Published : 16 Sep 2015 12:26 PM
Last Updated : 16 Sep 2015 12:26 PM
பறக்கும் குதிரையின் படங்களை டி.வி.யிலோ, இதழ்களிலோ பார்த்து ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். குதிரை எப்படிப் பறக்கும் என்று கற்பனை செய்தும் பார்த்திருப்பீர்கள். உண்மையில் பறக்கும் குதிரை ஒரு கற்பனை உயிரினம்தான். அதைப் பற்றி இந்த வாரம் பார்ப்போமா?
l கிரேக்கப் புராணக் கதைகள் மூலமாகப் பிரபலமானது ‘பெகாசஸ்’ என்றழைக்கப்படும் பறக்கும் குதிரை. தூய வெள்ளை நிறம் கொண்டது. பறவை போல சிறகுகள் உள்ள குதிரை.
l பறக்கும் குதிரை புனிதத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பாம்புத்தலை கொண்ட மெடுசாதான் பறக்கும் குதிரையின் அம்மா. இதன் தலையிலிருந்து பிறந்த உயிரினம்தான் பறக்கும் குதிரை. பிறக்கும்போதே அதன் அம்மா மெடுசா இறந்துவிட்டதால், பறக்கும் குதிரையைக் கட்டுப்படுத்த யாருமே இல்லை. அதனால், முரட்டுத்தனம்மிக்க உயிரினமாகப் பறக்கும் குதிரை கருதப்படுகிறது.
l ஞானத்தின் அடையாளமாகவும் பறக்கும் குதிரை போற்றப்படுகிறது. கிரேக்கத்தில் சிற்பங்கள் மற்றும் பானை ஓவியங்களில் பறக்கும் குதிரையின் சித்திரங்கள் 19-ம் நூற்றாண்டுவரை அதிகம் வரையப்பட்டிருக்கின்றன.
l ஒருமுறை கிணற்றில் நீர் குடித்துக்கொண்டிருந்தது பறக்கும் குதிரை. அப்போது அங்கே வந்த கிரேக்கப் புராண வீரன் பெல்லரோபான் முரட்டுத்தனமிக்க பறக்கும் குதிரையை அடக்கி, அதை வாகனமாக பயன்படுத்தியதாக ஒரு கதை உள்ளது.
l பெல்லரோபானும் பறக்கும் குதிரையும் சேர்ந்து பல சாகசங்களைச் செய்துள்ளனர். மனிதர்களைக் கொல்லும் ஆபத்து நிறைந்த விலங்காக இருந்த சிமேராவை பெல்லரோபான் சாகடித்தான். அப்போது அவன் பறக்கும் குதிரையில் சவாரி செய்துதான் கொன்றான்.
l யாருமே செல்லக் கூடாது எனத் தடைவிதிக்கப்பட்டிருந்த ஒலிம்பஸ் மலைச் சிகரத்தில் பெல்லரோபான் பறக்கும் குதிரையுடன் சவாரி செய்தான். அப்படிப் போக முயன்றதால் பெல்லரோபானை ஜீயஸ் கடவுள் தண்டித்தார். பறக்கும் குதிரையிலிருந்து பெல்லரோபானைத் தள்ளிவிட்டார். இதனால் பெல்லரோபானுக்குக் காலில் ஊனம் ஏற்பட்டது. பறக்கும் குதிரை தனது மதிப்புமிக்க தலைவனை இழந்தது.
l அதேநேரம் ஒலிம்பஸ் மலையில் பறக்கும் குதிரைக்கு வேலை ஒன்று கிடைத்தது. அது என்ன வேலை தெரியுமா? மின்னலைப் பிடித்து ஜீயஸ் கடவுளுக்குச் சக்தியைத் தரும் வேலைதான் அது.
l இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன் நாட்டினர் பயன்படுத்திய பாராசூட்டுகளில் பெல்லரோபான், பறக்கும் குதிரை மீது அமர்ந்திருக்கும் படம் சின்னமாகப் பயன்படுத்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT