Published : 26 May 2021 03:12 AM
Last Updated : 26 May 2021 03:12 AM
நம் நாட்டில் கல்வி என்பது இப்போதும் பலருக்கு எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறது. இப்போதே இப்படி என்றால், 19ஆம் நூற்றாண்டில் எப்படி இருந்திருக்கும்? அதுவும் சிறுமிகள் எப்படிப் படித்திருப்பார்கள? அவர்களுக்கு முதலில் கற்பிக்க முன்வந்தது யார் – இப்படி நிறைய கேள்விகள் தோன்றும்.
ஜோதிபா பூலே, சாவித்திரி பாய் பூலே ஆகியோரே இந்தியாவில் முதன்முதலில் சிறுமிகளுக்குப் பள்ளிகளை அமைத்தவர்கள். 1848இல் பெண்களுக்கான முதல் பள்ளி மகாராஷ்டிர மாநிலம் பிதேவாடாவில் தொடங்கப்பட்டது. நாட்டின் முதல் ஆசிரியையாக சாவித்திரி பாய் பூலே ஆனார். அவருடன் பாத்திமா ஷேக் உள்ளிட்டோர் கற்பித்தார்கள். அந்தப் பள்ளியை நடத்த நிறைய தொந்தரவுகளையும் எதிர்ப்பையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது. போராட்டங்களைத் தாண்டியே சிறுமிகளுக்குக் கல்வி சாத்தியப்படுத்தப்பட்டது. இந்த நூலை சாலை செல்வம் எழுதியுள்ளார், ஓவியங்கள் செந்தில் நடராஜன்.
குழந்தைகளுக்கும் உயிரினங் களுக்கும் இடையிலான நேசம் ஆழமானது, விளக்கங்கள் தேவைப்படாதது. புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் அலெக்ஸாந்தர் குப்ரின் ‘The Elephant‘ என்றொரு கதையை எழுதியிருக்கிறார். அந்தக் கதையில் வரும் சிறுமி நாடியாவுக்கு விநோதமான நோய். ‘அதற்கு மருந் தில்லை, குழந்தைக்குப் பிடித்த மாதிரி எதையாவது செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தை குணமடைவாள்’ என்று மருத்து வர்கள் கூறிவிடுகிறார்கள்.
குழந்தை களுக்கு வழக்கமாகப் பிடிக்கும் பொம்மை, சாக்லேட் உள்ளிட்டவை நாடியாவுக்குப் பிடிக்கவில்லை. அவளுடைய அம்மாவுக்கும் அப்பாவுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் யானை வேண்டுமென்று நாடியா கேட்கிறாள். நிஜ யானை வேண்டுமென்று பிடிவாதமாக இருக்கிறாள். நம் நாட்டைப் போல் யானைகள் அதிகமுள்ள நாடல்ல ரஷ்யா. அவளுடைய அப்பா எப்படி வீட்டுக்கு யானையைக் கொண்டுவந்தார், அது வீட்டுக்குள் எப்படி வந்தது, யானை வந்த பின் என்ன நடந்தது, நாடியா குணமடைந்தாளா என்பதை எல்லாம் இந்தக் கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT