Published : 14 Oct 2020 09:28 AM
Last Updated : 14 Oct 2020 09:28 AM
டோலி நாய்க்குட்டி காலையில் எழுந்ததும் கவலைப்பட்டது.
‘இன்று என் பிறந்தநாள். ஆனால், என்னை யாரும் எழுப்பி பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லையே! எல்லோரும் என்னை மறந்துவிட்டார்கள்!’
டோலியின் வீட்டுக்குப் பக்கத்தில்தான் பாலி பசுவின் வீடு. ‘பாலி என் பிறந்தநாளை மறந்திருக்காது!’
டோலி, பாலியின் வீட்டுக்குச் சென்றது. ஆனால், அங்கே யாரும் இல்லை.
‘கொஞ்சம் நடந்துவிட்டு வருவோம்’ என்று நினைத்த டோலி தோட்டத்துக்குச் சென்றது.
அங்கே நின்றது, ஹோலி குதிரை. டோலியைப் பார்த்ததும் அது கேட்டது: “நடக்கப் புறப்பட்டுவிட்டாயா?”
பிறந்தநாள் வாழ்த்துகளைக் கேட்க ஆசைப்பட்ட டோலிக்கு, ஹோலியின் அந்தப் பேச்சு வருத்தத்தை ஏற்படுத்தியது. அது பட்டென்று திரும்பி நடந்தது. அப்போது சேவல் மோலி வந்தது.
“கொக்கரக்கோ, வணக்கம், டோலி!” என்றது மோலி. பிறகு வாலை ஆட்டியபடி நடந்து சென்றது. பிறந்தநாள் வாழ்த்துகளைக் கேட்க ஆசை கொண்டிருந்த டோலிக்கு ஏமாற்றம்.
டோலி சோகத்துடன் நடந்தது. அப்போது அங்கே வந்தன ஐந்து கோழிக்குஞ்சுகள்!
‘இவை எனக்கு வாழ்த்துச் சொல்லத்தான் வருகின்றன!’ என்று நினைத்தது டோலி.
“வணக்கம், டோலி. உலவப் புறப்பட்டுவிட்டாயா?” என்று கேட்ட கோழிக்குஞ்சுகள் அவசரமாகச் சென்றன.
பாவம் டோலி. அதற்கு அழுகை வந்தது. ஆயினும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் நடந்தது. நடந்து நடந்து அது வயலுக்குப் பக்கத்தில் உள்ள குளக்கரைக்கு வந்துவிட்டது. அங்கே குளித்துக்கொண்டிருந்தன டூலி வாத்தும் அதன் குஞ்சுகளும்.
‘நிச்சயமாக இவர்களுக்கு என் பிறந்தநாள் நினைவிருக்கும்!’ என்று நினைத்தது டோலி. அப்போது டூலி கேட்டது: “க்வாக், க்வாக்… டோலி, நடக்கப் புறப்பட்டுவிட்டாயா?”
“ஆமாம்” என்றது டோலி.
“சரி, போய்வா!”
துயரத்துடன் டோலி நடந்தது. ‘என் பிறந்தநாளை எல்லோரும் மறந்துவிட்டார்களே… ஒரு பெரிய கேக் செய்து நண்பர்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். என் பிறந்தநாளை மறந்தவர்களுக்கு நான் எதற்கு கேக் கொடுக்க வேண்டும்?’
அப்போது லோலி ஆட்டுக்குட்டி புல் மேட்டில் நின்றிருந்தது.
“டோலி, என் வீட்டுக்கு வா. நான் உனக்கு ஒன்று காட்டுகிறேன்!” என்று டோலியை அழைத்தது லோலி. ‘லோலிக்கும் என் பிறந்தநாள் நினைவிருக்காது’ என்று நினைத்தபடி அதனுடன் நடந்தது டோலி.
லோலி மெல்ல தன் வீட்டுக் கதவைத் திறந்தது. உள்ளே நுழைந்து பார்த்தபோதோ, நிறைய மெழுகுவர்த்திகள்! அறையின் நடுவில் ஒரு பெரிய கேக்!
“பிறந்தநாள் காணும் சகோதரனே, வா!”
உள்ளேயிருந்த பாலி பசு அழைத்தது. டோலி மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது.
ஹோலி குதிரை, மோலி சேவல், பூலி கோழியும் அதன் குஞ்சுகளும், டூலி வாத்தும் அதன் குஞ்சுகளும், மீலி பூனை ஆகிய எல்லா நண்பர்களும் சுற்றிலும் நின்றிருந்தன.
“டாலி எலி எங்கே?” டோலி சுற்றிலும் பார்த்தது. டாலி சுண்டெலி ஓடி வந்தது! அதன் கையில் ஒரு வர்ணத் தொப்பி இருந்தது. மீலி பூனையின் தோளில் தாவி ஏறி, அந்தத் தொப்பியை டோலியின் தலையில் வைத்தது.
பிறகு எல்லாம் உரக்கப் பாடின: “உனக்கு மகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துகள், டோலி!”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT