Published : 19 May 2021 11:02 AM
Last Updated : 19 May 2021 11:02 AM

டிங்குவிடம் கேளுங்கள்: விமானத்தை மின்னல் தாக்காதா?

விமானம் பறக்கும்போது அதை மின்னல் தாக்காதா, டிங்கு?

- வி. ஸோபித், 5-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

நல்ல கேள்வி. தினமும் மின்னல்கள் உருவாகிக்கொண்டேதான் இருக்கின்றன. பெரும்பாலான மின்னல்கள் சாதுவானவை. எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாதவை. விமானத்தின் முன் பகுதியையும் பின் பகுதியையும்தான் மின்னல்கள் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதனால், அந்தப் பகுதிகளை மின்னல்களின் தாக்கத்தைச் சமாளிக்கும் விதத்தில் கார்பன் ஃபைபர் போன்ற பொருட்களால் உருவாக்கியிருக்கிறார்கள். உலோகத்தைப் போல் இது மின்சாரத்தைக் கடத்துவதில்லை. கடந்த 20 ஆண்டுகளில் 3 ஆயிரம் விமானங்களில் ஏற்பட்ட பிரச்சினைகளில் எட்டு மட்டுமே மின்னல்களால் ஏற்பட்டவை, ஸோபித்.

நீர்க்கடுப்பு எதனால் வருகிறது, டிங்கு?

- ஆர். அபிஷேக், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, கோபிச்செட்டிபாளையம்.

வெயில் காலத்தில் அதிக அளவில் வியர்வை மூலம் நீர்ச்சத்து வெளியேறும். வழக்கத்தைவிட அதிகமான அளவில் தண்ணீர் பருக வேண்டும். தண்ணீர் அதிகம் குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுக்களின் அளவு அதிகமாகி, படிகமாக மாறும். அப்போது சிறுநீரின் அடர்த்தி அதிகமாகிவிடும். இதனால், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகிறது, அபிஷேக். தண்ணீர் அதிகம் குடித்து, அடிக்கடி சிறுநீர் கழித்துவிட்டால், நீர்க்கடுப்பிலிருந்து தப்பித்துவிடலாம்.

கண்ணாடியை அடிக்கடி பார்த்தால் முகத்தில் பருக்கள் வந்துவிடும் என்று கூறுகிறார்களே, உண்மையா டிங்கு?

- பொ. ஜோதிபாலா, 10-ம் வகுப்பு, புனித ஜான் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, மதுரை.

நீங்கள் அடிக்கடி கண்ணாடி முன் நின்றுகொண்டிருக்கிறீர்களா, ஜோதிபாலா? நீங்கள் அப்படி நிற்க வேண்டாம் என்பதற்காக, கண்ணாடி பார்த்தால் பரு வரும் என்று சொல்லியிருப்பார்கள். கண்ணாடி பார்ப்பதற்கும் பருக்களுக்கும் தொடர்பில்லை. நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் உள்ளன.

இவை ஹார்மோனின் தூண்டுதலால் ‘சீபம்’ என்கிற எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன. இதுதான் முடிக்கால்கள் வழியாக வெளியே வந்து நம் தோலையும் முடியையும் மினுமினுப்பாக வைத்திருக்கிறது. காற்றில் உள்ள தூசும் அழுக்கும் தோலில் சுரக்கும் எண்ணெயில் ஒட்டிக்கொள்கின்றன. இதனால், தோலுக்கு அடியில் உள்ள சீபம் வெளியே வர முடியாமல், கட்டியாக மாறும். இதைத்தான் நாம் பரு என்கிறோம். முகத்தை அடிக்கடி சுத்தம் செய்வதாலும் ஆரோக்கியமான உணவு, போதுமான தண்ணீர் குடிப்பதாலும் பருக்களைக் கட்டுப்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x