Published : 14 Jul 2021 03:13 AM
Last Updated : 14 Jul 2021 03:13 AM
இலைகள் உதிரும் குளிர்காலம், ஆறு மாதங்களுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் இளவேனில் காலம் எனப் பருவக் காலங்களில் சுழற்சி உள்ளது. அதே மாதிரி இரவில் குளிர்ச்சி, பகலில் வெக்கை, நிமிடத்துக்கு 60 - 100 நாடித்துடிப்பு என்று பல்வேறு இயற்கைச் சுழற்சிகள் உள்ளன.
பெரும் எரிமலை வெடித்துச் சீறுதல், கடல் அடிப்பகுதி விரியும் வேகம் கூடுதல், புவியின் காந்தப் புலம் மாறுதல், டைனோசார்கள் போன்ற உயிரினங்கள் திடீரென்று அழிந்து போதல் போன்ற புவியியல் பேரிடர் நிகழ்வுகளின் பின்புலத்திலும் 275 லட்சம் ஆண்டுகள் இடைவெளியில் இயற்கைச் சுழற்சி உள்ளது என்று சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
எரிமலையும் தீவுகள் உருவாக்கமும்
வெங்காயம் அடுக்கடுக்காக இருப்பது மாதிரி, நிலப்பரப்பும் கடலும் மேலோடு, மேல் மூடகம், மூடகம், புற உள்ளகம், அக உள்ளகம் என்று பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. பூமியின் மேலோடு சில்லு சில்லாக உடைந்து அதன் அடியில் உள்ள குழம்பு நிலையில் உள்ள மேல் மூடகத்தின் மீது மிதக்கிறது. மேல் மூடகத்தில் உருவாகும் எரிமலை அவ்வப்போது சீறி வெடிக்கும். அப்போது மிதக்கும் மேலோட்டுப் பகுதியில் எரிமலை உயரும். அடியில் உள்ள கற்குழம்பு மேலே பிதுங்கி வந்து மலையாகத் தோற்றம் பெறும். அப்படித்தான் சுமார் 650 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்த எரிமலை வெடித்துச் சீறி, அதன் காரணமாக இந்தியக் கண்டப் பகுதியில் தக்காணப் பீடபூமி (Deccan Plateau) உருவானது.
அதன் பின்னர் மேலோடு மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகர 600–450 லட்சம் ஆண்டுகள் முன்னர் சீறி வெடித்து எழுந்த எரிமலை முகட்டில் லட்சத்தீவுகள், மாலத்தீவுகள், சாகோஸ் தீவுக்கூட்டம் உருவாகின. 450 –100 லட்சம் ஆண்டுகள் இந்த எரிமலை உறக்கத்தில் இருந்தது. இதே எரிமலை மறுபடி வெடித்து, சுமார் 80–100 லட்சம் ஆண்டுகள் முன்னர் மொரீஷியஸ் தீவுகளை உருவாக்கியது. கடந்த இருபது லட்சம் ஆண்டுகளில் இந்த எரிமலை வெடித்து ரியூனியன், ரோட்ரிக்ஸ் தீவுகள் உருவாயின. இந்தத் தீவுக்கூட்டத்தின் தென்முனையில் உள்ள பிட்டன் டி லா ஃபோர்னேஸ் தீவில் கடந்த பிப்ரவரி 2019இல் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது.
ரியூனியன் எரிமலை உட்பட ஐஸ்லாந்து, செயின்ட் ஹெலினா, கேனரி, மடிரா, அஃபர்-கிழக்கு ஆப்பிரிக்கா, ஹவாய், கலபகோஸ், யெல்லோஸ்டோன் ஆகிய எட்டு எரிமலைப் பகுதிகளில் 29 கடல் மட்ட மாறுதல்கள், 12 கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து போதல், 9 நிலம் சார்ந்த விலங்குகள் அழிதல் என்று கடந்த 26 கோடி ஆண்டுகளில் மொத்தம் 89 பெரும் நிலவியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
நியூயார்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மைக்கேல் ஆர். ராம்பினோ, கென் கால்டீரா, யுஹோங் ஜு ஆகியோர் இந்த 89 நிகழ்வுகளின் காலத்தைச் சரியாக அளவிட்டு ஆய்வு செய்தார்கள். ரேடியோ-ஐசோடோபிக் காலக் கணிப்பு முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக மிகத் துல்லியமாக இந்த நிலவியல் நிகழ்வுகளின் காலக்கட்டத்தை அறிய முடிந்தது.
பல்வேறு அலைகள் கலந்து இருந்தாலும் அதில் உள்ள ஒவ்வோர் அலையையும் தனித்தனியே பிரித்துக் காண ஃபூரியர் பகுப்பாய்வு உதவுகிறது. 89 நிலவியல் நிகழ்வுகளையும் இவ்வாறே ஃபூரியர் பகுப்பாய்வு செய்து பார்த்தபோது, சுமார் 275 லட்சம் ஆண்டுகள் இடைவெளி கொண்ட சுழற்சியை இனம் காண முடிந்தது. ஆண்டுக்கு ஒரு முறை வசந்தம் என்பது போல 275 லட்சம் ஆண்டுகள் இடைவெளியில் பூமியின் நிலவியலில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
கடந்த 26 கோடி ஆண்டுகளில் நிகழ்ந்த 89 பேரிடர் நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்த்தபோது அவை பெரும்பாலும் பத்துத் தொகுப்புகளாக இருந்தன. ஒவ்வொரு தொகுப்புக்கும் இடையே சுமார் 275 லட்சம் ஆண்டுகள் இடைவெளி இருந்தது. கடந்த பேரிடர் தொகுப்பு சுமார் 70 லட்சம் ஆண்டுகள் முன்னர் நிகழ்ந்தது. எனவே, அடுத்த பெரும் பேரிடர் தொகுப்பு சுமார் இரண்டு கோடி ஆண்டுகள் கடந்த பின்னர்தான் நிகழும் வாய்ப்பு உள்ளது எனவும் இந்த ஆய்வு கூறுகிறது.
கட்டுரையாளர், விஞ்ஞானி.
தொடர்புக்கு: tvv@123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT