Published : 23 Sep 2020 09:01 AM
Last Updated : 23 Sep 2020 09:01 AM

டிங்குவிடம் கேளுங்கள்: எல்லோரும் ஒரே மாதிரி சிந்தித்தால் என்ன ஆகும்?

பல்லி எச்சம் மட்டும் கறுப்பு, வெள்ளை என இரண்டு நிறங்களில் காணப்படுகிறதே ஏன், டிங்கு?

- அ. பிரியதர்சினி, 9-ம் வகுப்பு, சேது லட்குமிபாய் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளி, ராசாக்கமங்கலம், குமரி.

பல்லிக்கு மலம், சிறுநீர் கழிப்பதற்கு என்று தனித்தனி பாதைகள் கிடையாது. பல்லி நீரையும் பருகுவதில்லை. எப்போதாவது நாக்கை நீரால் நனைத்துக்கொள்வதுண்டு.அதனால் சிறுநீர் அதிகம் வெளியேறுவதில்லை. குறைவான சிறுநீரும் யூரிக் அமிலமாக மாறிவிடுவதால், வெள்ளைப் படிகமாக மாறி, மலத்துடன் சேர்ந்து வெளியே வருகிறது. இதனால்தான் பல்லியின் மலம் கறுப்பு, வெள்ளை என இரு வண்ணங்களில் காணப்படுகிறது, பிரியதர்ஷினி.

வலிப்பு நோய்க்கு இரும்புச் சாவி கொடுத்தால் நிற்கும் என்று ஒரு தொலைக்காட்சி தொடரில் பார்த்தேன். உண்மையா, டிங்கு?

- என். சர்வேஷ், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, வத்தலகுண்டு.

வலிப்பு என்பது நோய் அல்ல, நோயின் அறிகுறிதான். அதிகமான காய்ச்சல், ரத்தக் கொதிப்பு, மூளை பாதிப்பு போன்ற பிரச்சினைகளைத் தெரிவிக்கும் விதமாக வலிப்பு வருகிறது. மூளையிலும் நரம்பு செல்களிலும் தகவல் பரிமாற்றம் செய்வதற்கு, அந்தச் செல்களிடையே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. மூளையில் அதிக அழுத்தம் ஏற்படும்போது, மின்சாரம் அதிக அளவில் உற்பத்தியாகிவிடுகிறது. இந்த மின்சாரம் நரம்புகள் வழியே உறுப்புகளுக்குச் செல்லும்போது கை, கால்கள் இழுக்க ஆரம்பித்துவிடுகின்றன. இதனைத்தான் வலிப்பு என்கிறோம். இரும்புச் சாவி அல்லது இரும்புப் பொருட்களைக் கொடுத்தால் வலிப்பு நிற்காது. இதுபோன்ற இரும்புப் பொருட்கள் வலிப்பு வந்தவருக்கு ஆபத்தைத்தான் விளைவிக்கும், சர்வேஷ்.

நாம் எல்லோரும் ஒரே மாதிரி சிந்தித்தால் என்ன நடக்கும் டிங்கு?

- வி. ஹேமவர்ஷினி, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

வித்தியாசமான கேள்விகளாக கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள், ஹேமவர்ஷினி. மனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஒருவரின் கை ரேகை போல் இன்னொருவரின் கைரேகைகூட இல்லை. அப்படியிருக்கும் போது ஒரே மாதிரி சிந்திப்பதற்கு எல்லாம் வாய்ப்பில்லை. ஒருவேளை மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி சிந்தித்தால் என்ன நடக்கும்? நல்லவிதமாகச் சிந்தித்தால் யாரும் பசியால் வாட மாட்டார்கள். யாரும் துன்பப்பட மாட்டார்கள். எல்லோரும் சமமாக மதிக்கப்படுவார்கள். எங்கும் அன்பும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும். ஒரு வேளை கெட்டவிதமாகச் சிந்தித்தால் என்ன ஆகும்? நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஒரே ஒரு ஹிட்லருக்கே இந்த உலகத்தால் தாங்க முடியவில்லை. அவரைப் போல் அனைவரும் சிந்தித்தால் என்ன ஆகும்?

மனிதர்கள் வெவ்வேறு விதமாகச் சிந்திப்பதால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கிறது. முன்னேற்றங்கள் ஏற்படுகின்றன. கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x