Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM
டெல்லியிலிருந்து கோவை மிகத் தொலைவில் இருக்கிறது. ஆனால், நேரம் ஒரே மாதிரியாக இருக்கிறது. பாகிஸ்தான் டெல்லிக்கு அருகில் இருக்கிறது. ஆனால், ஏன் அரை மணி நேரம் வித்தியாசமாக இருக்கிறது, டிங்கு?
- எம். தக்ஷித் கிருஷ்ணா, 3-ம் வகுப்பு, பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளி, கோவை.
சுவாரசியமான கேள்வி. உலக நேரத்தை கிரீன்விச் நேரத்தை (GMT) அடிப்படையாக வைத்து கணக்கிடுகிறார்கள். கிரீன்விச் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு நாடும் தம்முடைய நேரத்தைக் கணக்கிட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மிர்ஸாபூரில் 82.5 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலிருந்து இந்திய நிலைநிறுத்தப்படும் நேரம் (IST) கணக்கிடப்படுகிறது. இது கிரீன்விச் நேரத்தைவிட 5 மணி 30 நிமிடங்கள் கூடுதலாக இருக்கும். நேரக்கணக்கீட்டில் 15 டிகிரிக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் கூடும்.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலங் களில் காலை 4 மணிக்கே சூரியன் உதயமாகிவிடுகிறது. மாலை 4 மணிக்கே சூரியன் மறைந்துவிடுகிறது. ஆனால், இந்தியாவின் மற்ற பகுதிகளில் காலை 6 மணிக்குதான் சூரியன் உதிக்கிறது. மாலை 6 மணிக்குதான் சூரியன் மறைகிறது. காலை 9 மணிக்குப் பள்ளி ஆரம்பித்து, மாலை 4 மணிக்கு முடியும் என்று வைத்துக்கொள்வோம். இந்திய நேரக் கணக்கின்படி நமக்குச் சரியாக வரும் இந்தப் பகல் நேரம், வடகிழக்கு மாநிலங்களில் வசிப்பவர்களுக்குக் குறைவாக ஆகிவிடுகிறது அல்லவா? அலுவலக நேரமும் குறைகிறது. உற்பத்தி குறைகிறது. மின்சாரத் தேவை அதிகரிக்கிறது. அதனால்தான் இந்தியாவுக்கு ஒரே மாதிரியான நிலைநிறுத்தப்பட்ட நேரம் சரியாக வராது என்றும் வடகிழக்கு மாநிலங்களுக்காவது நேரத்தை மாற்ற வேண்டும் என்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
டெல்லியிலிருந்து கோவை தூரமாக இருந்தாலும் இந்திய நிலைநிறுத்தப்பட்ட நேரக்கணக்கின்படி ஒரே நேரமாக இருக்கிறது. பாகிஸ்தான் டெல்லிக்கு அருகில் இருந்தாலும் அது வேறு நாடு என்பதால், அந்த நாட்டுக்கு உரிய நிலைநிறுத்தப்பட்ட நேரக்க்கணக்கின்படி அரை மணி நேரம் அதிகமாக வைத்திருக்கிறது. அதாவது பகல் நேரத்தை அதிகம் பயன்படுத்தும் விதத்தில் நேரத்தைக் கணக்கிட்டு வைத்திருக்கிறது. இதனால்தான் டெல்லிக்கு அருகில் இருந்தாலும் பாகிஸ்தானுக்கும் டெல்லிக்கும் நேர வித்தியாசம் வருகிறது, தக்ஷித் கிருஷ்ணா.
பேய்க் கதைகளைக் கண்டுபிடித்தவர் யார், டிங்கு?
- ஆர். யசோதா, 7-ம் வகுப்பு, ஜான் டீவி மெட்ரிக். உயர்நிலைப் பள்ளி, பண்ருட்டி.
தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் கிரஹாம்பெல் என்று சொல்வதைப் போல, பேய்க் கதைகளைக் கண்டுபிடித்தவர் இவர்தான் என்று ஒருவரைக் கூற இயலாது யசோதா. பழங்காலத்திலிருந்தே உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த மக்கள், மரணத்துக்குப் பிறகு மனிதர்கள் ஆவியாக அலைவார்கள் என்று நம்பினார்கள். அவர்கள் ஆவியாக வந்து தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக, இறந்தவர்களுக்குச் சடங்குகளைச் செய்தார்கள். அப்படியும் இயற்கையாக மரணம் அடையாதவர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களில் தான் சுற்றிக்கொண்டிருப்பார்கள் என்று நம்பினார்கள்.
அவர்களால் ஓர் உருவத்தைக் காட்ட முடியவில்லை என்பதால் இருளில், பாழடைந்த இடங்களில் மறைந்து வாழ்வதாகச் சொன்னார்கள். இப்படித்தான் பேய்க்கதைகள் சிறகடித்துப் பறக்க ஆரம்பித்தன. ஆரம்பத்தில் வாய்வழியாகச் சொல்லப்பட்ட கதைகள், அவற்றின் அபாரமான கற்பனை, சுவாரசியம், திகில் போன்ற காரணங்களால் எழுத்திலும் கொண்டு வரப்பட்டன. 16-ம் நூற்றாண்டில் பேய்க் கதைகள் பிரபலமாயின. 19-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பேய்க்கதைகளில் 70% பெண்களால் எழுதப்பட்டன. இன்றும்கூட பேய்க்கதைகளுக்கு மவுசு இருக்கவே செய்கிறது.
பூச்செடிகள் விற்கும் இடம் ‘நர்சரி' என்றழைக்கப்படுகிறது மழலையர் தொடக்கப் பள்ளியும் ‘நர்சரி' என்றே அழைக்கப்படுகிறதே ஏன், டிங்கு?
- ஜி. இனியா, 4-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் சீனியர் செகண்டரி பள்ளி, கிருஷ்ணகிரி.
பெற்றோர் வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால், மிகச் சிறிய குழந்தைகளையும் சற்று வளர்ந்த குழந்தைகளையும் கவனித்துக்கொள்ளும் விதத்தில் ‘நர்சரி’களை ஐரோப்பியர்கள் உருவாக்கினார்கள். அதேபோல மிகச் சிறிய செடிகளைக் குழந்தை போல் வளர்த்து, விற்பனை செய்யும் இடத்தையும் ‘நர்சரி’ என்று அழைத்தனர். ஒரே வார்த்தை இரண்டுக்கும் பொருள் தருகிறது. குழந்தைகளைப் பராமரிக்கக்கூடிய செவிலியரையும் ‘நர்ஸ்’ என்றுதான் அழைக்கிறோம், இனியா.
திருஷ்டி பட்டுவிடும் என்பது உண்மையா, டிங்கு?
- பொ. ஜோதிபாலா, 10-ம் வகுப்பு, புனித ஜான் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளி, மதுரை.
மனிதர்களின் எத்தனையோ நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. ஒருவருக்கு நல்ல விஷயம் நடக்கும்போது, அதைச் சிலரால் தாங்க முடியாமல் பொறாமையோ எரிச்சலோ அடைவார்கள். அந்தக் கெட்ட எண்ணம் நல்லது நடந்த ஒருவரைத் தாக்கும் என்பதும் ஒருவித நம்பிக்கை. நல்ல விஷயம் நடந்தவர்களுக்குத் திருஷ்டியால் பாதிப்பு உண்டாகும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நல்ல விஷயத்தைத் தாங்க முடியாமல் பொறாமையோ எரிச்சலோ அடைபவர்களுக்கு பிரஷர் ஏறலாம், அவ்வளவுதான் ஜோதிபாலா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT