Last Updated : 28 Apr, 2021 03:13 AM

 

Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

மாய உலகம்! - ஒரு தலைவர் எப்படி உருவாகிறார்?

ஓவியம்: லலிதா

பெரிய, பெரிய சமூக மாற்றங்கள் அனைத்தும் பெரிய, பெரிய மனிதர்கள்தாம் கொண்டுவந்தார்கள் என்று யாராவது உங்களிடம் சொன்னால் நம்பிவிடாதீர்கள். இதை எல்லாம் இவர்களால்தான் செய்ய முடியும், அது எல்லாம் அவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்று யாராவது வந்து உங்களிடம் கதை அளந்தால் அவர்களிடம் தெளிவாகச் சொல்லுங்கள். நீங்கள் சொல்வது தவறு நண்பரே! உங்களையும் என்னையும் போன்ற சிறிய, சாதாரணமான, எளிமையான மனிதர்களாலேயே முக்கியமான மாற்றங்கள் நிகழ்கின்றன.

இதை யார் உனக்குச் சொன்னது என்று அவர்கள் திருப்பிக் கேட்டால், ரோஸா பார்க்ஸ் சொன்னார் என்று சொல்லுங்கள். அவருக்கு யார் சொன்னார்களாம் என்று கேட்டால், யாருமில்லை. அவரே அடிபட்டு, உதைபட்டுக் கண்டுபிடித்த உண்மை இது என்று அழுத்தமாகச் சொல்லுங்கள்.

என்ன நடந்தது என்று சொல்கிறேன். முதுகு உடையும் வேலை என்று சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே? அப்படிப்பட்ட ஒரு வேலையில் இருப்பவள் நான். ரோபோ மாதிரி வாழ்க்கை. மணி அடித்ததும் எழுந்துகொள்வேன். எதையோ உண்பேன். என்னவோ அணிந்துகொள்வேன். பையைத் தூக்கிக்கொண்டு பேருந்து நிலையம் போவேன். ஏறுவேன், இறங்குவேன், அலுவலகம் செல்வேன். மணி அடிக்கும்வரை என்னென்னவோ வேலை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். ஒன்று மாற்றி ஒன்று செய்துகொண்டே இருப்பேன். பிறகு படிக்கட்டில் இறங்கி, நடந்து, பேருந்து பிடித்து, தூங்கி வழிந்துகொண்டே வீட்டுக்குப் போய் பொத்தென்று படுக்கையில் சாய்வேன்.

1 டிசம்பர் 1955. அன்றும் அதே ரோபோ உணவு, ரோபோ அலுவலகம், ரோபோ வேலைகள். மணி அடித்தது. பையை எடுத்துக்கொண்டு பேருந்து நிலையம் நோக்கி நடந்தேன். எனக்கான பேருந்து சில நிமிடங்களில் வந்து சேர்ந்தது. கூட்டம் அதிகமில்லை. ஏறினேன். வா, உனக்காகத்தான் காத்திருக்கிறேன் என்று சொல்வது போல் பின் வரிசையில் ஓரிடம் இருந்தது. அமர்ந்துகொண்டேன். முதுகும் கையும் காலும் வாய்விட்டு எனக்கு நன்றி சொல்வது போலிருந்தது. வண்டி கிளம்புவதற்குள் தூங்கி விழ ஆரம்பித்துவிட்டேன்.

எழுந்திரு என்று ஒரு குரல். அது என் காதில் விழுந்தது என்றாலும் என்னால் இமைகளைப் பிரிக்க முடியவில்லை. யாரோ, யாரையோ சொல்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். மீண்டும் குரல் உயர்ந்தது. எழுந்திரு! முள் குத்தியது போல் சட்டென்று என் உடல் துடித்து, விழித்துக்கொண்டது. கத்தியவர் பேருந்து ஓட்டுநர் என்பதையும் அவர் கத்தியது நான் அமர்ந்திருந்த வரிசையைப் பார்த்துதான் என்பதையும் உணர்வதற்குச் சில விநாடிகள் பிடித்தன. ஆனால், அதற்குள் என் வரிசையில் இருந்த மூன்று பெண்களும் சத்தம் போடாமல் எழுந்துவிட்டனர்.

பேருந்து நின்றது. நான் அமர்ந்திருந்தேன். ‘உன்னைத்தான் சொல்கிறேன், எழுந்திரு!’ அந்த ஓட்டுநரின் முகத்தைப் பார்த்தேன். கடுகடுப்பும் எரிச்சலும் கோபமும் அவர் முகம் எல்லாம் பரவியிருந்ததை உணர்ந்தேன். இப்போது எல்லோரும் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்க்கவும் தங்களுக்குள் முணுமுணுக்கவும் ஆரம்பித்திருந்தனர். என்னால் கேட்க முடியவில்லை என்றாலும் அவர்கள் என்ன பேசிக்கொள்வார்கள் என்பது எனக்குத் தெரியும். இந்தக் கறுப்புப் பெண்ணுக்கு எவ்வளவு திமிர் பார்த்தாயா?

எனக்குக் கொஞ்சம் தள்ளி என்னைக் குறுகுறுப்போடு பார்த்தபடி ஒரு வெள்ளையர் நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தேன். இப்போதுதான் எனக்குப் புரிந்தது. இவர் அமர்வதற்குத்தான் நான் எழுந்திருக்க வேண்டும் போலிருக்கிறது. எத்தனை மணி நேரப் பயணமாக இருந்தாலும், வெள்ளையர் இருக்கை கண்முன்னால் காலியாகவே இருந்தாலும் ஒரு கறுப்பர் நிற்கத்தான் வேண்டும். ஆனால், ஒரே ஒரு வெள்ளையர்கூட ஒரே ஒரு நிமிடம்கூட நிற்கக் கூடாது. பின் வரிசையில் அவர்களுக்கு என்றே ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு சில இடங்களையும்கூடக் கறுப்பர்கள் வெள்ளையர்களுக்கு விட்டுக்கொடுத்தாக வேண்டும்.

ஆயிரம் கறுப்பர்களை ஆயிரம் முறை நீங்கள் அவமானப்படுத்தலாம். ஆயிரம் சொற்களால், ஆயிரம் பார்வைகளால், ஆயிரம் சைகைகளால், ஆயிரம் முறை ஒவ்வொரு கறுப்பு உடலையும் உள்ளத்தையும் நீங்கள் தாக்கிக் காயப்படுத்தலாம். நாங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றுக்கும் பழகிக்கொள்ள வேண்டும். எழுந்திரு என்று சொல்லி முடிப்பதற்குள் என் அருகிலிருந்த பெண்களைப் போல் அமைதியாக எழுந்து நின்றுவிட வேண்டும்.

நான் எழுந்திருக்கவில்லை. ஓட்டுநர் எழுந்து என்னிடம் வந்தார். நீ எழுந்திருக்காவிட்டால் கைது செய்யப்படுவாய் என்று கத்தினார். எழுந்தால்தான் என்னவாம் என்றார்கள் சக வெள்ளையர்கள். முழு உலகமும் ஒரே குரலில் கத்த ஆரம்பித்தது. எழுந்திரு, ரோஸா. எழுந்திரு! நான் அசையவில்லை. ஒரு பூதம்போல் அந்த வெள்ளைக் குரல் என்னைச் சுற்றி வளர ஆரம்பித்தது. தன் கூரிய விரல்களால் என் கழுத்தை நெறிக்க ஆரம்பித்தது. எழுந்திரு ரோஸா, எழுந்திரு! நமக்கேன் வம்பு, எழுந்து வந்துவிடேன் ரோஸா என்றார்கள் என்மீது அக்கறை கொண்ட பெண்கள். இவர்களோடு நாம் மோத முடியுமா என்ன?

நான் அவர்களிடம் திரும்பினேன். அவர்கள் கண்களை நோக்கிச் சொன்னேன். இவர்களோடு மோதுவதற்கு வேறு யார் வருவார்கள்? நமக்காகப் பேசுவதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்? நாம் ஏன் அந்தக் குரலுக்கு மீண்டும் மீண்டும் கட்டுப்பட்டுக்கொண்டே இருக்கிறோம்? இங்கே வராதே, அங்கே போகாதே, அப்படிப் பேசாதே, இப்படிப் பாடாதே, அதை எழுதாதே, இதை அணியாதே என்று ஏன் நம்மை விரட்டிக்கொண்டே இருக்கிறது அந்தக் குரல்? நாம் ஏன் ரோபோக்கள்போல் அந்தக் குரல் சொல்வதை எல்லாம் செய்துகொண்டிருக்கிறோம்?

அன்று நான் கைது செய்யப்பட்டேன். அதன்பின் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியும். எழுந்திரு என்று சொன்ன அந்த ஒரு குரலுக்குப் பதிலாக எழுந்திருக்க மாட்டோம் என்று பல குரல்கள் சேர்ந்து ஒலித்தன. நகர்ந்து போ என்று சொன்ன வெள்ளைக் குரலை எதிர்த்து நகர மாட்டோம் என்றன கறுப்புக் குரல்கள். ஒதுங்கு என்றது வெள்ளைக் குரல். ஒதுங்க மாட்டோம் என்று பதிலளித்தது கறுப்புக் குரல். அதன் பின் எல்லாமே மாறத் தொடங்கியது. ’நீ என்ன மாயம் செய்தாய் ரோஸா?’ என்று வியப்போடு இன்றுவரை என்னிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

நான் என்ன செய்தேன் என்பது முக்கியமல்ல. என்ன செய்யவில்லை என்பது முக்கியம். நான் கடைசிவரை எழுந்திருக்கவில்லை.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x