Last Updated : 09 Dec, 2020 03:14 AM

5  

Published : 09 Dec 2020 03:14 AM
Last Updated : 09 Dec 2020 03:14 AM

மாய உலகம்: முதல் நவீன இந்தியர்

ஓர் இந்தியராக இருந்துகொண்டு எப்போதும் இந்தியாவை குறை சொல்கிறீர்கள். ஓர் இந்துவாக இருந்துகொண்டு நம் மதத்தில் அது சரியில்லை, இது சரியில்லை என்று குத்திக்காட்டுகிறீர்கள். பிரிட்டிஷ் நம் எதிரிகள் என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அவர்கள் செய்வதை ஆஹா ஓஹோவென்று புகழ்கிறீர்கள். நீங்கள் சொல்வதையும் செய்வதையும் பார்க்கும்போது குழப்பமாக இருக்கிறது. ஏன் இப்படி மாறிவிட்டீர்கள், ராம்மோகன் ராய்?

இப்படி என்னிடம் ஏன் எல்லோரும் கேட்கிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பாவம், அவர்களால்தான் என்னைக் கொஞ்சம்கூடப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் ஒரு பெரிய கேள்விக்குறி போல் அவர்கள் முன்னால் நின்றுகொண்டிருக்கிறேன் போலிருக்கிறது.

சமஸ்கிருதத்தில் இருக்கும் வேதத்தை வங்காள மொழிக்கு நான் மொழிபெயர்த்திருப்பதைக் கண்டு ’அடடா, இவரல்லவா உண்மையான இந்து’ என்று ஒரு காலத்தில் பூரித்துப்போனவர்கள்தாம் இவர்கள். நம் வங்க மொழிக்கு எவ்வளவு பெருமிதத்தைத் தேடித் தந்திருக்கிறார், இவரல்லவா உண்மையான தேசபக்தர் என்று மகிழ்ந்தவர்கள்தாம் இவர்கள். ஆனால், இவர்களில் சிலர் என் வீட்டுக்கு வந்தபோது, அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள்.

இதென்ன, ராஜாராம் உங்கள் மேஜையில் வேதத்தோடு ஒட்டிக்கொண்டு பைபிளும் குரானும் அமர்ந்திருக்கின்றன? இது பாவமில்லையா? ஒரு நல்ல இந்து இப்படிச் செய்யலாமா? ஐயோ, இதென்ன வங்கக் கவிதைகளின் மீது அரபு இலக்கியம் அல்லவா ஏறி அமர்ந்துகொண்டிருக்கிறது? இது ‘மற்றவர்கள்’ படிக்க வேண்டிய புத்தகம் இல்லையா? ஆ, நீங்கள் ஏன் அலமாரியில் ஆங்கில அகராதி எல்லாம் வைத்திருக்கிறீர்கள்? ஆங்கிலம் நம் எதிரிகளின் மொழியல்லவா?

அவர்களை அமைதிப்படுத்தினேன். எனக்கு பைபிள் பிடிக்கும். பகவத் கீதையைப் படிப்பதைப் போலவேதான் குரானையும் நான் படிக்கிறேன். இதில் எந்தத் தவறும் இல்லை. எனக்கு அரபு மொழி மட்டுமல்ல, பாரசீகமும் இந்தியும்கூடத் தெரியும். ஆம், ஆங்கிலேயர்கள் நம்மை ஆக்கிரமித்தவர்கள். பிரிட்டன் நம்மை ஆள்வதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்றே நானும் சொல்கிறேன். அவர்களுக்கு எதிராகப் போராடவும் நான் தயார்.

ஆனால், அவர்கள் மொழி எனக்கு எதிரியல்ல. ஆங்கிலம் கற்பதில், ஆங்கிலம் பேசுவதில், ஆங்கிலத்தில் எழுதுவதில் எந்தத் தவறும் இல்லை. அதேபோல்தான் பாரசீகமும் அரபியும் இன்னபிற மொழிகளும்.

இந்த உலகில் மோசமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால், மோசமான மொழி என்று எதுவுமில்லை. கொஞ்சம் முயன்றால் எதுவும் நம் மொழிதான்.

ஒரு கிறிஸ்தவர்தான் பைபிள் படிக்க வேண்டும், இஸ்லாமியர்தான் குரான் படிக்க வேண்டும், இந்து வேதம் மட்டுமே படிக்க வேண்டும் என்று எல்லாம் எந்த விதிமுறையும் இல்லை. எல்லாமே அச்சிடப்பட்ட புத்தகங்கள்தானே? எல்லாமே எழுத்துகள்தானே? வேதத்தையும் கீதையையும் சகுந்தலாவையும் கிறிஸ்தவர்களான பிரிட்டிஷார் படிக்கலாம், மொழிபெயர்க்கலாம், கொண்டாடலாம் என்னும்போது நாம் கிறிஸ்தவ இலக்கியங்களைக் கொண்டாடக்கூடாதா? ஓர் இந்துவின் கரங்களில் அமர மாட்டேன் என்று திருக்குரான் என்றாவது சண்டையிட்டிருக்கிறதா?

இந்தியாவை நான் நேசிக்கிறேன். இந்து மதத்தை நான் மதிக்கிறேன். என் நிலத்தின் வரலாற்றை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அதே நேரம், என் நாடும் என் மதமும் என் வரலாறும் குறைகளே இல்லாதவை என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். இந்தியர்கள் பலர் குறைந்தபட்ச பள்ளிக் கல்விகூடப் பெற முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்துக்கள் பலர் மூடநம்பிக்கைளில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். பெண்களை சக உயிர்களாக மதிக்க மறுக்கிறார்கள். இவர்கள் எல்லாம் இந்துக்கள் என்னும் ஒரே காரணத்துக்காக அவர்கள் தவறுகளை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.

அதேபோல் பிரிட்டிஷ் அரசின் தவறுகளுக்காக அந்த நாட்டு மக்களை நான் வெறுக்கவும் மாட்டேன். சாதி வேறுபாடின்றி, ஆண் பெண் பேதமின்றி அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகப் பல பள்ளிகளை இங்கே கட்டியவர்கள் அவர்கள்தாம். இல்லை, எதிரிகளின் பள்ளிகள் நமக்கு வேண்டாம் என்று அவற்றை இடிக்கவா முடியும்? மாறாக, அவர்களைப் பின்பற்றி மேலும் மேலும் பல பள்ளிகளை அல்லவா நாம் உருவாக்க வேண்டும்? பிரிட்டிஷ் குழந்தைகள் போல், ஐரோப்பியக் குழந்தைகள் போல் இந்தியக் குழந்தைகளும் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் கற்க வேண்டும் என்றல்லவா நாம் விரும்ப வேண்டும்?

நான் என் நாட்டை நேசிக்கிறேன். எனவே என் நாட்டில் ஏராளமான குறைகள் உள்ளன என்கிறேன். நான் என் மக்களை நேசிக்கிறேன். எனவே அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுகிறேன். நான் இந்து மதத்தை மதிக்கிறேன். எனவே அதிலுள்ள கசடுகள் என் கண்களுக்குப் புலப்படுகின்றன.

நான் ஓர் இந்தியன். எனவே உலகிடமிருந்து கற்கிறேன். நான் ஒர் இந்து. எனவே எல்லா நம்பிக்கைகளையும் அரவணைத்துக்கொள்கிறேன். நான் ஒரு தேசபக்தன். எனவே என் நாட்டைத் தூய்மைப்படுத்த விரும்புகிறேன். நான் ஒரு வங்காளி. எனக்கு எல்லா மொழிகளும் வேண்டும். நான் ஒரு மாணவன். கடந்த காலத்திலிருந்து என்னவெல்லாம் தேவையோ அவற்றை எல்லாம் சேகரித்துக்கொள்வேன். எதிர்காலத்துக்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றை எல்லாம் நான் கற்றுக்கொள்வேன். உனக்குப் பழமை வேண்டுமா, புதுமை வேண்டுமா என்று கேட்டால் நான் நவீனத்தையே தேர்ந்தெடுப்பேன். அதையே என் மக்களுக்கும் பரிந்துரைப்பேன்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x