Published : 07 Jul 2021 03:12 AM
Last Updated : 07 Jul 2021 03:12 AM

டிங்குவிடம் கேளுங்கள்: கறுப்பு எறும்புகள் ஏன் கடிப்பதில்லை?

சிவப்பு எறும்புகள் கடிக்கின்றன. கறுப்பு எறும்புகள் கடிப்பதில்லையே ஏன், டிங்கு?

- அ.ரா. அன்புமதி, 8-ம் வகுப்பு, லிட்ரசி மிசன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சோமனூர், கோவை.

எறும்புகளில் ஏராளமான வகைகள் இருக்கின்றன. பெரும்பாலான எறும்புகள் கடிக்கக்கூடியவைதான். ஆனால், அவை கடிக்கும்போது வெளிவிடும் ஃபார்மிக் அமிலத்தின் அளவைப் பொருத்தே நமக்கு வலியும் வீக்கமும் ஏற்படுகின்றன. சிவப்பு எறும்புகள் அதிக அளவில் ஃபார்மிக் அமிலத்தை வெளியிடுகின்றன, அதனால் வலி, எரிச்சல், வீக்கம் எல்லாம் அதிகமாக இருக்கின்றன. கறுப்பு எறும்புகள் குறைவான அளவே ஃபார்மிக் அமிலத்தை வெளியிடுவதால், நமக்குப் பாதிப்பு ஏற்படுவதில்லை, அன்புமதி.

பூமி சுற்றுவதை நம்மால் ஏன் உணர முடியவில்லை, டிங்கு?

- எஸ். ஜெ. கவின், 6-ம் வகுப்பு, கிறைஸ்ட் தி கிங் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்.

பூமியுடன் சேர்ந்து நாமும் சுற்றிக்கொண்டிருப்பதால் நம்மால் பூமி சுற்றுவதை உணர முடியவில்லை, கவின். பூமி மணிக்குச் சுமார் 1,675 கி.மீ. நிலையான வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. விமானத்தில் சீரான வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது அதன் வேகத்தை நம்மால் உணர முடியாது. திடீரென்று விமானத்தின் வேகம் அதிகரிக்கும்போதோ குறையும்போதோதான் மாற்றத்தை உணர முடியும். அதே மாதிரிதான் பூமி சுற்றும் வேகத்தில் மாற்றம் நிகழ்ந்தால் மட்டுமே நம்மால் அதை உணர முடியும். அதற்கான வாய்ப்பு இல்லை. ஒருவேளை பூமி சுற்றும் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டால், விளைவுகள் மிக மோசமானவையாக இருக்கும்.

பாம்பு பழி வாங்கும் என்கிறார்களே அது உண்மையா, டிங்கு?

- ச. சார்வி, 1-ம் வகுப்பு, அமலா மெட்ரிக். பள்ளி, தருமபுரி.

பாம்புகளுக்குப் பொதுவாகப் பார்க்கும் திறன் சிறப்பாக இருப்பதில்லை. தமக்குத் தீங்கு செய்தவர்களை நினைவில் வைத்து, அவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் எல்லாம் பாம்புகள் ஈடுபடுவதில்லை. பாம்புகளைக் கொல்ல வேண்டாம் என்பதற்காக யாராவது பழிவாங்கும் என்று பயமுறுத்தி வைத்திருக்கலாம், சார்வி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x