Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM
கோப்பையில் உள்ள காபியை எடுத்து ஒருவர் குடிப்பதை யாராவது வியந்து பார்ப்போமா? அப்படி ஒருவரை மருத்துவ உலகமே வியந்து பார்த்தது. ஏன் தெரியுமா?
மூளையில் அடிபட்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 15 ஆண்டுகளாகக் கைகளை இயக்க முடியாமல் துன்பப்பட்டு வந்தார். மருத்துவ ஆய்வு உலகில் S3 என்று அழைக்கப்படுகிற இந்த 58 வயதுப் பெண், 2012-ம் ஆண்டு ஒரு கோப்பையை எடுத்து காபி குடித்தபோது ஆச்சரியப்படத்தானே செய்வார்கள்!
நியூரோ தொழில்நுட்பம், கணினி ஆகியவற்றின் மூலம் ரோபோ கைகளை அந்தப் பெண்ணின் மூளையுடன் பிணைத்து இந்தச் சாதனையை நிகழ்த்தினர். அதாவது மூளை கட்டளையிட, ரோபோ கை இயங்கியது.
விபத்து, முதுமை காரணமாக மூளையில் ரத்தக்கசிவு, ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படலாம். எந்தப் பகுதியில் ரத்த ஓட்டம் தடைபடுகிறதோ அதைப் பொறுத்து உடலின் சில பகுதிகள் செயலிழந்து போகும். அதாவது பக்கவாதம் ஏற்படும். மூளை ஆணையிட்டாலும் கை, கால் போன்ற பகுதிகள் செயல்படாது.
விழி லென்ஸ் சரியாக வேலை செய்யாவிட்டால், கண்ணாடி மூலம் பார்வைக் குறைபாட்டைச் சரி செய்துகொள்கிறோம். அது போல பக்கவாதத்தால் செயல்படாத கை செய்யும் வேலைகளை, ரோபோ கை மூலம் செய்ய முடியும். இதுதான் நியூரோ தொழில்நுட்பம்.
எதிரே காபி கோப்பை உள்ளது. அதை எடுத்துப் பருக வேண்டும். உடனே மூளை தகுந்த கட்டளைகளைப் பிறப்பிக்கிறது. மூளை அனுப்பிய கட்டளைகளுக்கு ஏற்ப வலது கை நீள்கிறது. கை செல்லும் தொலைவு போதுமா என்று மூளைக்குக் கண் தெரிவிக்க, அதற்கு ஏற்றாற்போல் மூளையும் தன் ஆணைகளை மாற்றுகிறது. கைகள் கோப்பையை நெருங்கிவிட்டன என்று கண் தெரிவிப்பதை வைத்து, விரல்கள் கோப்பையை லாகவமாகப் பிடிக்கக் கட்டளைகளைப் பிறப்பிக்கிறது மூளை.
கோப்பையை ஏந்திய கை முட்டி சரியாக வளைந்து மெல்ல கோப்பை வாய்க்கு அருகே வருகிறது. கை மணிக்கட்டு சற்றே சரிந்து கோப்பையை உதடுகளுக்குள் வைக்கிறது. காபியைப் பருக வாய் திறந்துகொள்கிறது. ஒரு மடக்கு காபி வாய்க்குள் சென்றதும், கோப்பை மறுபடி சமநிலைக்கு வருவது போல கையின் மணிக்கட்டு திரும்புகிறது. வாய் மூடிக்கொள்கிறது. வாயை விட்டுச் சற்றுத் தொலைவு கோப்பை நகர்கிறது. மறுபடி கை அசைந்து கோப்பையை வாய்க்கு அருகே கொண்டு வருகிறது. இப்படித்தான் ஒவ்வொரு செயலும் பிசகாமல் நடக்கிறது.
நம் மனம் நினைப்பதற்கு ஏற்ப மூளையின் கட்டளைப்படி ஒவ்வோர் உறுப்பும் வேலை செய்வதால், பல செயல்களைச் செய்கிறோம். காபி குடிப்பது, எழுதுவது, துணியை மடிப்பது என எல்லா உடலியக்க நிகழ்வுகளின் போதும் ஒவ்வொரு தசையையும் பொம்மலாட்டம் போல மூளை இயக்குகிறது.
விரல்களுக்கும் இயங்கும் பொம்மைக்கும் இடையே நூல் பிணைப்பின் காரணமாகப் பொம்மலாட்டம் சாத்தியமாகிறது. அந்த நூல் அறுந்துவிட்டால் விரல் இயங்கினாலும் பொம்மை அசையாது. பக்கவாதம் ஏற்படும்போதும் மூளை இயங்குகிறது. ஆனால், திசுக்களைச் செயல்பட வைக்க முடிவதில்லை.
அறுந்த பொம்மலாட்டக் கயிறைச் சரிசெய்வது போல, மூளையின் ஆணைகளைப் பெற்று ரோபோ கருவிகளை இயக்கலாம். அதுதான் நியூரோ தொழில்நுட்பம்.
பெண்ணின் மண்டையோட்டில் துளையிட்டு, மூளைக்குள் 96 உலோகத் தகடு மின்வாய்களைப் (electrode) பொருத்திவிட்டனர். மெல்லிய இந்த மின்வாய்களைக் கணினியோடு இணைத்தனர். மூளை இயங்கும்போது ஏற்படும் மின்சமிக்ஞை கணினியை வந்தடைந்தது. இந்தச் சமிக்ஞைகளை வைத்து ரோபோ கையை இயக்கியது. ரிமோட் கார் செயல்படுவது போல மூளை நினைக்கும் விதத்தில் ரோபோ கை செயல்பட்டது.
பக்கவாதம் வந்தவர்கள் மட்டுமல்லாமல், கைகால் இழந்தவர்களும் நியூரோ தொழில்நுட்பம் மூலம் பயன் பெறமுடியும். பார்வையற்றவர்கள் பார்வை பெற முடியும். இவை போல பல்வேறு உடல் உறுப்புக் குறைபாடுகளை சரிசெய்யும் சாத்தியம் நியூரோ தொழில்நுட்பத்துக்கு உண்டு.
இன்றைக்கு நியூரோ தொழில்நுட்பம் வளர்ச்சியின் முதல் கட்டத்தில்தான் உள்ளது. எதிர்காலத்தில் அது மேலும் முன்னேற்றங்களை அடையும்போது, மனிதர்களின் உடல் குறைபாடுகள் பலவும் சரிசெய்யப்படும்.
கட்டுரையாளர், விஞ்ஞானி
தொடர்புக்கு: tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT