் கட்டுக்கதைகளை நம்ப ஆரம்பித்துவிட்டது.
லாரன்ஸ் டேவிட் குஷே என்ற ஆய்வாளர், 1975ஆம் பெர்முடா முக்கோணம் குறித்து ஒரு புத்தகம் எழுதி, அதுவரை வெளியிடப்பட்ட செய்திகளில் உண்மை இல்லை என்பதை நிரூபித்தார். அப்படியும்கூட மக்கள் மனத்திலிருந்து பெர்முடா முக்கோணம் குறித்த அபிப்ராயங்களை மாற்ற முடியவில்லை. பெர்முடா முக்கோணம் பகுதியில் சூறாவளி, பேரலை போன்ற இயற்கைப் பேரிடர்கள் சில நிகழ்ந்திருக்கின்றன. கடல் பகுதியில் இதே போன்று பல இடங்கள் இருக்கின்றன. அவற்றுடன் ஒப்பிடும்போது, பெர்முடா முக்கோணம் பகுதியில் மட்டும் அதிகப்படியாக எதுவும் நடந்துவிடவில்லை, சான்டோ.
விக்கல் வருவது ஏன், டிங்கு?
- அ.ரா. அன்புமதி, 8-ம் வகுப்பு, லிட்ரசி மிஷன் மேல்நிலைப் பள்ளி, சோமனூர், கோவை.
நாம் சுவாசிக்கும்போது காற்று உள்ளே செல்கிறது. அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் விரியும். உடனே குரல்நாண்கள் திறந்து, காற்று தடையின்றி நுரையீரலுக்குள் நுழைகிறது. இது இயல்பாக நடக்கக்கூடிய சுவாசம். சில நேரம் மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்துக்குத் தொந்தரவு கொடுத்தால், திடீரென்று சுருங்க ஆரம்பிக்கும். அப்போது குரல்நாண்களால் சரியாகத் திறக்க இயலாது. அப்போது நாம் சுவாசிக்கும் காற்று, குரல்நாண்களின் குறுகிய இடைவெளிக்குள் சிரமப்பட்டு, நுரையீரலுக்குள் செல்லும். இதனால் தொண்டையில் ஒருவித ஒலி உண்டாகிறது. இதைத்தான் விக்கல் என்கிறோம். வேகமாகச் சாப்பிடுவது, சூடாகச் சாப்பிடுவது, போதுமான அளவு தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் விக்கல் வருகிறது. பொதுவாகச் சில நிமிடங்கள்தான் விக்கல் நீடிக்கும். அதிக நேரம் நீடித்தால் மருத்துவரைப் பார்க்க வேண்டும், அன்புமதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT