Published : 28 May 2021 03:49 PM
Last Updated : 28 May 2021 03:49 PM
உலகம் முழுவதும் நேற்றைய குழந்தைகளும் இன்றைய குழந்தைகளும் நாளைய குழந்தைகளும் கொண்டாடக்கூடியவர் எழுத்தாளரும், ஓவியருமான எரிக் கார்ல். பல கோடிக்கணக்கான குழந்தைகளின் விருப்பத்துக்குரியவராக இவரை மாற்றிய புத்தகம், ‘தி வெரி ஹங்ரி கேட்டர்பில்லர்’.
படங்களுடன் கூடிய எளிமையான கதை. 1969-ம் ஆண்டு பிரபல பெங்குவின் பட்னம் வெளியீடாக வந்தது. 52 ஆண்டுகளில் 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் 5.5 கோடி புத்தகங்கள் விற்பனையாகியிருக்கின்றன! கதைக்காகவும் படங்களுக்காகவும் பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறது இந்தப் புத்தகம்.
அப்படி என்னதான் இருக்கிறது இந்தப் புத்தகத்தில்? ஞாயிற்றுக்கிழமை முட்டையிலிருந்து வெளிவரும் புழுவுக்கு அளவுக்கு அதிகமான பசி. திங்கள் கிழமை ஓர் ஆப்பிளைச் சாப்பிடுகிறது. செவ்வாய்க்கிழமை இரண்டு பேரிக்காய்களைச் சாப்பிடுகிறது. புதன் கிழமை மூன்று ப்ளம்களைச் சாப்பிடுகிறது. வியாழக்கிழமை நான்கு ஸ்ட்ராபெர்ரிகளைச் சாப்பிடுகிறது. வெள்ளிக்கிழமை ஐந்து ஆரஞ்சுகளைச் சாப்பிடுகிறது.
சனிக்கிழமை ஒரு சாக்லெட் கேக், ஒரு கோன் ஐஸ், ஒரு ஸ்விஸ் சீஸ், ஒரு லாலிபாப், ஒரு கப் கேக், ஒரு தர்பூசணி துண்டு என்று சாப்பிட்டவுடன் வயிற்று வலி வந்துவிடுகிறது. மறுநாள் உருவம் பெரிதான இந்தக் கம்பளிப்புழு, தன்னைச் சுற்றிக் கூட்டைக் கட்டிக்கொள்கிறது. சில நாட்களுக்குப் பிறகு வண்ணத்துப்பூச்சியாக வெளிவருகிறது.
இந்த எளிய கதை குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் ஈர்த்துவிட்டது. ”இந்தக் கதை ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. அதனால்தான் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்” என்றார் எரிக் கார்ல்.
1929ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். 6 வயதில் அம்மாவின் தாய்நாடான ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து, அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தார். ஆர்ட் டைரக்டர் லியோ லியோன்னி மூலம் நியூயார்க் டைம்ஸில் கிராபிக்ஸ் டிசைனராக வேலைக்குச் சேர்ந்தார். கல்வியாளரும் எழுத்தாளருமான பில் மார்டின் ஜூனியர் தன்னுடைய புத்தகத்துக்கு படங்கள் வரைய ஓவியரைக் கேட்டு விளம்பரம் செய்தார். அந்த வாய்ப்பு எரிக் கார்லுக்குக் கிடைத்தது. ‘பிரெளன் பியர், பிரெளன் பியர், வாட் டூ யு சீ’ என்ற புத்தகம் எரிக் கார்லின் ஓவியங்களுடன் 1967ஆம் ஆண்டு வெளிவந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரே கதை எழுதி, படங்கள் வரைந்து ‘தி வெரி ஹங்ரி கேட்டர்பில்லர்’ புத்தகத்தைக் கொண்டு வந்தார்.
”இந்தக் கதையை எழுதியபோது இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அமெரிக்கா முழுவதும் வெகுவேகமாக விற்பனையானது. பிறகு உலக அளவிலும் பல்வேறு மொழிகளில் வெளிவந்து, குழந்தைகளை மகிழ்வித்தது. இதற்கு என் அப்பாவுக்குதான் நான் நன்றி சொல்வேன். அவர்தான் சின்ன சின்ன உயிரினங்கள் மீது என் கவனத்தைக் குவித்து, அவற்றை அறிய வைத்தார். சின்ன உயிரினங்களின் வாழ்க்கை எனக்கு எப்பொழுதும் ஆச்சரியத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த ஆச்சரியங்கள்தான் என் புத்தகங்களாக வெளிவந்தன. குழந்தைகள் என்னிடம் உங்களைப் போலவே நாங்களும் படங்களை கொலாஜ் செய்வோம் என்று சொல்லும்போது, என் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது” என்றார் எரிக் கார்ல்.
இவர் குழந்தைகளுக்காக எழுதிய பல புத்தகங்களும் உலக அளவில் பிரபலமானவை. இதுவரை 17 கோடி புத்தகங்கள் விற்பனையாகியிருக்கின்றன! 91 வயது எரிக் கார்ல் முதுமை காரணமாக மே 23 அன்று மறைந்துவிட்டார். இனி வரக்கூடிய பல்வேறு தலைமுறையினரும் எரிக் கார்லின் புகழைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT