Last Updated : 02 Jun, 2021 03:12 AM

2  

Published : 02 Jun 2021 03:12 AM
Last Updated : 02 Jun 2021 03:12 AM

கதை: முன் கசந்து பின் இனிக்கும் புதையல்!

அவசர அவசரமாகச் சிட்டுக்குருவிகளின் கூட்டத்தைக் கூட்டியது பருந்து. அந்தக் கூட்டத்தில் ஆறு சிட்டுக்குருவிகள் இருந்தன. பருந்துக்கு இப்போது வயதாகிவிட்டதால் தான் இறப்பதற்குள் அந்தப் புதையல் பற்றிய ரகசியத்தை, சிட்டுக்குருவிகளிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தது.

ஆறு சிட்டுக்குருவிகளும் உற்ற நண்பர்கள். காட்டின் நன்மைக்காகவும் ஒற்றுமைக்காகவும் உழைக்கும் பொதுநலக் குருவிகள். அதனால்தான் சிட்டுக்குருவிகளை அழைத்திருந்தது பருந்து.

“உங்களிடம் ஒரு ரகசியம் சொல்லத்தான் அழைத்தேன்” என்றது பருந்து.

“ரகசியமா!” என்று சிட்டுக்குருவிகள் வாய்பிளந்தன.

“புதையல் பற்றிய ரகசியம்.”

“என்னது புதையலா!” என்று மீண்டும் சிட்டுக்குருவிகள் ஆச்சரியமடைந்தன.

“புதையல் பற்றி இந்தக் காட்டில் சில பறவைகளுக்கு மட்டுமே தெரியும். அவற்றில் சில இப்போது உயிரோடு இல்லை. எனக்கும் வயதாகிவிட்டது. இனி என்னால் அந்தப் புதையலைக் கண்டறிய முடியாது. இனி நீங்கள்தான் அதைத் தேட வேண்டும்” என்றது பருந்து.

“என்ன புதையல்? எங்கிருக்கிறது?” என்று வரிசையாகக் கேள்விகளைக் கேட்டன சிட்டுக் குருவிகள்.

“அந்தப் புதையலலைக் கண்டறிவது எளிதல்ல. இவ்வளவு ஆண்டுகள் தேடி இப்பொழுதுதான் புதையலைக் கண்டறிவதற்கான முதல் குறிப்பைத் தேடி எடுத்தேன்” என்று சொன்ன பருந்து, அந்தக் குறிப்பைக் கொடுத்தது.

அதனை முதலில் அமர்ந்திருந்த சிட்டுக்குருவி வாங்கிக்கொண்டது. அந்தக் குறிப்பில் என்ன இருக்கிறது என்பதை அறிய மற்ற சிட்டுக்குருவிகள் ஆவலாக இருந்தன.

“கருவேலம் பட்டையில் இட்டம் முள்ளால் எழுதப் பட்ட இந்தக் குறிப்பே புதையலை அடை வதற்கான முதல் வழி” என்றது பருந்து.

“இந்த ஒரு குறிப்பை வைத்துக்கொண்டு எப்படிப் புதையலை அடைய முடியும்?” என்று கேட்டது ஒரு சிட்டுக்குருவி.

“நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். இந்தக் குறிப்பின்படி தேடிச் சென்றால் இன்னொரு குறிப்பு கிடைக்கும். அதை வைத்துக்கொண்டு தொடர்ந்து பயணித்தால் இறுதியில் புதையல் இருக்கும் இடத்தை அடையலாம்” என்றது பருந்து.

“அவ்வளவு எளிதாக அடைய முடியாது போல...” என்றது இன்னொரு சிட்டுக்குருவி.

“ஆமாம், அதனால்தான் அது புதையல். ஒவ்வொரு குறிப்பையும் கவனமாக எடுத்து ஆழ்ந்து சிந்தித்தால் அடுத்த குறிப்பு எங்கு உள்ளது என்பதை அறியலாம்” என்றது பருந்து.

“அப்படியே செய்கிறோம்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடைபெற்று பறந்து சென்றன சிட்டுக்குருவிகள்.

முதல் குறிப்பை வாசித்தது ஒரு சிட்டுக்குருவி. ‘எடுத்துவெச்சாங் கல்லிலிருந்து வடக்கு நோக்கி 108 இறகசைப்பு தொலைவு சென்றால் வலது புறம் உள்ள கறுப்புப் பழ மரத்தில் அடுத்த குறிப்பு உள்ளது’ என்று எழுதியிருந்தது.

உடனே சிட்டுக்குருவிகள் அனைத்தும் காட்டுக்குள் இருக்கும் எடுத்துவெச்சாங் கல்லை நோக்கிப் பறந்து சென்றன. அங்கிருந்து 108 இறகசைப்பு தொலைவு பறந்து சென்று வலது புறம் பார்த்தால் நிறைய மரங்கள் இருந்தன.

கருமை நிறத்தில் உள்ள பழங்களை எல்லாம் பட்டியலிட்டன. இறுதியாக அது நாவல் மரம் என்பதைக் கண்டறிந்தன.

நாவல் மரத்துக்கு உடனே பறந்து சென்று அடுத்த குறிப்பைத் தேடின. மரத்தின் மையப் பகுதியில் இருந்த சிறு பொந்தில் அடுத்த குறிப்பு இருந்தது. அதில், ‘பெரிய விலங்கு கல்லுக்கு அடியில்’ என்று இருந்தது.

“பெரிய விலங்கு கல்லா? அது எங்கிருக்கிறது?” என்றது ஒரு சிட்டுக்குருவி.

“பெரிய விலங்கு என்றால் யானை. அப்படி என்றால் யானை கல்லுக்கடியில்தான் அந்தப் புதையல் இருக்க வேண்டும்” என்று காட்டின் மையத்தில் உள்ள யானை வடிவக் கல்லை நோக்கிப் பறந்தன சிட்டுக்குருவிகள்.

யானை கல்லுக்கடியில் அடுத்த குறிப்புதான் இருந்தது. புதையல் ஒன்றும் இல்லை. யானை கல்லின் மேல் அமர்ந்து கொண்டு குறிப்பை வாசித்தது ஒரு சிட்டுக்குருவி.

‘சூரியன் உதிக்கும் திசைக்கு எதிர்திசையில், 101 சிறகசைப்பு தொலைவில், விலங்கு பெயர் கொண்ட மரத்தில் அடுத்த குறிப்பு’ என்று இருந்தது.

“சூரியன் உதிப்பது கிழக்கில். அப்படி என்றால் மேற்கு திசை நோக்கிச் செல்ல வேண்டும்.”

மரத்தின் பெயர்களைப் பட்டியலிட்டு விலங்கு களோடு ஒப்பிட்டு, இறுதியில் அது புளியமரம் என்று கண்டறிந்தன. புளியமரத்துக்குச் சென்று அடுத்த குறிப்பைத் தேடி எடுத்தன சிட்டுக்குருவிகள்.

‘முன் கசந்து பின் இனிக்கும் மரம். வைகாசியில் சுவைக்கலாம். அகத்தில் அல்ல புறத்தில் உள்ளது தங்கப் புதையல்’ என்று இருந்தது.

இந்தக் குறிப்பைக் கண்டதும் சிட்டுக் குருவி களுக்குத் தலையே சுற்றிவிட்டது. கவனத்தைச் சிதறவிடாமல் ஒவ்வொரு கேள்விக்கும் விடை கண்டறிந்தால் புதையலை அடைந்துவிடலாம் என்று நினைத்தன.

‘முன் கசந்து பின் இனிக்கும் மரம் என்றால் நெல்லிக்காய் மரமாக இருக்குமோ’ என்று முடிவு செய்து, நெல்லி மரத்தில் அமர்ந்தன. ஆனால், அடுத்தடுத்த குறிப்புகளைப் பார்க்கும்போது அது நெல்லி மரமாக இருக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தது.

“வேப்பமரமாக இருக்குமோ?” என்று கேட்டது ஒரு சிட்டுக்குருவி.

“அட! சரியாகச் சொன்னாய். வேப்பங்காய் முன் கசந்து பின் பழம் இனிக்கிறது. வைகாசியில்தான் அதிகமாக பழுக்கத் தொடங்குகிறது. இறுதியாகப் பழம் தங்க நிறத்தில்தானே உள்ளது!” என்றது மற்றொரு சிட்டுக்குருவி.

புதையலைக் காணப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியில் சிட்டுக்குருவிகள் ஆறும் பறந்து சென்று வேப்ப மரத்தில் அமர்ந்தன.

“அகத்தில் அல்ல புறத்தில் என்றால் மண்ணுக்கு வெளியேதான் புதையல் உள்ளது. அப்படி என்றால் இந்தத் தங்க நிற வேப்ப பழங்கள்தான் புதையல்” என்று ஆறு சிட்டுக்குருவிகளும் உற்சாகமாகக் கத்தின.

விதைக்குள் இருக்கும் விருட்சம்தான் புதையல் என்பதை அறிந்துகொண்ட சிட்டுக்குருவிகள், வேப்பம் பழங்களைத் தின்று, காடு முழுவதும் விதைகளைத் தூவின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x