Published : 21 Oct 2015 02:24 PM
Last Updated : 21 Oct 2015 02:24 PM
அம்மா கடைக்குப் போய் ஏதாவது வாங்கச் சொன்னாலோ, பேருந்து, ரயில் போன்றவற்றில் பயணம் செய்யும்போது டிக்கெட் வாங்கவோ, நொறுக்குத்தீனி வாங்கவோ வேண்டுமென்றால் என்ன வேண்டும்? காசு அல்லது பணம் வேண்டும் இல்லையா? பணம் என்றாலே அது காகித நோட்டாகவோ அல்லது சலசலக்கும் நாணயங்களாகவோ இருக்கும் என்றே நாம் நினைக்கிறோம்.
இன்றைக்குத்தான் பணம் அப்படி இருக்கிறது. ஆனால், காலங்காலமாகப் பணம் மாறி வந்த வடிவங்களைப் பற்றித் தேடினால், மிக ஆச்சரியமாக இருக்கிறது:
l ஒரு காலத்தில் வட அமெரிக்காவில் உள்ள ஹைதி தீவில் காய்கறிகூட பணமாகக் கருதப்பட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஹைதியில் இன்றைக்கும் 'கௌர்டு' என்றே பணம் அழைக்கப்படுகிறது. கௌர்டு என்றால் சுரைக்காய் என்று அர்த்தம். 1807-ம் ஆண்டில் ஹைதியின் ஆளுநராக ஹென்றி கிறிஸ்டோபே இருந்தார். அப்போது, அந்தத் தீவின் கடன் அடைக்க முடியாத அளவுக்கு அதிகமாகிவிட்டது. ஆனால், நாட்டில் சுரைக்காய் மட்டும் ஏகபோகமாக விளைந்தது. பார்த்தார் ஹென்றி, தீவில் விளைந்த ஒவ்வொரு சுரைக்காயும் அரசுக்குச் சொந்தம் என்று அறிவித்தார். அரசின் பணியாளர்கள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று எல்லா சுரைக்காய்களையும் கொண்டுவந்தார்கள். 2.27 லட்சம் சுரைக்காய்களை அரசின் கஜானாவில் சேர்த்தார்கள். அதற்குப் பதிலாக விவசாயிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகுதான் அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ பணத்துக்கு ‘கௌர்டு’ என்ற பெயர் சூட்டப்பட்டது.
l அமெரிக்காவின் சில பகுதிகளில் புகையிலையும், மான் தோலும் பணமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மான் தோலுக்கு ஆங்கிலத்தில் ‘Buckskin' என்று பெயர். இன்றைக்கும் ஆங்கிலத்தில் பணம் ‘Bucks' என்று அழைக்கப்படுவதற்கு இதுவே காரணம்.
l மேற்கு பசிஃபிக் பெருங்கடலில் இருக்கும் மைக்ரோனேசிய தீவில் மிகப் பெரிய சுண்ணாம்புப் பாறைகள் உள்ளன. அவை வெட்டியெடுக்கப்பட்டு நாணயமாகச் செதுக்கப்பட்டு பணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த நாணயங்கள் எவ்வளவு பெரிதாக இருக்கின்றனவோ, அதற்கேற்ப மதிப்பு கூடும். 12 அடி சுற்றளவு கொண்ட நாணயங்கள்கூட இருந்திருக்கின்றன. தங்கள் அந்தஸ்தை வெளிப்படுத்த வீட்டுக்கு வெளியிலேயே இந்தப் பிரம்மாண்டமான நாணயங்களைக் காட்சிக்கு வைத்திருப்பார்களாம்.
l பண்டைய காலத்தில் ஆழமற்ற பசிஃபிக், இந்தியக் கடற்கரைகளில் சின்னச் சின்ன சோழிகள் (கிளிஞ்சல்) கிடைத்துக்கொண்டிருந்தன. இந்த சோழிகளே மிகப் பரவலாகவும் மிக நீண்ட காலத்துக்கும் பணமாகப் பயன்படுத்தப்பட்டுவந்தன. சீனாவில்தான் இந்தச் சோழிகள் முதலில் பணமாகப் பயன்படுத்தப்பட்டன. சீனாவின் சித்திர எழுத்தில் பணம் என்ற வார்த்தைக்கு சோழியே வரையப்படுகிறது. சீனா மட்டுமல்ல, இந்தியாவின் பல பகுதிகளிலும் சோழிகள் பணமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் 18-ம் நூற்றாண்டு வரை சோழிகள் பணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
l ஆஸ்திரேலியா பக்கத்தில் உள்ள ஃபிஜித் தீவில் திமிங்கிலத்தின் பல் பணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் வெள்ளைப் பல்லைவிடச் சிவப்புப் பல்லுக்கு மதிப்பு ரொம்ப அதிகம். திமிங்கிலத்தின் பல் வரிசை ரம்பத்தைப் போலிருக்கும். அதிலிருந்து பற்கள் தனியாக உடைத்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.
l ‘ஆப்லாங்’ எனப்படும் ஒட்டியிருக்கும் இரட்டைக் கிளி்ஞ்சல்கள் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, வெட்டி பட்டை தீட்டப்பட்டு, சிறுசிறு பாசிமணிகளாக மாற்றப்பட்டன. இப்படி உருமாறிய பிறகு, அதற்குப் பெயர் வாம்பம். அதற்கு வெள்ளை என்று அர்த்தம். வட அமெரிக்காவில் இருந்த செவ்விந்தியப் பழங்குடிகள் வாம்பம்மைப் பணமாகப் பயன்படுத்தியுள்ளனர். அது மதிப்புமிக்கதாகக் கருதப்பட்டதற்கு முக்கிய காரணம், அந்த வகை கிளிஞ்சல்கள் எளிதாகக் கிடைக்கவில்லை. அத்துடன் அவற்றைப் பாசிமணியாக மாற்றுவதும் கஷ்டமாக இருந்தது. பொதுவாக வெள்ளைநிறப் பாசிமணிகள் பயன்படுத்தப்பட்டாலும், அதைவிடவும் அரிதாக இருந்த கறுப்புக் கிளிஞ்சல் பாசிமணி இரட்டை மதிப்புடையதாகக் கருதப்பட்டது. ஒரு காலத்தில் வங்கியில் கடனை அடைக்கக்கூட இந்த கிளிஞ்சல் பாசிமணிகள் பணமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT