Last Updated : 23 Dec, 2015 10:39 AM

 

Published : 23 Dec 2015 10:39 AM
Last Updated : 23 Dec 2015 10:39 AM

சித்திரக்கதை: சென்னை வனத்தில் வெள்ளம்

‘சென்னை வனம்’ என்ற ஒரு அடர்ந்த காடு இருந்தது. அந்தக் காட்டில் நிறைய விலங்குகள் வாழ்ந்து வந்தன. அவை தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்தன. ஒரு நாள் அந்தக் காட்டில் பெருங்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல மூலிகை மரங்கள் முறிந்து விழுந்தன. காட்டில் வாழும் உயிரினங்கள் ஆபத்தில் சிக்கிக்கொண்டன.

விலங்குகள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியே செல்ல முடியாமல் தவித்தன. பறவைகள் பழங்களையோ புழுக்களையோ தேடிச்செல்ல முடியாமல் பசியால் வாடின. காடு மெல்ல மெல்ல வெள்ளத்தில் மூழ்கிப்போனது. பல வருடங்கள் பழமையான மரம் ஒன்று முறிந்து ஆற்றில் சாய்ந்தது. மரத்தில் இருந்த இரண்டு குரங்குகள் தண்ணீரில் குதித்துத் தத்தளித்துக் கொண்டிருந்தன.

அடி மரத்தைச் சுற்றியிருந்த மூன்று மலைப்பாம்புகள் அதைக் கவனித்தன. உடனே அவை விரைந்து செயல்பட்டன. மூத்த பாம்பு ‘நீலன்’ முழுங்கனை அழைத்தது. “ முழுங்கா! சீக்கிரம் இறங்கி வா. நீயென் வாலை உன் வாயால் கவ்விக்கொள். ‘விழுங்கன்’ உன் வாலைக் கவ்விக் கொள்ளட்டும். நீளமான கயிறுப்போல் நம்மை ஆக்கிக்கொண்டால் வெள்ளத்தில் இறங்கி குரங்குகளைக் காப்பாற்றலாம்” என்றது நீலன்.

மற்ற பாம்புகளும் அதன்படி செய்து ஆற்றில் விழுந்த குரங்குகளைக் காப்பாற்றின.

ஆற்றின் வேறொரு வளைவான பாதையில் வயதான ஒரு ஓநாய் அடித்துச் செல்லப்படுவதை ‘கழுத்தன்’ ஒட்டகச்சிவிங்கி பார்த்துவிட்டது. மொத்த உடம்பும் தண்ணீரில் மூழ்கிப்போனதைப் பொருட்படுத்தாமல் ஒட்டகச்சிவிங்கி ஆற்று வெள்ளத்தில் இறங்கியது. நீளமான கழுத்தை நீட்டி ஓநாயை கவ்வி யிழுத்துக்கொண்டு கரை திரும்பியது.

இடைவிடாமல் பெய்த மழை ஐந்து நாட்களில் படிப்படியாகக் குறைந்தது. காட்டு உயிரினங்கள் மீட்புப்பணிகளைத் தொடங்கின.

சின்ன விமானங்களைப் போல விருட்டெனக் கிளம்பிய பருந்துகள் நாலா பக்கமும் பிரிந்து சென்றன. சிறு உயிரினங்களை முதுகில் சுமந்துகொண்டு மேட்டுப்பகுதிக்குத் திரும்பின பருந்துகள். ‘காட்டு டாக்டர் கருப்பன்’ கரடி காயங்களுக்குத் தேவையான மூலிகை மருந்துகளை தயார் நிலையில் வைத்திருந்தது. சிறிய மருந்துப் பொட்டலங்கள் புறாக்களின் கால்களில் கட்டப்பட்டுக் காட்டின் எல்லா இடங்களுக்கும் அனுப்பப்பட்டன.

கொம்பன் எருமை, சிகப்பன் சிறுத்தை, குட்டன் குரங்கு, வெள்ளையன் முயல், முள்ளன் முள்ளம்பன்றி, சுள்ளான் எலி என எல்லா விலங்குகளும் நிவாரணப் பணிகளைச் செய்துகொண்டிருந்தன.

அப்போது சற்று தூரத்தில் புதருக்குப் பின்னால் இரண்டு புள்ளிமான்கள் பதுங்கியிருந்தன. அங்கு, யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது.

கடும் பசியிலிருந்த ஒரு புலி, மான்கள் மீது பாய்ந்தது. சற்றும் தாமதிக்காத இரு மான்களும் தாவிக்குதித்து ஓடத் தொடங்கின. ஆனால், அதிலொரு பெண் மானால் அதிக தூரம் பாய்ந்தோட முடியவில்லை. பின்தொடர்ந்து வந்த புலி அதன் முதுகில் பாய்ந்து கவ்வியது. தூரத்திலிருந்து திரும்பிப் பார்த்த ஆண் மான் பதறிப்போனது.

பொறுக்க முடியாத வலியால் துடித்த பெண் மான் கால்களை அகற்றி வைத்து நின்றது. அதைப் பார்த்த புலி பயந்தே விட்டது. நடக்கப்போவது என்னவென்று புரிந்துகொண்ட புலி, சட்டெனத் தாக்குதலை நிறுத்தியது.

அடுத்த ஐந்து நிமிடம் காடு முழுக்க பேரமைதி-

பெண் மான் ஒரு அழகான மான்குட்டியை ஈன்றது. புலி தாக்கியதால் ஏற்பட்ட காயத்தாலும், அதிக களைப்போடு இருந்ததாலும் பெண் மான் சரிந்து கீழே விழுந்தது. அதற்குள் தொலைவில் இருந்த மற்ற விலங்குகள் அங்கு வந்து சேர்ந்தன. மான்குட்டியைப் பார்த்த மகிழ்ச்சியில் புலியின் பசி அடங்கிப்போனது.

கூட்டத்திலிருந்து வெளியேறிய குட்டன் குரங்கு, மான்குட்டியைத் தூக்கிக் கொஞ்சியது. மான்குட்டிக்கு “மன்னு!” என்று பெயர் சூட்டியது. சற்று நேரத்தில் மான்குட்டியின் அப்பா மான் அங்கு வந்து சேர்ந்தது. மயக்கத்திலிருந்து தெளிந்த அம்மா மானும் எழுந்து நின்றது.

விலங்குகளின் கால்களுக்கு இடையில் புகுந்து ஓடிய ‘வெள்ளையன்’முயல் ஒரு பெரிய வாழை இலையோடு திரும்பியது.

குட்டன் குரங்கு மான்குட்டிக்கு அருகில் இருந்த ரத்தத்தில் தனது வாலை முக்கி எடுத்தது. காட்டு உயிரினங்கள் ஆவலோடு அதைக் கவனித்துக்கொண்டிருந்தன.

உடனே அந்தக் குரங்கு தனது வாலைப் பிடித்து ‘காட்டுயிர் காப்போம்’ என்று வாழை இலையில் எழுதித் தூக்கிக் காண்பித்தது. அங்கு நடப்பதைப் பார்த்த மற்ற விலங்குகள் சந்தோசக் குரல் எழுப்பின.

அருகிலிருந்த மரத்தில் உட்கார்ந்திருந்த சிகப்பு மூக்கழகி ‘செல்வி’ கிளி அழகான குரலில் ஒரு பாட்டுப் பாடியது. மறுபடியும் காட்டில் நிவாரணப் பணிகள் தொடர்ந்தன.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x