Published : 21 Oct 2015 02:01 PM
Last Updated : 21 Oct 2015 02:01 PM

சித்திரக்கதை: விருந்துக்கு அழைத்த நண்பர்கள்

குளத்துப்பட்டி அழகிய சிறிய கிராமம். பெயருக்கு ஏற்ப அந்தக் கிராமத்தில் பெரிய குளமொன்றும் இருந்தது.

அந்தக் குளத்தில் ஏராளமான அல்லிமலர்கள் பூத்திருக்கும். கொக்குகள், நாரைகள் போன்ற பலவிதமான பறவைகள் அந்தக் குளத்துக்கு வந்து நீர் அருந்திப் போகும்.

கோடைக்காலத்திலும்கூட அந்தக் குளம் வற்றாது. அந்தக் குளத்தில் மீன், தவளை, நண்டு ஆகியவை வசித்து வந்தன.

அதில் ஒரு தவளையும் நண்டும் நண்பர்களாகிவிட்டன. இரண்டும் ஒன்றாய் சேர்ந்தே குளத்தைச் சுற்றி வந்தன.

ஏதாவது சாமார்த்தியமாக பேசி, தினமும் ஒரு மீனையாவது நண்டின் வளையருகே தவளை அழைத்து வந்துவிடும்.

வளையிலிருக்கும் நண்டும் ‘லபக்’கெனப் பாய்ந்து மீனைப் பிடித்துவிடும். பிறகென்ன…இரண்டும் சேர்ந்து மீனைத் தின்று, அன்றைக்குப் பசியாறிவிடும்.

இப்படியே நாட்கள் ஓடின.

அந்தக் குளத்தில் ஒரு அழகான கெண்டை மீன் இருந்தது. நல்ல பெரிய மீன். கொழுகொழுவென பெருத்திருந்தது, அந்த மீன்.

தவளைக்கும் நண்டுக்கும் அந்தக் கெண்டை மீனைத் தின்றுவிட ஆசை.

தவளையும் எப்படியெல்லாமோ ஆசை வார்த்தைப் பேசி, கெண்டை மீனை அழைத்துப் பார்த்தது.

கெண்டை மீன் எதற்கும் மசியவில்லை.

நண்டும் தவளையும் சேர்ந்து ஒரு திட்டம் போட்டன.

“கவலைப்படாதே. நான் என்னோட வீட்டுக்குக் கெண்டை மீனை விருந்துக்கு அழைக்கிறேன். மீன் வந்ததும், அதுக்குக் கண் தெரியாதபடி செய்துவிடுகிறேன். பிறகு நாம் இருவரும் சாப்பிடலாம்…” என்று நண்டு சொன்னது.

உடனே, “வேண்டாம். நான் என்னோட வீட்டுக்கு மீனை விருந்துக்கு அழைக்கிறேன். அதுவும் வரும். வந்ததும் அதோட துடுப்புகளைக் கடித்துவிட்டால், மீனால் நீந்த முடியாது. பிறகு இருவரும் சாப்பிடலாம்…” என்றது தவளை.

“சரி, நாளைக்கு இருவரும் சென்று மீனை அழைப்போம். அது யார் வீட்டுக்கு வர சம்மதிச்சாலும், அதோட கதை அவ்வளவுதான்…!” என்று சொன்னது நண்டு.

இரண்டும் பேசிக்கொண்டிருப்பதை அமைதியாக ஓரத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்தது கெண்டை மீன்.

அடுத்த நாள்

கெண்டை மீன் வருவதைக் கண்டதும், தவளையும் நண்டும் மிகுந்த அன்போடு அருகில் சென்று, “நண்பா, எங்கள் வீட்டு விருந்துக்கு நீ வர வேண்டும்…” என்று அழைத்தன.

“நீங்கள் இருவரும் இப்படி ஒரே நேரத்தில் அழைத்தால், நான் யார் வீட்டுக்கு வருவது? முதலில் நான் யார் வீட்டுக்கு சென்றாலும், மற்றவருக்கு வருத்தம் வந்துவிடும். அதனால், முதலில் இருவரும் என் வீட்டுக்கு விருந்துக்கு வாருங்கள். பிறகு நான் உங்கள் வீடுகளுக்கு வருகிறேன்…” என்று கெண்டை மீன் கூறியது.

“அப்படியே செய்வோம்…”என்று இரண்டும் தலையாட்டின.

“என் வீட்டுக்குப் போகும் வழி ரொம்ப சிக்கலானது. நாம் மூவரும் பிரியாமல் இணைந்தே செல்வதற்கு ஒரு யோசனை உள்ளது…” என்றபடி, கயிறு ஒன்றை எடுத்தது கெண்டை மீன்.

கயிற்றின் ஒரு முனையில் தவளையின் காலையும் நண்டின் காலையும் சேர்த்துக் கட்டியது. மறுமுனையை தன் வாலில் கட்டிக் கொண்டது.

“இப்போது நான் போகிற வழியிலேயே நீங்களும் வரலாம்…!” என்று சொல்லிவிட்டு, உற்சாகமாக கெண்டை மீன் நீந்தத் தொடங்கியது. தவளையும் நண்டும் கூடவே நீந்திச் சென்றன.

திடீரென்று கெண்டை மீன் அங்குமிங்குமாய் துள்ளிக் குதித்தது. வேகவேகமாய் நீந்தியது. குளத்தை சுற்றிச் சுற்றி வந்தது.

கெண்டை மீனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தவளையும் நண்டும் திணறின. கால்கள் வேறு கயிறால் கட்டப்பட்டிருப்பதால், இரண்டாலும் வேகமாக நீந்த முடியவில்லை.

“அய்யோ…போதும். எங்களுக்கு விருந்தே வேண்டாம்… ஆளை விடு…!” என்ற அலறின.

கெண்டை மீன் குளத்தைச் சுற்றி பலமுறை வட்டமடித்ததில், தவளையும் நண்டும் அப்படியே சுருண்டு மயங்கின.

“விருந்துதானே கேட்டீங்க. போங்க, ரெடியா இருக்கு…!”

வாலைச் சுழற்றி, கயிற்றோடு சேர்த்துத் தவளையையும் நண்டையும் குளக்கரையில் தூக்கிப் போட்டது கெண்டை மீன்.

ஓவியம்: ராஜே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x