Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
அறிவியல் வளர்ச்சியில் இந்தியா பின்தங்கிய நாடு என்றே நினைக் கிறோம். பண்டை காலத்தில் உலகின் வெவ்வேறு நாடுகளில் அறிவியல் வளர்ந்து கொண்டிருந்ததைப் போலவே, இந்தியாவிலும் வளர்ந்து கொண்டிருந்தது. மேற்கத்திய அறிவியல், கிழக்கு நாடுகளின் அறிவியல் வளர்ச்சியை வரலாற்றில் பதிவு செய்யவில்லை.
இந்தப் பின்னணியில் ‘அறிவியல் தேசம்’ என்கிற நூலை இரா. நடராசன் எழுதியுள்ளார் (அறிவியல் வெளியீடு). ஓர் இந்திய அறிவியல் பயணம் என்கிற துணைத்தலைப்பைக் கொண்ட இந்த நூல், அறிவியல் ரயில் ஒன்றில் கற்பனையாக ஏறிப் பயணிப்பது போன்ற நடையில் எழுதப்பட்டுள்ளது.
வரலாற்றுரீதியில் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சிகள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. கீழடியில் கிடைத்த அறிவியல் தொல்பொருள்கள், சிந்து சமவெளியில் கிடைத்த அளவைக் கருவிகள், சூரியனை பூமி சுற்றிவருகிறது என்பதை பொ.ஆ. (கி.பி.) 12-ம் நூற்றாண்டிலேயே இரண்டாம் பாஸ்கரர் பதிவுசெய்திருப்பது உள்ளிட்டவற்றைக் குறித்து தொடக்க அத்தியாயங்கள் பேசுகின்றன.
இப்படி நம் நாட்டின் பண்டைய அறிவியல் வளர்ச்சிகள் தொடங்கி சர் சி.வி. ராமன், ஜகதீச சந்திரபோஸ், மேக்நாட் சாகா உள்ளிட்டோரின் அறிவியல் பங்களிப்பு, இன்றைய சந்திரயான், மங்கள்யான் வரை பல்வேறு அறிவியல் வளர்ச்சிகளைக் கூறுகிறது இந்த நூல். கடந்த நூற்றாண்டின் முன்னோடி இந்தியப் பெண் விஞ்ஞானிகள் கமலா சோஹோனி, அன்னா மணி, அசிமா சாட்டர்ஜி ஆகியோரைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு ரயில் வந்த வரலாற்றில் தொடங்கி இந்திய அறிவியல் வரலாற்றின் முக்கியப் புள்ளிகளை இந்த நூல் மூலம் அறிந்துகொள்ளலாம்.
கேள்விகள், பதில்கள்
பொதுவாக இதிலெல்லாமா அறிவியல் இருக்கும் என்று நினைப்போம். அறிவியலை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியாதா, அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் அம்சங்களில் உள்ள அறிவியல் பின்னணி குறித்து அறிந்துகொண்டால் எவ்வளவு சுவாரசியமாக இருக்கும் என்றெல்லாம் யோசிப்போம். அப்படிப் பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது ‘101 கேள்விகள், 100 பதில்கள்’ என்கிற நூல். சு. தினகரன் எழுதியுள்ள இந்த நூலையும் அறிவியல் வெளியீடு வெளியிட்டுள்ளது.
கொசு யாரை அதிகம் கடிக்கும்?, எறும்புகளில் தற்கொலைப் படை உண்டா?, சேவல் - கோழியில் எது அதிக நாள் உயிரோடு இருக்கும்?, வௌவால்களால் கரோனா பரவுமா?, மீன்கள் தூங்குமா?, யானை எந்த உயிரினத்தைக் கண்டு பயப்படும்?, மரணம் என்றால் என்ன?, பொய் சொன்னால் கண்டுபிடித்துவிட முடியுமா?, மின்னலை ெயற்கையாக உருவாக்க முடியுமா?, கதிர்வீச்சைத் தடுக்குமா மாட்டுச் சாணம்?…
இப்படி நமக்கு அடிக்கடித் தோன்றும், அதிகம் பேருக்கு எழும் கேள்விகள், பதில் தெரியாத கேள்விகள் எனப் பல இருக்கும். இப்படிப்பட்ட கேள்விகளுக்கு அறிவியல்பூர்வமான விடைகளை சு. தினகரன் தந்திருக்கிறார். மதுரை கல்லூரி விலங்கியல் துறைத் தலைவரான இவர், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவராகவும் செயல்பட்டுவருகிறார்.
கடைசிக் கேள்விக்கு நம்மையே பதில் தேடச் சொல்லி யிருக்கிறார் ஆசிரியர். இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் இயல்பாகவே நமக்கு மேலும் பல கேள்விகள் தோன்றும், அவற்றுக்கான விடைகளை நாமே தேட வேண்டுமென்று இந்தப் புத்தகம் சொல்லாமல் சொல்கிறது.
101 கேள்விகள்100 பதில்கள்,
சு. தினகரன்,இரண்டு நூல்களும் அறிவியல் வெளியீடு,
தொடர்புக்கு: 9994368501
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT