Published : 02 Dec 2015 01:27 PM
Last Updated : 02 Dec 2015 01:27 PM
சுறுசுறுப்பான உயிரினங்கள் எவை? உடனே எறும்பு என்று சொல்வீர்கள். எறும்பு மட்டுமல்ல, இன்னும் சில உயிரினங்களும் ரொம்ப சுறுசுறுப்பானவைதான். அப்படிப்பட்ட சில உயிரினங்களைப் பார்ப்போமா?
தேனீ:
சுறுசுறுப்பில் முதன்மையானவை வேலைக்காரத் தேனீக்கள். ஓய்வே இல்லாமல் எப்போதும் உழைக்கக்கூடியவை. தட்பவெப்பநிலை மாறினாலும்கூட, அதற்கேற்பத் தம் பணியை மாற்றி அமைத்துக்கொண்டு, சுறுசுறுப்பாக வேலை செய்யக்கூடியவை.
கரையான்:
மரத்தில் உள்ள செல்லு லோஸை உண்டு வாழ்பவை இவை. ஒரு சில மணி நேரத்திலேயே பல அடி தூரம் மரங்களை அரித்துவிடும் அளவுக்குச் சுறுசுறுப்பாக வேலை செய்யக்கூடியவை.
பெங்குயின்:
அண்டார்டிகா கடற்கரையில் வாழும் இவை, 80 கிலோமீட்டர் தொலைவைத் தாண்டிச் சென்று பொருத்தமான இடத்தைக் கண்டறிந்து முட்டையிடக்கூடியவை பெண் பெங்குயின்கள். அந்தளவுக்கு சுறுசுறுப்பாகச் செல்லும். முட்டையிட்ட பிறகு ஆண் பெங்குயின்கள் முட்டையை 64 நாட்களுக்கு அடைக்காக்கும். அந்தக் காலகட்டத்தில் பெண் பெங்குயின்களே இரை தேடிச் சேகரிக்கின்றன.
மண்புழு:
‘விவசாயிகளின் நண்பன்’ என்றழைக்கப்படும் மண்புழுவும் சுறுசுறுப்புக்குப் பெயர் போனது. எல்லா வகை மண்களிலும் மண்புழுவைப் பார்க்க முடியாது. ஆனால், இவை வாழும் மண், வளமான மண்ணாக இருக்கும். மண்புழுக்கள் மண்ணைத் துளையிடுவதால் அந்த ஓட்டைக்குள் காற்றும், நீரும் சென்று மண்ணை வளப்படுத்துகின்றன.
நீர்நாய்:
‘விலங்குகளின் பொறியாளர்’ எனப் பெயர் பெற்றவை நீர்நாய்கள். இவையும் சுறுசுறுப்புக்குப் பெயர் போனவைதான். ஆற்று நீரைத் தடுத்துத் தனக்கென ஒரு இருப்பிடத்தை உருவாக்கிக் கொள்ளும். கோடையில் மண்ணையும் மரத்துண்டுகளையும் சேகரித்து ஆற்று ஓரங்களில் அணைபோல ஒரு தங்குமிடத்தை அமைக்கும்.
தகவல் திரட்டியவர்:
கே. சங்கர் குமார், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, துறையூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT