Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

டிங்குவிடம் கேளுங்கள்: மறக்க நினைக்கும் விஷயங்கள் நினைவுக்கு வருவது ஏன்?

வாத்தின் ‘குவாக்... குவாக்...’ சத்தம் ஏன் எதிரொலிப்பதில்லை, டிங்கு?

- தக்‌ஷித் கிருஷ்ணா, 4-ம் வகுப்பு, பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளி, கோவை.

வாத்தின் ‘குவாக்... குவாக்...’ சத்தம் எதிரொலிப்பதில்லை என்ற கருத்து எப்படி உருவானது என்று தெரியவில்லை. எந்த ஒலியும் பொருட்கள் மீது பட்டு எதிரொலிக்கவே செய்யும். ஆனால், வாத்தின் குவாக் சத்தம் அப்படி எதிரொலிப்பதை யாரும் கேட்டதில்லை. அதனால் எதிரொலிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். 2003-ம்ஆண்டு டெய்சி என்ற வாத்தை வைத்துப் பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவற்றின் முடிவில் வாத்தின் குவாக் சத்தம் எதிரொலிக்கிறது என்றும் அது மிக மென்மையான எதிரொலிப்பாக இருப்பதால், நம்மால் அதைக் கேட்க முடியவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்கிறார்கள், தக்‌ஷித் கிருஷ்ணா.

நாம் மறக்க நினைக்கும் விஷயங்கள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருவது ஏன், டிங்கு?

- ஹேமவர்ஷினி, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

சுவாரசியமான கேள்வி. நல்ல அனுபவங்களைவிட மறக்க வேண்டும் என்று நினைக்கிற மோசமான அனுபவங்கள் நம் நினைவுக்கு அடிக்கடி வருவது உண்மைதான். நல்ல நினைவுகளைவிட மோசமான நினைவுகள் நம் நினைவகத்தில் தெளிவாகவும் தனித்துவத்துடனும் வைக்கப்படுகின்றன. நம் உணர்ச்சிகளுக்கும் நினைவுகளுக்கும் இடையிலான தொடர்பு இதற்குக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

உணர்ச்சிகளும் நினைவுகளும் எதிர்மறையாக இருக்கும்போது இந்த மோசமான நினைவுகள் நமக்கு வந்துவிடுகின்றன. நம்மை பாதிக்கும் மோசமான நினைவுகளை நாம் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதால், அது தெளிவாக நினைவில் இருந்துகொள்கிறது. மற்றொரு மோசமான அனுபவம் கிடைக்கும்போதெல்லாம் அது நம் நினைவுக்கு வந்துவிடுகிறது. அதனால்தான் நம்மால் மறக்க நினைக்கும் விஷயங்களைகூட மறக்க முடிவதில்லை, ஹேமவர்ஷினி.

பங்குச் சந்தையைப் பற்றிக் கேட்டாலும் சொல்கிறாய், பாம்பைப் பற்றிக் கேட்டாலும் சொல்கிறாய், அது எப்படி? எனக்கும் அந்த மேஜிக்கைச் சொல்லிக் கொடுக்கலாமே, டிங்கு?

- என். அருண்குமார், 8-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை.

எனக்கும் எல்லா விஷயங்களும் தெரிந்திருக்காது. நீங்கள் பங்குச் சந்தையைப் பற்றிக் கேட்டால், நான் அறிந்த விஷயங்களோடு மேலும் சில விஷயங்களைத் தேடிப் படிப்பேன். அந்தத் துறை சார்ந்தவர்களிடம் விவாதிப்பதும் உண்டு. இப்படித்தான் ஒரு கேள்விக்குப் பதிலைத் தயார் செய்கிறேன். இதில் எந்த மேஜிக்கும் இல்லை. தேடித் தேடிப் படித்தால் போதும், அருண்குமார்.

பெங்குவின்களில் எத்தனை வகை உண்டு, டிங்கு?

- ஜி. இனியா, 4-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

உலகின் சில பகுதிகளில் மட்டுமே பெங்குவின்கள் வாழ்ந்தாலும் அவற்றில் 18 வகை தற்போது காணப்படுகின்றன். இவற்றில் அண்டாடிகாவில் மட்டும் 8 வகை பெங்குவின்கள் வாழ்கின்றன. இவை ஒவ்வொன்றும் உருவம், வண்ணம், எடை போன்றவற்றில் வித்தியாசமானவை, இனியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x