Published : 16 Sep 2020 09:28 AM
Last Updated : 16 Sep 2020 09:28 AM
இந்தியாவில் பொறியாளர்கள் தினம் செப்டம்பர் 15 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தில்தான் 1860-ம் ஆண்டு இந்தியாவின் புகழ்பெற்ற பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா பிறந்தார். இது அவருக்கு 160-வது பிறந்த நாள்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள முட்டனஹள்ளி கிராமத்தில் பிறந்தாலும் இவரது முன்னோர்கள் ஆந்திர மாநிலத்தின் மோக்சகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதனால் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா என்று பெயர் சூட்டினார்கள். 12 வயதிலேயே தந்தையை இழந்ததால், மிகவும் கஷ்டப்பட்டு கல்வியைத் தொடர்ந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தையும் புனே அறிவியல் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் பட்டத்தையும் பெற்றார்.
அரசாங்கப் பணியில் இருந்தாலும் புதிய விஷயங்களைச் செய்து பார்ப்பதில் ஆர்வமாக இருந்தார் விஸ்வேஸ்வரய்யா. பாசனத்துக்கான புதிய முறையை உருவாக்கினார். தானியங்கி வெள்ள மதகை உருவாக்கி, நீர்த்தேக்கத்தில் பயன்படுத்தி வெற்றி பெற்றார். வெள்ளத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான திட்டத்தை வகுத்தார். துறைமுகங்களில் கடல் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான தடுப்பு அமைப்புகளை உருவாக்கினார்.
காவிரி ஆற்றின் குறுக்கே இவரால் கட்டப்பட்ட கிருஷ்ணராஜ சாகர் அணை, அப்போது ஆசிரியாவிலேயே மிகப் பெரிய அணையாக இருந்தது. விஸ்வேஸ்வரய்யாவுக்குப் புகழைத் தேடித் தந்தது. 1894-ம்ஆண்டு மைசூருக்கு அருகில் ஆசிரியாவிலேயே முதல் நீர்மின் உற்பத்தி ஆலையை அமைக்கக் காரணமாக இருந்தார்.
விருப்ப ஓய்வுக்குப் பிறகு மைசூர் மன்னரின் திவானாகப் பணியாற்றினார். பத்ராவதி எஃகு ஆலை, மைசூர் பல்கலைக்கழகம், தொழிற்சாலைகள், அரசு பொறியியல் கல்லூரி போன்றவற்றை உருவாக்கினார்.
இவருடைய சேவைகளைப் பாராட்டி ஆங்கில அரசாங்கம், ‘நைட் கம்மாண்டர்’ பட்டத்தை வழங்கியது. சுதந்திரத்துக்குப் பிறகு 1955-ம் ஆண்டு இந்திய அரசாங்கம் ‘பாரத ரத்னா’ பட்டத்தை அளித்தது. பல்வேறு பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்திருக்கின்றன.
‘நவீன மைசூர் அரசின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாள் அன்று கர்நாடகாவில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
‘இந்தியப் பொறியியலின் தந்தை’ என்று கொண்டாடப்படும் விஸ்வேஸ்வரய்யா, 1962-ம் ஆண்டு 101 வயதில் மறைந்தார். இன்றும் அவர் உருவாக்கிய அணைகளும் தொழிற்சாலைகளும் கல்வி நிறுவனங்களும் அவர் புகழைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT