Last Updated : 06 Jan, 2021 03:13 AM

 

Published : 06 Jan 2021 03:13 AM
Last Updated : 06 Jan 2021 03:13 AM

வாசிப்பை நேசிப்போம்: சிறார் நூல்கள்

கடந்த ஆண்டில் வெளியான குறிப்பிடத்தக்க சிறார் நூல்கள்:

குட்டி இளவரசனின் குட்டிப் பூ

பிரெஞ்சு எழுத்தாளர் அந்த்வான் எக்சுபெரி எழுதிய புகழ்பெற்ற நாவல் ‘குட்டி இளவரசன்’. அந்த நாவலில் இடம்பெறும் குட்டி இளவரசன், அவன் நேசிக்கும் குட்டிப்பூ ஆகியோருடன் அந்த்வான் எக்சுபெரியும் ஒரு கதாபாத்திரமாக இடம்பெற்றிருக்கும் கதை இது. புகழ்பெற்ற இந்தக் கதாபாத்திரங்கள் இன்றைய பிரச்சினைகள் சிலவற்றின் ஊடாகச் சென்று திரும்பும் புது முயற்சியே இந்தக் கதை. இளையோர் நாவலாகச் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் எழுதியுள்ளார்.

வானம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991

பச்சை வைரம்

அமெரிக்கா இன்றைக்கு வல்லரசாகி இருக்கிறது என்றால், அதற்கு அங்கு வாழ்ந்த லட்சக்கணக்கான ஆப்பிரிக்க அடிமைகளும் ஒரு காரணம். இப்படி ஆப்பிரிக்காவிலிருந்து கொத்தடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஆப்பிரிக்கர்கள், நெடிய போராட்டத்துக்குப் பிறகு அமெரிக்காவில் விடுதலை செய்யப்பட்டார்கள். அவர்களில் சில நூறு அடிமைகள் தங்கள் தாய்மண்ணுக்குத் திரும்பிய கதையே கொ.மா.கோ. இளங்கோ எழுதியுள்ள ‘பச்சை வைரம்’. அடிமைத்தனம் என்கிற கொடூரத்தைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது.

புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924

வாலுவிடம் கேளுங்கள்

பொது அறிவுக் கேள்வி-பதில்கள் எல்லோருக்குமே பிடித்தமானவை. இதழாளர் மோ. கணேசன் குழந்தைகளுக்கும் சிறாருக்கும் தோன்றும் பல்வேறு கேள்விகளுக்கு இந்தப் புத்தகத்தில் விடையளித்துள்ளார். நமக்கும் எத்தனையோ கேள்விகள் இருக்கும். அவற்றில் சிலவற்றுக்கு இந்தப் புத்தகத்தில் விடை கிடைக்கக்கூடும்.

பாவைமதி வெளியீடு, தொடர்புக்கு: 94441 74272

குரங்கும் கரடிகளும்

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் எஸ். அபிநயா உயர்நிலைப் பள்ளிக் காலத்திலிருந்தே கதை எழுதிவருகிறார். ‘இந்து தமிழ் மாயா பஜார்’ உள்ளிட்ட இதழ்களில் 75-க்கும் மேற்பட்ட இவருடைய கதைகள் பிரசுரமாகியுள்ளன. தமிழ்ச் சிறார் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவராக அபிநயா உருவாகிவருகிறார். இவர் எழுதியுள்ள கதைகள் பெரியவர்கள் எழுதுவதற்கு மாறாக இருக்கின்றன. அறிவுரை சொல்லாமல் அற உணர்வை வலியுறுத்துகின்றன.

நூல் வனம் வெளியீடு, தொடர்புக்கு: 91765 49991

கன்றுக்குட்டி

‘வெள்ளைக்கன்றுக்குட்டி

வேகம் கொண்ட சுட்டி

தோட்டம் எங்கும் சுற்றி

உடைத்துவிட்டது தொட்டி’

– இப்படித் தொடங்கும் ‘கன்றுக்குட்டி’ என்கிற பாடலைப் போல் குழந்தைகளை வசீகரிக்கும் 52 சிறார் பாடல்களின் தொகுப்பே இந்த நூல். சமீபகாலமாக குழந்தைகளுக்கு அதிகமான பாடல்களை எழுதிவரும் எழுத்தாளர் பாவண்ணனின் தொகுப்பு.

பாரதி புத்தகாலயம், தொடர்புக்கு: 044-24332424

நான்காவது நண்பன்

வங்க கிராமத்துச் சிறுவர்கள் மூவர் முதன்முறையாகத் திரைப்படம் பார்த்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆற்றில் வந்த திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு மரத்தில் தஞ்சமடைகிறார்கள். அதே மரத்துக்கு ஒரு புலியும் வந்துசேர்கிறது. அதற்குப் பிறகு நடைபெறும் சுவாரசிய சம்பவங்கள்தான் கதை. மனோஜ் தாஸ் எழுதிய கதையை யெஸ். பாலபாரதி தமிழில் தந்துள்ளார்.

நேஷனல் புக் டிரஸ்ட், தொடர்புக்கு: 044-28252663

சாவித்ரிபாய்

இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவில் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டிருந்தது. அந்தத் தடையை உடைத்தவர் சாவித்திரி பாய். அவருடைய கணவர் ஜோதிபா புலே இதற்குப் பேருதவியாக இருந்தார். பல்வேறு தடைக்கற்களைத் தாண்டித்தான் பெண் கல்வியை அவர்களால் சாத்தியப்படுத்த முடிந்தது. ஏனென்றால், ஒடுக்குமுறையை அழிக்கும் ஆயுதமாக கல்வியை அவர்கள் கருதினார்கள். சாவித்திரி பாயின் கதையைத் தமிழில் தந்துள்ளார் சாலை செல்வம்.

அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை - புதுச்சேரி, தொடர்புக்கு: 9443881701

தங்கமான எங்கள் ஊர்

ரஷ்யாவின் பஷ்கீரியா பகுதியில் தங்கக் கழுகு என்ற ஓர் ஊரைச் சேர்ந்த சிறுவர்கள் அப்துல்லா, ஐதார், வஜீர், யாகூப். ஒரு சிகரத்தில் இருக்கும் சின்ன ஏரியில் மீன்களை வளர்க்க வேண்டுமென அவர்கள் நினைக்கிறார்கள். அதே ஊரில் உள்ள பெரிய ஏரியில் இருந்து மீன்கள் எடுத்துவந்து சின்ன ஏரியில் வளர்ப்பதற்கு முயற்சி எடுக்கிறார்கள். இந்தக் கதையை எழுதியவர் பஷ்கீரிய மக்கள் கவிஞர் முஸ்தாய் கரீம், தமிழில் பூ. சோமசுந்தரம் மொழிபெயர்த்துள்ளார்.

ஆதி பதிப்பகம், தொடர்புக்கு: 99948 80005

சுட்டி அணில் சுந்தரம்

பள்ளி மாணவன் அணில்குட்டி ஒன்றை வளர்க்கத் தொடங்குகிறான். அவனது வாழ்க்கையைச் சுவாரசியமாக்கும் அந்த அணில், திடீரென ஒருநாள் காணாமல் போய்விடுகிறது. முதலில் சோகமடைந்த அவன், அருகிலிருக்கும் மரத்தில் வசிக்கும் மற்ற அணில்களுடன் அதுவும் சேர்ந்துகொண்டிருக்கும், அணில் வாழவேண்டிய இடமும் அதுதான் என்று புரிந்துகொள்கிறான். பிட்டீ மித்தல் எழுதிய கதையைத் தமிழில் மொழிபெயர்த்தவர் சரவணன் பார்த்தசாரதி.

நேஷனல் புக் டிரஸ்ட், தொடர்புக்கு: 044-28252663

10 தூய கண்ணீர்

ஒரு கிராமத்துக்கு வரும் புதிய ஆசிரியர் அந்த ஊரில் புதிதாகத் தொடங்கப்படும் மதுக் கடையை எதிர்க்கிறார். அதற்கு பதிலாக மக்களுக்கு அவசியத் தேவையான மருத்துவமனை வேண்டுமென்று அவரும், அவருடைய மகன் சத்தியனும் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். தொடர்ந்து மக்கள் எதிர்ப்பால் அந்த ஊரில் மதுக்கடை திறக்கப்படுவது தடுக்கப்படுகிறது. ஆனால், கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. தமிழ்ச் சிறார் இலக்கியத்துக்கு மொழிபெயர்ப்புகள் வழியாக அதிகமான நூல்களைத் தந்துள்ள யூமா வாசுகி எழுதியுள்ள முதல் சிறார் கதை இது.

தன்னறம் நூல்வெளி, தொடர்புக்கு: 98438 70059

’இந்து தமிழ்’ வெளியீடு

இந்தியா என்றால் என்ன?

‘மாயாபஜாரில் ‘இடம் பொருள் மனிதர் விலங்கு’ என்ற தலைப்பில் வெளிவந்த, எழுத்தாளர் மருதனின் சூப்பர்ஹிட் கட்டுரைகளின் இரண்டாவது தொகுப்பு. டால்ஸ்டாய், தாகூர், காந்தி, அம்பேத்கர், ஐசக் அசிமோவ், புரோமிதியஸ், வோர்ட்ஸ்வொர்த், சாக்ரடீஸ், ஏங்கெல்ஸ், கிப்ளிங், அக்பர், அமிர் குஸ்ரோ, ஐன்ஸ்டைன் உள்ளிட்ட 25 சுவாரசியமான கட்டுரைகள் இந்த நூலில் உள்ளன.

திறந்திடு சீஸேம்!

பொக்கிஷம் என்றாலே சுவாரசியம்தான். உலகின் மிக முக்கியமான பொக்கிஷங்களாகக் கருதப்பட்ட திப்புசுல்தானின் வாள், பேல் புதையல், சீனாவின் ராஜ முத்திரை, தம்மஸேதி மணி, டெரகோட்டா வீரர்கள், டக்கர் சிலுவை, துட்டன்காமனின் கத்தி, ஃபேபெரெஜ் முட்டைகள் என ஒவ்வொன்றையும் படிக்கும்போது பிரமிப்பு ஏற்படுகிறது. மாயாபஜாரில் ‘திறந்திடு சீஸேம்!’ என்ற தலைப்பில் எழுத்தாளர் முகில் எழுதிய விறுவிறுப்பான 30 கட்டுரைகளின் தொகுப்பு இது.

இந்து தமிழ் திசை, தொடர்புக்கு: 74012 96562

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x