Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM
உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை, எனக்குப் படுத்தால் தூக்கம் வருகிறதோ இல்லையோ, கனவு வர ஆரம்பித்துவிடும். இவன் எப்போது கண்ணை மூடுவான் எப்போது வரலாம் என்று காத்துக்கொண்டே இருக்கும்போல! மேலும், ஒரு தூக்கத்துக்கு இத்தனைதான் என்று எந்தக் கணக்கு வழக்கும் இல்லை என் கனவுகளுக்கு. ஒன்று முடிந்து இன்னொன்று. அதன் வாலைப் பிடித்துக்கொண்டு மற்றொன்று என்று ரயில் பெட்டிபோல் வளர்ந்துகொண்டே போகும். இவ்வளவு கனவுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வாய் வில்லியம் பிளேக் என்றுதானே கேட்கிறீர்கள்?
சில கனவுகளை ஓவியங்களாகத் தீட்டிவிடுவேன். சில கனவுகளைக் கவிதைகளாக மாற்றிவிடுவேன். சிலவற்றை என் மனதோடு நெருக்கமாக வைத்துக்கொள்வேன். நான் தடுமாறும்போதெல்லாம், குழம்பி நிற்கும்போதெல்லாம் அவை விரைந்து வந்து என்னை மீட்கும். அப்படிப்பட்ட ஒரு கனவை உங்களிடம் பகிர்ந்துகொள்ளவா?
எந்த இடம் என்று தெரியவில்லை. எனக்குப் பழகிய இடம் போலவும் இருக்கிறது, புதிதாகவும் தோன்றுகிறது. என்னைச் சுற்றி ஒரே அமைதி. ஆனால், நான் மட்டும் நிம்மதி இழந்து அப்படியும் இப்படியுமாக நடை போட்டுக்கொண்டிருக்கிறேன். கூண்டுக்குள் இருக்கும் புலிபோல. என் கண்கள் சிவந்திருக்கின்றன. உதடுகள் துடிக்கின்றன. நண்பன் மீது எனக்குக் கடும் கோபம். எந்த நண்பனிடம், என்ன காரணத்துக்காக என்று தெரியவில்லை. ஒருவேளை நான் புலியாக இருந்திருந்தால் அவனை அப்படியே தாவிப் பிடித்துக் கடித்துத் தின்றிருப்பேன் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்குக் கோபம். படிக்க முடியவில்லை. சாப்பிட முடியவில்லை. தூங்க முடியவில்லை. அவனைப் பற்றியே நினைத்து நினைத்துப் பொருமிக்கொண்டிருக்கிறேன்.
நண்பன் மெல்லமெல்ல இப்போது பகைவனாகிறான். அவனை நான் பார்க்கிறேன், பேசுகிறேன், சிரித்துக்கூடப் பேசுகிறேன். என் போலியான பேச்சுகளும் போலியான சிரிப்புகளும் போலியான அன்பும் என் கோபத்தைத் தண்ணீர்விட்டு வளர்க்கின்றன. ஒரு செடிபோல் இரவும் பகலும் என் கோபம் வளர்கிறது. ஒரு நாள் அது ஒரு பெரிய மரமாக மாறுகிறது. ஆயிரம் கிளைகளோடு பல்லாயிரம் இலைகளோடு மிகமிக ஆழமான வேர்களோடு, அது காட்சியளிப்பதைப் பார்த்து நானே பயந்து போகிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
ஒரு நாள் என் நண்பன் அந்த மரத்தைப் பார்க்கிறான். அட, இவ்வளவு பெரிய மரத்தை நான் இதுவரை இங்கு பார்த்ததில்லையே என்று வியப்போடு நெருங்குகிறான். இது யாருடையது என்று திகைக்கிறான். அவன் கைக்கு நெருக்கமாகப் பளபளப்பான ஆப்பிள் தொங்குவதைப் பார்க்கிறான். அதன் வாசனை அவனை ஈர்க்கிறது. அதன் அழகு அவனை மயக்குகிறது. வா, நான் உனக்காகவே வளர்ந்த பழம். வந்து என்னைப் பறித்துக்கொள் என்று அந்த ஆப்பிள் அழைப்பது போல் இருக்கிறது.
அதற்கு மேலும் அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஆசையோடு ஆப்பிளைப் பறிக்கிறான். அங்கேயே அமர்ந்து நிதானமாக, கடித்துக் கடித்துச் சுவைக்கிறான். ஒவ்வொரு கடியிலும் அவன் முகம் மலர்கிறது. மொத்த ஆப்பிளையும் சாப்பிட்டு முடித்த பின் நிறைவோடு மரத்தடியில் படுத்துக்கொள்கிறான். நான் என் நண்பனை நெருங்குகிறேன். அவன் பெயர் சொல்லி அழைக்கிறேன். அவன் கைகளை ஆட்டுகிறேன். எழுந்திரு என்று சத்தமிடுகிறேன். அவனைப் பிடித்து உலுக்குகிறேன். அவன் இறுதிவரை எழுந்திருக்கவே இல்லை.
நான் திடுக்கிட்டு விழித்துக்கொள்கிறேன். என் முகம் எல்லாம் வியர்வை. என் கைகள் நடுங்குகின்றன. என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருக்கிறது. என் இதயம் வேகவேகமாக அடித்துக்கொள்கிறது. அது ஒரு கனவுதான் என்பது தெரிகிறது. அது நிஜமல்ல என்பது புரிகிறது. இருந்தாலும் என் தவிப்பு அடங்குவதாக இல்லை. இவனுக்கு என்ன ஆகிவிட்டது என்று வீட்டிலிருப்பவர்கள் விழிக்கிறார்கள். வழக்கம்போல் ஏதாவது கனவா என்று விசாரிக்கிறார்கள்.
நான் கதவைத் திறந்துகொண்டு வெளியில் ஓடுகிறேன். பக்கத்து வீட்டு நண்பனா? பள்ளிக்கூட நண்பனா? என்னோடு சேர்ந்து விளையாடுபவர்களில் ஒருவனா? ஐயோ, போன வாரம் ஏதோ வாக்குவாதம் செய்தேனே, அவனா? எவ்வளவு முயன்றும் அவன் முகத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. குறைந்தது லட்சம் முறை கத்தியிருப்பேன் அவன் பெயரை. இருந்தும் இப்போது பெயர் நினைவில் வரவில்லை. அதனாலென்ன பரவாயில்லை என்று நினைத்தபடி ஓடுகிறேன். வரிசையாக எல்லா வீடுகளுக்கும் செல்கிறேன். எல்லா நண்பர்களையும் அழைக்கிறேன்.
என்ன இவ்வளவு காலையில் மூச்சு வாங்க, வாங்க ஓடிவருகிறாய் என்கிறான் ஒருவன். எதுவுமில்லை என்று சொல்லி அவனைக் கட்டியணைத்துக்கொள்கிறேன். இரண்டாவது நண்பனின் வீட்டுக் கதவைத் தட்டுகிறேன். வெளியில் வந்த நண்பனிடம், என்னை மன்னிப்பாயா என்று கெஞ்சுகிறேன். எதற்கு என்கிறான் அவன். மீண்டும் ஓடுகிறேன். இனி உன்னோடு சண்டையிட மாட்டேன். இனி உன்னைக் கோபித்துக்கொள்ள மாட்டேன் என்கிறேன், போன வாரம் சின்னதாகச் சண்டையிட்ட மூன்றாவது நண்பனிடம். என் கண்ணீரைக் கண்டு அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என் கரங்களைப் பற்றிக்கொள்கிறான். உள்ளே வா என்று அழைத்துச் செல்கிறான். தண்ணீர் வேண்டுமா, தேநீர் வேண்டுமா என்று கேட்கிறான்.
கொஞ்சம் அமைதியாக உட்கார் என்கிறான். அமர்கிறேன். இரு என்று உள்ளே சென்றுவிட்டு திரும்பிவரும்போது அவன் கையில் ஓர் ஆப்பிள் பளபளக்கிறது. இந்தா என்று என்னை நோக்கி நீட்டுகிறான். மறுக்காமல் வாங்கிக்கொள்கிறேன். அவன் கண்களைப் பார்க்கிறேன். அவன் புன்னகையைப் பார்க்கிறேன். ஆப்பிளைச் சாப்பிட ஆரம்பிக்கிறேன். நிறைவாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது. என் அச்சம் எல்லாம், நடுக்கம் எல்லாம், கண்ணீர் எல்லாம் விலகியதுபோல் இருக்கிறது.
(இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம் பிளேக் புகழ்பெற்ற கவிஞர், ஓவியர்.)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT