Published : 11 Nov 2020 03:17 AM
Last Updated : 11 Nov 2020 03:17 AM
விவசாயி ஒருவர் காலையில் கலப்பையைத் தோளில் வைத்து காளைகளுடன் வயலுக்குச் செல்வதை, ஓர் ஈ தினமும் பார்த்துக்கொண்டிருந்தது. அது, விலங்குகளின் ரத்தம் குடிக்கும் ஒருவகை ஈ. காளைகளின் ரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், தன் உடலை அசைத்து காளைகளிடம் பறந்து செல்வதற்கு விருப்பமில்லை. அந்தளவு சோம்பேறி அது.
ஒரு நாள் கடும் பசியால் துவண்டுபோனது ஈ.
அப்போது விவசாயி, வழக்கம்போல காளைகளுடன் அந்த வழியாக வந்தார். இனிமேலும் சோம்பேறியாக இருந்தால் செத்துவிடுவோம் என்று நினைத்த ஈ, பறந்து சென்று ஒரு காளையின் வாலில் அமர்ந்தது. மிகச் சிறிய அந்த ஈ, தன் வாலில் அமர்ந்திருப்பதை, காளை உணரவே இல்லை. ஈ தன் ஊசி மூக்கால் காளையின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்தது.
விவசாயி வயலுக்கு வந்து காளைகளின் முதுகில் நுகத்தடி வைத்தபோது, ஈ பறந்துபோய் பக்கத்துச் செடியில் அமர்ந்தது. பசி தீர்ந்ததால் சற்று நேரம் தூங்கியது.
மதியத்துக்குப் பிறகு விவசாயி உழவை நிறுத்தினார். காளைகளை நுகத்திலிருந்து பிரித்துவிட்டார். அவை வரப்புகளில் இருக்கும் புற்களை மேய்ந்தன. பிறகு விவசாயி காளைகளுடன் வீட்டுக்குப் புறப்பட்டார்.
ஈ ஒரு காளையின் வாலில் அமர்ந்துகொண்டது. மீண்டும் காளையின் ரத்தத்தைக் குடித்தது.
கொஞ்சம் தூரம் சென்ற பிறகு, சோம்பேறி ஈயின் நண்பனான இன்னொரு ஈ எதிரே பறந்து வந்தது. காளையின் வாலில் இருக்கும் சோம்பேறி ஈயைப் பார்த்து அது வியப்புடன் கேட்டது:
“நண்பனே, நீ இதுவரை எங்கே இருந்தாய்?”
சோம்பேறி ஈ கோபமாகச் சொன்னது: “உனக்கு என்ன கண் தெரியவில்லையா? நானும் இந்தக் காளைகளும் காலையிலிருந்து பாடுபட்டு நிலம் உழுதுவிட்டு, களைத்துப் போய் வருகிறோம்!”
அதைக் கேட்டு நண்பன் ஈ உரக்கச் சிரித்தது. இது சோம்பேறி ஈக்குப் பிடிக்கவில்லை.
“நீ ஏன் இப்படிச் சிரிக்கிறாய்?”
“உன் பேச்சைக் கேட்டு சிரித்துவிட்டேன். காளைகள் நிலம் உழுவதைத்தான் நான் பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரு ஈ நிலம் உழுவதை நான் இதுவரை பார்த்ததில்லை. நீ நாக்கால் நிலம் உழுபவன் என்பதை நிரூபித்துவிட்டாய்!” என்று சிரித்தது அந்த ஈ.
சோம்பேறி ஈ அந்த இடத்தைவிட்டுச் சென்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT