Published : 03 Mar 2021 03:23 AM
Last Updated : 03 Mar 2021 03:23 AM
மழை குறைந்தாலும் பயிர்களைப் பாதிக்கும். மழை அதிகமானாலும் பயிர்களைப் பாதிக்கும். இரண்டும் இல்லாமல், பயிர்கள் செழித்து வளர்ந்தாலும் படைக்குருவிகளால் (கூட்டமாக வந்து தாக்கக்கூடிய பறவைகள்) பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. கம்பு, சோளம் ஆகிய பயிர்கள்தான் அதிக அளவில் படைக்குருவிகளின் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
படைக்குருவிகளை விரட்டுவதற்குப் பட்டாசுகளை வெடிப்பார்கள். பெரிய தகரங்களைத் தட்டுவார்கள். ஆனாலும் அவற்றைத் தடுக்க முடிந்ததில்லை.
தூத்துக்குடி மாவட்டம் கே.துரைசாமிபுரத்தைச் சேர்ந்த அஜித்குமார், படைக்குருவிகளை விரட்டுவதற்கு ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார். காற்றின் மூலம் காற்றாடியைச் சுழலவிட்டு, அதிலிருந்து ஒலியை எழுப்பும் கருவியை உருவாக்கி இருக்கிறார்.
”பிளாஸ்டிக் குழாய், இரும்புக் கம்பி, டேபிள் ஃபேன் இறக்கைகள்னு வீட்டில் இருந்த பொருள்களை வைத்தே இந்தக் கருவியை உருவாக்கினேன். காற்றடிக்கும்போது இறக்கைகள் வேகமாகச் சுழலும். அப்போது பின்னால் உள்ள இரும்புக் குண்டுகள் மாட்டப்பட்ட கம்பிகளும் சுழன்று, தகரத்தில் படும். டப்... டப்னு சத்தம் வரும். ஒரு ஏக்கருக்கு நாலு இடத்துல இந்தக் கருவிகளை வைக்கலாம். நாலு கருவிகளிலும் ஒரே நேரத்தில் சத்தம் வரும்போது, படைக்குருவிகள் பயிர்களை நெருங்காது.
எங்க நிலத்துல இந்தக் கருவிகளால 90% படைக்குருவிகளை விரட்ட முடிஞ்சது. இந்தக் கருவியைச் செய்ய 75 ரூபாய்தான் செலவாகும். இப்போது சூரிய ஒளி மூலம் தானியங்கி களை எடுக்கும் கருவியை உருவாக்கும் முயற்சியில் இருக்கறேன்” என்று சொல்லும் இளம் கண்டுபிடிப்பாளர் அஜித்குமார், நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் 12-ம்வகுப்பு படித்து வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT