Published : 14 Oct 2015 11:52 AM
Last Updated : 14 Oct 2015 11:52 AM
பாண்டு: என்ன வாண்டு, பார்த்தும் பார்க்காத மாதிரி போய்கிட்டே இருக்க.
வாண்டு: ஏ... பாண்டு, உன்னை நான் கவனிக்கவேயில்லை. எங்க போற?
பாண்டு: ஓட்டலுக்குப் போறேன் வாண்டு.
வாண்டு: ஏன் பாண்டு? வீட்டுல சமைக்கலையா?
பாண்டு: வீட்டுல அம்மா சமைச்சாங்க. எனக்கும், என் தம்பிக்கும் அந்த டிபன் பிடிக்கல. அதான் ஓட்டல்ல எனக்கும் தம்பிக்கும் பிடிச்ச மாதிரி, அம்மா டிபன் வாங்கிட்டு வரச் சொன்னாங்க.
வாண்டு: அப்போ ஏற்கெனவே சமைச்சத அம்மா என்ன பண்ணுவாங்க?
பாண்டு: அம்மாவே சாப்பிடுவாங்க. அப்படி இல்லன்னா, தூக்கிப் போட்டுடுவாங்க.
வாண்டு: சாப்பாட்டை வீணாக்கக் கூடாதுன்னு நம்ம பள்ளிக்கூடத்துல எத்தனை தடவைச் சொல்லியிருக்காங்க. அதை மறந்திட்டியா பாண்டு? பிடிக்கலைன்னாகூட ஒருவேளை மட்டும் சாப்பிட்டா, நீ என்ன குறைஞ்சா போயிடுவ?
பாண்டு: இப்போ நீ என்ன சொல்லவர?
வாண்டு: நமக்கு ஒவ்வொரு வேளையும் சாப்பிட அம்மா சமையல் செஞ்சு கொடுத்திடுறாங்க. ஆனா, உலகத்துல எத்தனை பேரு சாப்பாடே இல்லாம இருக்காங்க தெரியுமா?
பாண்டு: என்ன வாண்டு, நான் ஒரு வேளை சாப்பிடலைங்குறதுக்கும் உலகத்துல நிறைய பேரு சாப்பிடாம இருக்குறதுக்கும் என்னப்பா சம்பந்தம்?
வாண்டு: இருக்கே பாண்டு, உலகத்துல தினமும் சரியா சாப்பாடு கிடைக்காம 20 கோடி பேரு பசியால வாடுறாங்களாம். நம்ம நாட்டுல சத்தான சாப்பாடு கிடைக்காம, ஊட்டச்சத்து இல்லாம தினமும் நம்மள மாதிரி குட்டிப் பசங்க நிறைய பேரு செத்துபோயிடுறாங்களாம்.
பாண்டு: என்ன வாண்டு, ரொம்ப அதிர்ச்சியான விஷயத்தை சொல்ற. அது எப்படி உனக்குத் தெரியும்?
வாண்டு: ஆமா பாண்டு, இதெல்லாம் எங்க டீச்சர்தான் சொன்னாங்க. அக்டோபர் 16-ம் தேதி உலக உணவு தினம் கொண்டாடு றாங்களாம். உலகத்துல இவ்வளவு பேரு சாப்பாடே இல்லாம பசியால இருக்கறப்ப, சாப்பாட்டை வீணாக்கக் கூடாதுன்னு டீச்சர் சொன்னாங்க. அதைதான் நான் இப்போ சொல்லிட்டு இருக்கேன்.
பாண்டு: நிச்சயமா வாண்டு, இனிமே நான் சாப்பாட்டையும் வீணாக்க மாட்டேன்.
வாண்டு: இப்போதான் நீ சமத்து பையன்.
பாண்டு: வாண்டு, பள்ளிக்கூடத்துல ஆண்டு விளையாட்டு விழா வருதே, விளையாட்டுப் போட்டியில கலந்துக்க பேர் கொடுத்துட்டியா?
வாண்டு: இல்லை பாண்டு, நான் என்னைக்கு விளையாட்டுப் போட்டில போட்டி போட்டிருக் கேன். அப்படியே கலந்துகிட்டா லும் நிச்சயமா தோத்துடுவேன்.
பாண்டு: தோற்கிறதைப் பத்தி கவலைப்படக்கூடாது வாண்டு. மகிழ்ச்சிகரமா பங்கேற்கிறதுதான் முக்கியம். நானும் நிறைய போட்டில கலந்துகிட்டாலும், எல்லாத்துலையும் ஜெயிக்குறேனா என்ன? தொடர்ந்து கலந்துகிட்டா ஒரு நாள் நிச்சயமா ஜெயிச்சிடலாம். ஒரு விஷயத்தை உன்கிட்ட சொன்னா, நீகூட எல்லா விளையாட்டுப் போட்டிக்கும் பேர் கொடுத்துடுவ.
வாண்டு: என் மனசை மாத்துற அளவுக்கு அப்படி என்ன விஷயம் வைச்சிருக்க? அதைத்தான் சொல்லேன்.
பாண்டு: சொல்றேன். இங்கிலாந்துல பெய்லி மேத்யூஸ்னு ஒரு குட்டிப் பையன் இருக்கான். அவனுக்கு 8 வயசுதான் ஆகுது. அவனுக்கு ‘செரிப்ரல் பால்ஸி’ன்னு மூளை முடக்குவாத நோயாம். அவனால எழுந்துகூட நிற்க முடியாதாம்.
வாண்டு: பாண்டு, விளையாட்டுப் போட்டியில கலந்துக்க ஐடியா கொடுப்பேன்னு பார்த்தா, என்னென்னமோ சொல்லிக்கிட்டு இருக்கே.
பாண்டு: விஷயமே அதான் வாண்டு. கொஞ்சம் பொறுமையாக் கேளு. அந்தக் குட்டிப் பையன் ஓட்டப்பந்தயத்துல கலந்துகிட்டு ஜெயிச்சிருக்கானாம்.
வாண்டு: என்ன பாண்டு, நெஜமாவா சொல்ற? அவனாலதான் நடக்க முடியாதுன்னு சொன்னியே.
பாண்டு: ஆமா, அவனால எழுந்து நடக்க முடியாதுதான். சின்ன குழந்தைங்க நடந்து பழகுறதுக்கு ‘வாக்கர்’வாங்குவாங்க இல்லையா? அதுமாதிரி வாக்கரை வைச்சி மேத்யூஸோட அப்பா எழுந்து நடக்கவும் ஓடவும் மேத்யூஸுக்குப் பயிற்சி கொடுத்திருக்காரு. அப்படி பயிற்சி செஞ்சுதான் ஓட்டப்பந்தயத்துல கலந்துகிட்டு அவன் ஜெயிச்சிருக்கான்.
வாண்டு: என்னால நம்பவே முடியலை பாண்டு. ரொம்ப ஆச்சரியமா இருக்கு.
பாண்டு: எனக்கும் ரொம்ப ஆச்சரியம்தான். அது மட்டுமில்ல வாண்டு, இப்போ மேத்யூஸ் நீச்சல் அடிக்கவும் அவுங்க அப்பா கத்துக்கொடுத்திட்டு வர்றாரு. எவ்வளவு தன்னம்பிக்கையா மேத்யூஸ் சாதிச்சிட்டு இருக்கான் பாத்தியா? இப்போ நீயே சொல்லு, விளையாட்டுப் போட்டியில கலந்துக்க பேர் கொடுப்பதானே?
வாண்டு: நிச்சயமா பாண்டு, முயற்சியும் பயிற்சியும் இருந்தா யாரு வேணும்னாலும் விளையாட்டுப் போட்டியில கலந்துக்க முடியும்ணு எனக்கு புரிய வைச்சிட்ட.
பாண்டு: சரி வாண்டு, டைம் ஆயிடுச்சு, நான் கிளம்புட்டுமா?
வாண்டு: எங்கே, ஓட்டலுக்கா?
பாண்டு: சே...சே... வீட்டுக்குதான். அம்மா செஞ்ச டிபனை சாப்பிட்டுட்டு கிரவுண்டல ஓடிப் பயிற்சி எடுக்கப் போறேன்.
வாண்டு: இரு பாண்டு, அம்மாகிட்ட சொல்லிட்டு நானும் உன்கூட கிரவுண்டுக்கு வரேன்.
- மிது கார்த்தி
ஓவியம்: முத்து
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT