Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM

‘துளிர்’ சிறப்பு மலர்

‘துளிர்’ – அறிவியலை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தால் தொடங்கப்பட்ட அறிவியல் மாத இதழ். 33 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமான அறிவியல் இதழாகத் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை இத்தனை ஆண்டு காலமும் வளர்த்துவரும் துளிருக்குத் தற்போது ஆசிரியராக இருக்கிறார் பாலகிருஷ்ணன்.

பொதுவாகப் பள்ளி ஆசிரியர்கள், அறிவியல் செயற்பாட்டாளர்கள் மூலமாக பள்ளி மாணவர்களை ‘துளிர்’ சென்றடைந்து கொண்டிருந்தது. கரோனா ஊரடங்குக் காலத்தில் பள்ளிகள் நேரடியாகச் செயல்படாததால் ‘துளிர்’ மின்னிதழாக வெளியாகி வந்தது. அந்த இதழ்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான கட்டுரைகள் அடங்கிய மலர் ‘துளிர் – அறிவியல் கட்டுரைகள்’ என்கிற தலைப்பில் சமீபத்தில் வெளியானது. பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சு. கண்ணப்பன் இந்த மலரை வெளியிட்டார்.

இந்த மலரில் அறிவியல் எழுத்தாளர்கள் ஆர். ராமானுஜம், த.வி. வெங்கடேஸ்வரன், பொ. ராஜ மாணிக்கம், சோ. மோகனா, சு. தினகரன், நா. மணி, என். மாதவன், சி. ராமலிங்கம் உள்ளிட்டோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இளம் அறிவியல் எழுத்தாளர்களான இ. ஹேமபிரபா, நாராயணி சுப்ரமணியன் ஆகியோரின் புதுமை அறிவியல் கட்டுரைகள், எழுத்தாளர் உதயசங்கரின் சிறார் கதைகள், நிவேதிதா லூயிஸின் தொல்லியல் கட்டுரைகள் ஆகியவை வாசிக்க சுவாரசியமாக உள்ளன. இதழ் முழு வண்ணத்தில் வெளியாகியிருப்பது சிறப்பு.

அறிவியல் உலகத்தின் பல்வேறு அம்சங்கள் இந்த மலரில் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகளைத் துறைவாரியாகப் பிரித்துத் தந்திருந்தால், படிக்க இன்னும் வசதியாக இருந்திருக்கும்.

- நேயா

‘துளிர்’ இதழ் தொடர்புக்கு: 9994368501

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x