Last Updated : 28 Apr, 2021 03:13 AM

 

Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

கோடையில் வாசிப்போம்: சுரங்கத்தில் கிடைத்த அபூர்வப் புதையல்

மலை ஏறுவது, காட்டுக்குப் போவது, குகை-கோட்டைகளுக்குப் போவது போன்றவை எல்லாம் உங்களுக்குப் பிடிக்கும்தானே. ஏற்கெனவே பழகிய இடங்கள், தெரிந்த பகுதிகளையே திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டிருப்பது மனிதர்களுக்கு ஒரு கட்டத்தில் சலித்துப்போய்விடும்.

அதிலும் சிறுவர், சிறுமியரால் ஓரிடத்தில் இருக்கவே முடியாது. புதிய இடங்கள், புதிய மர்மங்களைத் தேடி சாகசப் பயணம் மேற்கொள்வது யாருக்குத்தான் பிடிக்காது. இதை அடிப்படையாகக் கொண்டே பெ. தூரனின் ‘தரங்கம்பாடி தங்கப்புதையல்’, ‘சங்ககிரிக் கோட்டை மர்மம்‘, வாண்டுமாமாவின் ‘சாகசக் கதைகள்’, ஆங்கில எழுத்தாளர் எனிட் பிளைடனின் ‘ஃபேமஸ் ஃபைவ்’ போன்ற கதைகள், அந்தக் காலத்தில் வெளியாகிப் புகழ்பெற்றிருந்தன. அதேபோன்ற சாகசக் கதைகள் இன்றைக்கும் விரும்பப்படுகின்றன. குழந்தைகளுடைய ஆவலைப் பூர்த்திசெய்ய வந்திருக்கிறது யெஸ். பாலபாரதி எழுதியுள்ள ‘பூமிக்கு அடியில் ஒரு மர்மம்’.

கோயில் சுரங்கம்

எல்லா ஊர்களிலும் கோயில்களிலும் கோட்டைகளிலும் சுரங்கம் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருப்போம். மன்னர்கள் வாழ்ந்த காலத்தில் அவசரமாகத் தப்பிப்பதற்காக இதுபோல் சுரங்கங்களை வெட்டி வைத்திருப்பார்கள். தற்காலத்தில் அந்தச் சுரங்கங்களை யாரும் பயன்படுத்துவதில்லை.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிக்கும் பள்ளி மாணவன் ஜெயசீலனின் ஊரில் உள்ள சுயம்புநாதர் கோவிலில் ஒரு சுரங்கம் இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் ஜெயசீலனின் உறவுக்காரப் பெண்கள் ஜெஸியும் ஜெமியும் அந்தச் சுரங்கத்தைக் கண்டறிகிறார்கள். பிறகு ஜெயசீலனின் நண்பர்கள் அன்வர், புகழ்மணியுடன் அங்கே போகிறார்கள்.

சற்று பயமாக இருந்தாலும், சுரங்கத்துக்குள் அப்படி என்னதான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆவலால் உள்ளே செல்ல விரும்புகிறார்கள். ஒவ்வொரு நாளும் விளையாடப் போகும் நேரத்தில் அந்தச் சுரங்கத்துக்குள் சென்று அவர்கள் ஆராய்கிறார்கள். கையில் டார்ச்லைட், பசியைப் போக்க நொறுக்குத்தீனி போன்ற தயாரிப்புகளுடனும் போகிறார்கள். அங்கே புதையல் ஏதும் இருக்குமா, அதிசயம் ஏதாவது நடக்குமா என்று யோசித்தபடி போகிறார்கள்.

விநோத விலங்கு

இதற்கிடையில் ஒருநாள் அந்தச் சுரங்கத்துக்குள் கரடி போன்ற ஒரு விநோத விலங்கு இருப்பதைப் பார்க்கிறார்கள். ‘கூ கூ’ என்று கத்திக்கொண்டு இவர்களைத் தள்ளிவிட்டுவிட்டு அந்த விலங்கு எதிர்ப்பக்கமாக ஓடிவிடுகிறது. அந்த விலங்கு எப்படிப்பட்டது, அது என்ன செய்யும் என்று தெரியாவிட்டாலும் இந்தச் சிறுவர், சிறுமியர் மீண்டும் சுரங்கத்துக்குச் செல்கிறார்கள்.

தொடக்கத்திலிருந்தே இவர்களுடன் கண்ணன் என்கிற ஆட்டிசம் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி சிறுவனும் வருகிறான். ‘கூ கூ’ என்று கத்தும் அந்த விநோத விலங்கைப் பார்த்து அஞ்சி ஓடாமல், நெருங்கிச் சென்றவன் அவன்தான். சிற்சில பிரச்சினைகள் இருந்தாலும் இந்தச் சிறார் படை பெற்றோருக்குத் தெரியாமல் அந்தச் சுரங்கத்துக்குச் சென்று திரும்பும் சாகசம் தொடர்கிறது.

ஜெயசீலனின் அத்தை சப் இன்ஸ்பெக்டர் ஜீபா இவர்களுடைய செயல்பாடுகளைக் கண்டறிந்துவிடுகிறார். அந்த விநோத விலங்கு, மற்ற மர்மங்களைத் தேடி சுரங்கத்துக்குப் போகும் பயணத்தில் இவர்களுடன் அவரும் சேர்ந்துகொள்கிறார். அந்தச் சுரங்கத்தில் இருந்த மர்மங்கள் விலகினவா, சுரங்கத்தில் வழக்கமாகப் புதைத்து வைக்கப்படும் புதையல் அவர்களுக்குக் கிடைத்ததா என்பதை எல்லாம் விறுவிறுப்பாகச் செல்லும் இந்தக் கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

நாம் அனைவரும் சமம்!

நம்மைச் சுற்றி பல்வேறு விதமான மனிதர்கள் வாழ்ந்துவருகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். வழக்கமான மனிதர்களுக்கு இருக்கும் திறன்கள், சிலருக்கு இல்லாமலும் இருக்கலாம். ஆனால், நாம் அனைவரும் மனிதர்கள், அனைத்து மனிதர்களையும் ஒன்றுபோல் நடத்துவதே அறிவுக்கு அழகு என்பதை இந்தச் சாகசக் கதை வழியாக அழுத்தமாகக் கூறியுள்ளார் எழுத்தாளர் யெஸ். பாலபாரதி.

ஆட்டிசம் போன்ற மருத்துவக் குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்பதைக் கதையோட்டத்திலேயே கூறியிருப்பது சிறப்பு. அனைத்து மனிதர்களுக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் இந்த உலகில் சமமாக, ஆரோக்கியமாக வாழ உரிமை உண்டு. அதைக் குழந்தைகளும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகவும் சுவாரசியம் குன்றாமலும் கதையை ஆசிரியர் நகர்த்திச் சென்றுள்ளார்.

பூமிக்கு அடியில் ஒரு மர்மம்,

யெஸ். பாலபாரதி,

வானம் வெளியீடு,

தொடர்புக்கு: 91765 49991

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x