Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

டிங்குவிடம் கேளுங்கள்: சில காய்கள் கசப்பது ஏன்?

துணை நிறங்கள் முதன்மை நிறங்களில் இருந்து கிடைக்கின்றன. முதன்மை நிறங்கள் எங்கிருந்து வருகின்றன, டிங்கு?

- பி.ஜி. மாதங்கி, 7-ம் வகுப்பு, செயின்ட் ஜோசப் அகாடமி, குன்னூர்.

சூரிய ஒளியில் இருந்தே வண்ணங்கள் உருவாகின்றன. சூரிய ஒளி பார்ப்பதற்கு வெள்ளையாகத் தெரிந்தாலும் ஒரு முப்பட்டகக் கண்ணாடி வழியே ஒளியைச் செலுத்தினால், அது பல நிறங்களாகப் பிரிவதைக் காண முடியும். உண்மையில் முதன்மை நிறங்களையும் துணை நிறங்களையும் யாரும் உருவாக்கவில்லை. சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறங்களின் கலவையில் மற்ற நிறங்கள் உருவாகும் என்பதால், இவற்றை முதன்மை நிறங்கள் என்கிறார்கள். நிறத்தை அறிவதில் மூளையும் கண்களும் இணைந்து செயல்படுகின்றன. மனிதக் கண்களில் உள்ள கூம்புகளால் காணக்கூடிய சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று வண்ணங்களையே முதன்மை வண்ணங்கள் என்று அழைக் கிறார்கள், மாதங்கி.

கோபத்தின்போது முகம் சிவப்பது ஏன், டிங்கு?

- ஜி. மஞ்சரி. 10-ம் வகுப்பு, ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

நாம் கோபம் என்கிற உணர்வை வெளிப்படுத்தும்போது கண்கள் பெரிதாகும்.இதயம் வேகமாகத் துடிக்கும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்க, ரத்த நாளங்கள் விரிவடையும். தோலுக்கு அருகே ரத்த நாளங்கள் இருப்பதால் முகம் சிவப்பாகக் காட்சியளிக்கிறது, மஞ்சரி.

சில சுரைக்காய்கள் கசக்கின்றனவே ஏன், டிங்கு?

- மோ. காவியா, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த வெள்ளரி, சுரைக்காய், பீர்க்கங்காய், புடலங்காய் போன்ற வற்றில் கசப்புச்சுவை தெரியும். கொடிகள் வளரும் மண், நீர், தட்பவெப்ப நிலை போன்ற காரணிகள் சரியாக அமையாதபோது, கரிமச் சேர்மங்கள் (Cucurbitacins) அதிகமாகி நச்சுத்தன் மையை வழங்கிவிடுகின்றன. இதனால்தான் சில வெள்ளரி, புடலை, பீர்க்கை போன்றவை கசப்புச் சுவையோடு இருக்கின்றன. அதனால்தான், காய்களை நறுக்கும்போதே சுவைத்துப் பார்த்துவிட வேண்டும். கசப்பாக இருந்தால் பயன்படுத்தக் கூடாது, காவியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x