Published : 24 Feb 2016 02:51 PM
Last Updated : 24 Feb 2016 02:51 PM

வாண்டு பாண்டு: ஜில்லுன்னு ஒரு தலைக்கவசம்!

வாண்டு: ஹாய் பாண்டு, குட்மார்னிங். என்னபா லீவு நாள்லகூட உன்னை பாக்கவே முடியமாட்டேங்குது?

பாண்டு: வெயில் காலமே தொடங்கலை. அதுக்குள்ள மண்டையைப் பிளக்குற மாதிரி வெயில் அடிக்குது. வெயிலுக்குப் பயந்துதான் வீட்டுலேயே இருந்துட்டேன்.

வாண்டு: ஆமா பாண்டு, நீ சொல்றதும் சரிதான். ஞாயிற்றுக்கிழமை காலையில அப்பாகூட கடைக்குப் போனேன். வெயில் தாங்க முடியலை. அப்பா வேற ஹெல்மெட் போட்டுட்டு வந்தாரா? அதை கழற்றப்ப ஒரே வியர்வை கொட்டுச்சு.

பாண்டு: இவ்வளவு வெயில் அடிச்சா எப்படி வெளியே வர முடியும்? அதைத் தெரிஞ்சுக்கிட்டே நீ என்கிட்ட கேக்குற. அப்புறம், வெயில்ல உங்கப்பா ஹெல்மெட் போட்டுட்டு ஓட்டுன்னப்ப வியர்வையா கொட்டுச்சுன்னு சொன்னியே. அதுக்கு ஒரு தீர்வை நம்மள மாதிரி ஒரு சின்னப் பையன் கண்டுபிடிச்சுட்டாரு.

வாண்டு: ஹெல்மெட்டுல அப்படி என்ன தீர்வு? அந்தச் சின்னப் பையன் யாரு?

பாண்டு: இலங்கையில நுவரெலியாவுல தருமசீலன்னு ஒரு பையன் 10-ம் வகுப்பு படிக்கிறாரு. இவரு குளிரூட்டப்பட்ட ஹெல்மெட்டைக் கண்டுபிடிச்சிருக்காரு வாண்டு.

வாண்டு: இந்த ஹெல்மெட்டை போட்டுக்கிட்டா ஜில்லுன்னு இருக்குமா?

பாண்டு: குளிரூட்டப்பட்ட ஹெல்மெட்டுன்னா ஜில்லுன்னு இருக்காம எப்படி இருக்கும்? ஜில்லுன்னுதான் இருக்கும்.

வாண்டு: அது சரி, ஹெல்மெட் எப்படி ஜில்லுன்னு ஆகுது? அதைப் பத்தி நீ எதுவும் சொல்லலையே?

பாண்டு: ஹெல்மெட்டை வெளியில போறப்பதானே தலையில மாட்டிக்கிட்டுப் போறோம். ஹெல்மெட்டு மேலே சூரிய மின் உற்பத்தி கருவியை அவரு பொருத்தியிருக்காரு. அந்தக் கருவியோட ஹெல்மெட்டுக்குள்ள ஒரு குட்டி விசிறியையும் இணைச்சுருக்காரு. வெயில் அந்தக் கருவி மேலே படும்போது சூரிய ஒளி மின் சக்தியா மாறி, உள்ளே இருக்குற விசிறியைச் சுத்த வைக்குமாம். அப்படி விசிறி சுத்துறப்ப ஹெல்மெட்க்குள்ள ஜில்லுன்னு காத்து வருமாம். இந்தக் கண்டுபிடிப்பைக் கொழும்புல இருக்குற பல்கலைக்கழகமும் அங்கீகரிச்சிருக்கு.

வாண்டு: அடடா, ரொம்ப நல்ல கண்டுபிடிப்பா இருக்கே.

பாண்டு: ஆமா வாண்டு. இது மாதிரி இன்னும் நிறைய ஐடியாக்களை தர்மசீலன் வைச்சுருக்காராம். அடுத்ததா மனிதனால் இயங்கக்கூடிய ரோபோ, எரிபொருள் இல்லாமல் இயங்கக்கூடிய மோட்டார் வண்டியை செய்யப் போறாராம். நம்ம அப்துல் கலாம் மாதிரி பெரிய விஞ்ஞானியா வரணும்னு தர்மசீலனுக்கு ரொம்ப ஆசையாம்.

வாண்டு: நல்லா வரட்டும். பெரிய விஞ்ஞானியா வர்றதுக்குத் தர்மசீலனை நாமும் வாழ்த்துவோம். சரி, அன்னைக்குப் பேசிக்கிட்டு இருக்குறப்ப ஏதோ புதிய விலங்கோட பாறைப் படிவத்தைக் கண்டுபிடிச்சிருக்கதா உங்க சயின்ஸ் டீச்சர் சொன்னதா சொன்னியே. அதைப் பத்தி நீ எதுவும் சொல்லலையே?

பாண்டு: அதுவா? இப்போதான் அந்தப் பாறைப் படிவத்தைக் கண்டுபிடிச்சிருக்காங்களாம். ஆனா, அது கரெக்டா எந்த விலங்கோட பாறைப் படிவம்னு தெரியலையாம். அதே சமயம் அது பாலூட்டி உயிரினம்ணு டீச்சர் சொன்னாங்க.

வாண்டு: பாலூட்டி உயிரினமா? இதைப் பத்தி இன்னும் தகவல் இருந்தா சொல்லேன் பாண்டு.

பாண்டு: எங்க டீச்சர் எங்கக்கிட்ட சொன்னதை உன்கிட்ட அப்படியே சொல்றேன். ஆப்ரிக்காவுல சவான்னான்ற புல்வெளிகளில ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி பாலூட்டி உயிரினம் மேய்ந்து திரிஞ்சுச்சாம். அதோட பாறைப் படிவம் ஒன்றை கென்யாவில் கண்டுபிடிச்சுருக்காங்க. அந்தப் பாறைப் படிவத்தை வைச்சு அது என்ன விலங்குன்னு விஞ்ஞானிகள் வரையவும் செஞ்சிருக்காங்க.

வாண்டு: ஓ... அந்தப் பாறைப் படிவத்தை வைச்சு படமே வரைஞ்சுட்டாங்களா?

பாண்டு: ஆமா வாண்டு. படிவத்தை வைச்சு ‘ரசிங்கோரிக்ஸ் அடோபோக்ரானியன்’ என்ற பாலூட்டியின் மாதிரி உருவப் படத்தை வரைஞ்சிருக்காங்க. பார்க்குறதுக்கு ஆடு, இல்லை மான் மாதிரி தெரியுது. மற்ற பாலூட்டிகள் போல இல்லாம இதோட மூக்கு ரொம்ப வித்தியாசமா இருக்கு. இதைப் பத்தி விஞ்ஞானிகள் மேலும் ஆராயப் போறதா சொல்லியிருக்காங்க. அதுக்கப்புறம் ஏதாவது தகவல் கூடுதலா தெரிய வரலாம்.

வாண்டு: நல்ல புதுத் தகவலைத்தான் உங்க டீச்சர் சொல்லியிருக்காங்க. இதை என்னோட ஃப்ரெண்ட்ஸ்கிட்ட நான் சொல்றேன்.

பாண்டு: சரி வாண்டு. இன்னிக்கு டியூஷன்ல பரீட்சைன்னு சொல்லியிருக்காங்க. கொஞ்சம் முன்னாலயே போக வேண்டியிருக்கு. அப்போ நான் கிளம்புட்டுமா?

வாண்டு: சரி பாண்டு. நானும் டீயூஷனுக்குக் கிளம்பணும். டாட்டா...

பாண்டு: டாட்டா..., பை... பை...

- மிது கார்த்தி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x