Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

புதிய கண்டுபிடிப்புகள்: சாணம் பூசும் தேனீக்கள்!

தேனீக்கள் தொடர்பான ஆய்வுக்காக வியட்நாம் வந்திருந்த கார்ட் ஓடிஸ், தேன்கூட்டில் கடுகு அளவில் சிறு உருண்டைகள் இருப்பதைக் கண்டு திகைத்தார். அது மாட்டுச் சாணம் என்று தேனீ வளர்ப்பவர்கள் கூறியதைக் கேட்டு வியந்தார். அப்பிஸ் செரானா (Apis Cerana) வகைத் தேனீக்கள், எதிரிகளிடமிருந்து கூட்டைப் பாதுகாப்பதற்குச் சாணத்தைப் பயன்படுத்துகின்றன. கனடாவைச் சேர்ந்த ஓடிஸ், பூச்சி ஆய்வாளர். ஆய்வாளர் ஹீதர் மட்டிலா உடன் இணைந்து ஆய்வு செய்தார்.

அப்பிஸ் செரானா தேனீக்களின் எதிரி வெஸ்பா சோரர் (Vespa Soror) என்கிற ராட்சசக் குளவி. கட்டைவிரல் அளவுக்குப் பெரிதான இந்தக் குளவிகள், கூட்டமாக வந்து தேன்கூட்டைத் தாக்கி, இளம்புழுக்களை உணவாக்கிக்கொள்கின்றன. சில மணி நேரத்தில் ஆயிரம் தேனீக்களைத் தாக்கிக் கொன்றுவிடக்கூடியவை. தேனீக்கள் சேகரித்து வைத்துள்ள தேனையும் அபகரித்துவிடுகின்றன. கூட்டையும் நாசம் செய்துவிடுகின்றன.

பரிணாம வளர்ச்சியில் எதிரியுடன் வாழப் பழகிய தேனீ, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள சில தந்திரங்களைப் பயன்படுத்துகிறது. அதில் ஒன்று தேனீப்பந்து. குளவிகள் கூட்டைத் தாக்க வரும்போது, சில நூறு தேனீக்கள் ஒன்றாகச் சேர்ந்து இறக்கைகளை வேகமாக அசைக்கின்றன.

கூட்டமான பேருந்தில் வெக்கையாக இருப்பதைப் போல, அதிகமான தேனீக்கள் சேரும்போது அங்கே வெப்பநிலை கூடும். ஐந்தே நிமிடங்களில் பந்தின் மையத்தில் 45°C அளவுக்கு வெப்பநிலை இருக்கும். இந்த வெப்பநிலையில் குளவி மடிந்துவிடும். தேனீக்களால் 50.7°C வெப்பநிலை வரை தாக்குப்பிடிக்க முடியும். கூட்டின் அருகே தேனீக்கள் நடனம் ஆடும். தொலைவிலிருந்து காணும்போது தேன்கூடு பளபளக்கும். இதைப் பார்த்து குளவி ஓடிவிடும்.

சரி, கூட்டின் நுழைவாயிலில் சாணத்தை வைப்பது ஏன்?. சாணத்தைத் தேன்கூட்டின் அருகே வைத்தனர். தேன்கூட்டிலிருந்து வெளிவந்த தேனீக்கள், சாணத்தை எடுத்து கூட்டின் நுழைவாயில் அருகே வைத்தன.

குச்சியில் பலூனைக் கட்டி, பதினான்கு கூடுகளின் அருகில் குளவியை வரவிடாமல் தடுத்தனர். எதிரி வருவது குறைந்தவுடன் சாணியை எடுப்பதும் குறைந்தது. வேறு பன்னிரண்டு கூடுகளுக்கு இயல்பாகக் குளவி வந்துபோகும்படி விட்டனர். அப்போது தேனீக்கள் சாணத்தை எடுத்தன. சாணம் வைத்த கூடுகளைவிட, சாணம் குறைவாக உள்ள கூடுகளில் குளவியின் தாக்குதல் அதிகம் இருந்தது.

சாணத்தைக் கண்டு ஏன் ஓடுகிறது குளவி? நாற்றத்துக்காகவா? தேனின் மணம் தெரியவில்லையா? கூட்டின் இடம் மறைக்கப்படுகிறதா? இது இன்னும் விளங்காத புதிர்தான்.

எதிரியைச் சமாளிக்க உயிரினங்களில் கொடுக்கு உட்பட பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. சில பூச்சிகள் இலை போலத் தென்படும். சில குச்சி போன்று காட்சியளிக்கும். இதன் மூலம் எதிரியை ஏமாற்றி, தப்பிவிடுகின்றன.

கஷ்டப்பட்டு வளர்த்த பயிரைப் பறவைகள் கொத்திச் சென்றுவிடக் கூடாது என்பதற்காக, மனிதர்கள் சோளக் கொல்லை பொம்மையை வயல்களில் வைக்கின்றனர். விரும்பிய இலக்கை அடைய மனிதர் கருவியைப் பயன்படுத்துகிறார். அதே போலத் தங்களையும் தங்கள் கூட்டையும் பாதுகாக்க, சாணம் பூசிக்கொள்கின்றன தேனீக்கள். தேனீயும் ஒரு வகையில் கருவிப் பயன்பாட்டை மேற்கொள்ளும் அறிவுகொண்ட உயிரினம் என்று இந்த ஆய்வில் கண்டறிந்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

கட்டுரையாளர், விஞ்ஞானி

தொடர்புக்கு: tvv123@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x