Last Updated : 26 May, 2021 03:12 AM

 

Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM

மாய உலகம்! - என் கதைகளும் என்னைப் பற்றிய கதைகளும்

ஓவியம்: லலிதா

நானே கதை எழுதுபவள். என்னைப் பற்றி வகை, வகையாக எவ்வளவு கதைகள் உலாவிக்கொண்டிருக்கின்றன தெரியுமா? என்ன ஜேன் ஆஸ்டின், இது உண்மையா என்று திகைத்தும், நிஜமாகவே நீ ஐயோ பாவம் ஜேன் ஆஸ்டின் என்று பரிதாபத்தோடும் நண்பர்கள் வந்து விசாரிக்கும்போது திருதிருவென்று விழிக்க மட்டுமே முடியும் என்னால்.

உதாரணத்துக்கு நான் எப்படிக் கதைகள் எழுதினேன் என்பதைப் பற்றிய கதை ஒன்றைச் சொல்கிறேன். நான் இயல்பிலேயே ரொம்பவும் கூச்ச சுபாவம் கொண்டவளாம். யாரைப் பார்த்தாலும் வெட்கம் அப்படியே பொத்துக்கொண்டு வருமாம். எதைக் கேட்டாலும் நாணம். குனிந்த தலை நிமிரவே மாட்டேன். குழந்தை முதல் இப்படித்தானாம். வளர்ந்த பிறகும் அப்படியேதானாம். இந்த அழகில், கதை எழுத வேண்டும் என்னும் கனவு மட்டும் எனக்குள் எப்படியோ நுழைந்துவிட்டது.

எழுத வேண்டும் என்று விருப்பம். ஆனால், எழுத பயம். ஏன்? ஜேன் ஆஸ்டின் நாவல் எழுதுகிறாள் என்று தெரிந்தால் வீட்டிலிருப்பவர்கள் என்ன நினைப்பார்கள்? அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்கள்? அவர்களுடைய அண்டை வீட்டார் என்ன நினைப்பார்கள்? இப்படி அவர் என்ன நினைப்பாரோ இவர் என்ன நினைப்பாரோ என்று பயந்து, பயந்து கூச்சத்திலும் கூச்சக்காரியான நான் ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தேன்.

இருட்டியதும் என் அறைக்குள் சென்று கதவையும் ஜன்னலையும் அடைத்துவிடுவேன். மேஜை முன்னால் அமர்ந்து விளக்கொளியில் பரம ரகசியமாக ஒவ்வொரு சொல்லாக எழுதுவேன். வெளியில் யாராவது நடமாடும் சத்தம் கேட்டாலோ யாராவது கதவை நெருங்கிவருவதுபோல் இருந்தாலோ சட்டென்று எழுதிக்கொண்டிருந்த காகிதங்களை மறைத்து வைத்துவிட்டு, போர்வைக்குள் சுருண்டுகொள்வேன்.

என் அறைக் கதவைத் தொட்டாலே கிரீச் என்று சத்தம் வருமாம். அது அவ்வாறு சத்தமிட வேண்டும் என்பதற்காகவே இன்றுவரை அதை நான் சரி செய்யாமல் வைத்திருக்கிறேனாம். அப்போதுதானே எழுதிக்கொண்டிருப்பதை மறைத்து வைக்க முடியும்?

இப்படிப் பயந்து, பயந்து முழு நாவலையும் எழுதி முடித்த பிறகு என்ன செய்வேன்? இரும்புப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிடுவேன். எடுப்பேன். படிப்பேன். பூட்டிவிடுவேன். என் இயல்பை மாற்றிக்கொள்ள ரொம்ப ரொம்ப அதிக காலம் பிடித்தது. ஒரு நாள் தயங்கித் தயங்கி பதிப்பாளரிடம் கொண்டு சென்று கொடுக்க, என்னது பெண் எழுதியதா என்று தயங்கித் தயங்கி வாங்கி அவர்கள் பதிப்பிக்க, என்னது பெண் எழுதியதா என்று வாசகர்களும் தயங்கித் தயங்கி வாங்கிப் படிக்க… இப்படியாக மெல்ல மெல்ல என் கதை வெளிச்சத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

கேட்டுவிட்டீர்களா? இனி நிஜம் என்னவென்று சொல்கிறேன். எல்லோரையும்போல் ஓடுவேன், ஆடுவேன், பாடுவேன், கத்துவேன். அரட்டை அடிப்பேன். வம்பளப்பேன். ஏதாவது பூகம்பமா என்று நீங்கள் திடுக்கிடும் அளவுக்குச் சிரிப்பேன். ஆண்களோடும் பெண்களோடும் இயல்பாகக் கலந்து பேசுவேன். எல்லோரையும் கூர்ந்து கவனிப்பேன். எல்லாவற்றையும் புரிந்துகொள்ள விரும்புவேன். கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு கனவுகள் காண்பேன். கதை, கவிதை நிறைய படிப்பேன்.

படிக்கும்போது எல்லாக் கதைகளிலும் எல்லாக் கவிதைகளிலும் உலகம் புகழும் எல்லா இலக்கியங்களிலும் ஒரு மாபெரும் ஓட்டை இருப்பதைக் கவனித்தேன். வீதிகளில், பள்ளிகளில், வீடுகளில், பூங்காக்களில், தோட்டங்களில் தினம் தினம் பல விதமான பெண்களைப் பார்க்கிறேன். பெண் இல்லாத ஓரங்குல இடம்கூட இந்த உலகில் இல்லை. எனில் ஏன் அவர்கள் நான் படிக்கும் கதைகளிலும் கவிதைகளிலும் காப்பியங்களிலும் இல்லை? அப்படியே தென்பட்டாலும் அவர்கள் எல்லோரும் ஏன் பொம்மைபோல் ஒரே மாதிரி இருக்கிறார்கள்? ஒரே மாதிரி புன்னகை செய்கிறார்கள்? ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள்?

ஏனென்றால், எல்லாமே ஆண்களால் எழுதப்பட்டவை என்பது புரிந்தது. பெண்கள் எழுதினால் மட்டுமே பெண்களின் கதைகள் வெளியில் வரும் என்பதை உணர்ந்தேன். எழுத ஆரம்பித்தேன். பகல் வெளிச்சத்தில் மேஜையின் முன்பு அமர்ந்து நின்று நிதானமாக எழுதினேன். மாலை நேரத்தில் மரத்தடியில் காலை நீட்டி அமர்ந்து எழுதினேன்.

யார் வந்து கேட்டாலும் தயங்காமல், தடுமாறாமல் சொன்னேன். ஆம், நான் நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவரை எந்த ஆணும் எழுதாத கதையை, இதுவரை எந்த ஆணும் பதிப்பிக்காத கதையை, இதுவரை எந்த ஆணும் (பெண்ணும்கூடத்தான்) படிக்காத கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எதையும் பூட்டி வைக்கவில்லை நான். எழுதி முடித்ததும் நண்பர்களிடம் கொடுத்து எப்படி இருக்கிறது, என்ன நினைக்கிறாய் என்று கேட்பேன். விவாதிப்பேன். விளக்குவேன். இப்படித்தான் ஒவ்வொரு கதையாக எழுதினேன். ஒவ்வொன்றாகப் பதிப்பித்தேன். யாரெல்லாம் வாசிக்கிறார்கள், எப்படி எல்லாம் வாசிக்கிறார்கள், என்னவெல்லாம் விமர்சிக்கிறார்கள் என்று கவனித்தேன். என் கதைகள் மெல்ல மெல்ல மக்களைப் பற்றிக்கொள்வதை உணர்ந்தேன்.

நான் ஓர் எழுத்தாளர். இதைச் சொல்வதில் கூச்சம், அச்சம், வெட்கம் எதுவும் இல்லை எனக்கு. உங்களுக்கும் இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னைப் பற்றிய கதைகளை உதறித் தள்ளிவிட்டு என் கதைகளைப் படியுங்கள். நம்பிக்கையோடு எழுதுங்கள். ஆண்களின் கதைகளால் நிரம்பி வழியும் உலகைப் பெண்களின் கதைகள் கொண்டு சரிசெய்வோம். நம்புங்கள், நாம் விரும்பும் கதைகளை நாம்தான் எழுதியாக வேண்டும்.

சொல்ல மறந்துவிட்டேன். என் வீட்டுக் கதவு சத்தமிடுவதில்லை. சத்தமிட்டுக்கொண்டிருப்பது நான்தான்.

(ஜேன் ஆஸ்டின் புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இவருடைய நாவல்கள் இன்றும் மக்களின் விருப்பத்துக்குரியவையாக இருக்கின்றன. சில நாவல்கள் திரைப்படங்களாகவும் தொலைக்காட்சித் தொடர்களாகவும் எடுக்கப்பட்டு வெற்றிபெற்றுள்ளன.)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x