Published : 23 Jun 2021 03:11 AM
Last Updated : 23 Jun 2021 03:11 AM

டிங்குவிடம் கேளுங்கள்: தண்டவாளங்கள் ஏன் துருப்பிடிப்பதில்லை?

இரும்பு துருப்பிடிக்கும். ஆனால், ரயில் தண்டவாளங்கள் மட்டும் துருப்பிடிப்பதில்லையே ஏன், டிங்கு?

- தா. லோகேஸ்வரி, 11-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, பிராட்டியூர், திருச்சி.

ரயில் தண்டவாளங்களை இரும்பால் மட்டும் செய்வதில்லை, லோகேஸ்வரி. பல உலோகங்களைச் சேர்த்து, உயர்தரமான கலப்பு உலோகத்தில்தான் (Alloy) தண்டவாளங்களை உருவாக்கு கிறார்கள். கலப்பு உலோகங்கள் வெயில், மழை போன்றவற்றால் எளிதில் பாதிக்கப்படுவதில்லை. மாங்கனீஸ் கலந்த (Mangalloy) உலோகம் சிராய்ப்புத் தன்மையைக் குறைக்கும் விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.

விண்வெளி வீரர்கள் என்ன சாப்பிடுவார்கள், டிங்கு?

- எஸ்.ஜெ. கவின், 6-ம் வகுப்பு, கிறைஸ்ட் தி கிங் மேல்நிலைப் பள்ளி, கும்பகோணம்.

நீண்ட நாட்கள் கெட்டுப்போகாத உணவு வகைகள் பதப்படுத்தப்பட்டுப் பைகளில் அடைக்கப்பட்டிருக்கும். காபி, தேநீர் போன்ற பானங்கள் உறைய வைக்கப்பட்டு, பைகளில் அடைக்கப்பட்டிருக்கும். இவற்றைத் தேவையானபோது சூடுபடுத்திச் சாப்பிடுவார்கள். சிப்ஸ் போன்ற துகள்களாக இருக்கும் உணவு வகைகளுக்கு அனுமதியில்லை. ஏனென்றால், அவை பறக்க ஆரம்பித்து, கண்களைப் பதம் பார்த்துவிடலாம். சுத்தம் செய்வதும் கடினம். ஆரம்பக் கால விண்வெளி வீரர்கள் மிகக் குறைவான, எடை குறைந்த, வைட்டமின்கள் அதிகமான உணவுப் பொருட்களைத்தான் கொண்டு சென்றார்கள். தற்போது ரொட்டி, பழங்கள், பானங்கள் எனப் பலவற்றையும் எடுத்துச் செல்கிறார்கள், கவின்.

கை நகங்களைவிடக் கால் நகங்கள் மெதுவாக வளர்வது ஏன், டிங்கு?

- ஜி. ஸ்ரீ சுவாமிநாதன், 2-ம் வகுப்பு, நவதிஷா மாண்டிசோரி பள்ளி, வேளச்சேரி, சென்னை.

கை விரல் நகங்கள் கால் விரல் நகங்களைவிட மூன்று மடங்கு வேகமாக வளரக்கூடியவை. இதற்கு இதுதான் காரணம் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. கை விரல் நகங்கள் இதயத்துக்கு அருகில் இருப்பதால் ரத்த விநியோகம் அதிகமாக இருக்கிறது. கால் விரல் நகங்கள் தொலைவில் இருப்பதால் ரத்த விநியோகமும் ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்துகளும் குறைவாகப் பெறுவதாகச் சொல்கிறார்கள், சுவாமிநாதன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x