Published : 16 Sep 2015 01:00 PM
Last Updated : 16 Sep 2015 01:00 PM

‘ஹேப்பி பர்த் டே தி இந்து...

வாண்டு: ஹேப்பி பர்த் டே... ஹேப்பி பர்த் டே...

பாண்டு: இரு இரு வாண்டு..., யாருக்கு இப்போ பொறந்த நாளு?

வாண்டு: ஏய்.. மறந்துட்டியா... 'தி இந்து'வுக்குதான் இன்னிக்கு பொறந்த நாளு.

பாண்டு: ஆமால்ல, நான் மறந்தே போய்ட்டேன். நம்மள மாதிரி குட்டிப் பசங்களுக்கு 'மாயாபஜார்'ல சுவாரசியமா புதுப்புது விஷயங்கள சொல்ற 'தி இந்து'க்கு நானும் ஹேப்பி பர்த் டே சொல்லிடுறேம்பா.

வாண்டு: சரி...சரி... இன்னையில இருந்து நம்ம குட்டி ஃபிரெண்ட்ஸ்களுக்கு 'மாயா பஜார்'ல இன்னும் பல விஷயங்கள சொல்லலாம்னு இருக்கேன்.

பாண்டு: ஏய் வாண்டு, என்னையும் அதுல சேர்த்துக்கப்பா, நானும் உன்னோட சேர்ந்து ஃபிரெண்ட்ஸோட பேசுறேன்.

வாண்டு: சரி பாண்டு, நம்ம ரெண்டு பேரும் இனிமே வாரா வாரம் பேசுவோம்.

பாண்டு: அது சரி! அப்துல் கலாம் பத்தி 'மாயா பஜார்'ல போட்டி அறிவிச்சிருக்காங்களே. போட்டிக்கு நீ கட்டுரை அனுப்பீட்டியா?

வாண்டு: ம்... நான் நேத்திக்கே அனுப்பிட்டேன். உன்னோட ஓவியத்தை அனுப்பிட்டேன்னு உங்க அம்மா சொன்னாங்களே.

பாண்டு: ஆமா, இந்தப் பகுதியில நிறைய விஷயங்களைப் பேசலாம்னு சொன்னியே, எதை வேணுன்னாலும் சொல்லலாமா?

வாண்டு: ம்ஹூம்... சின்னக் குழந்தைகளைப் பத்தி, அவுங்களோட சாதனைகளைப் பத்தி, அவுங்களோட பிரச்சினைகளைப் பத்தி, அவுங்களோட விருப்பங்களைப் பத்தி மட்டும் பேசுனாதானே நம்ம ஃபிரெண்ட்ஸுக்குப் பிடிக்கும்? அதையே பேசுவோம்.

பாண்டு: நீ பிரச்சினைன்னு சொன்னவுடனேதான் எனக்கே ஞாபகம் வருது.

வாண்டு: என்ன பிரச்சினை பாண்டு?

பாண்டு: நம்ம பப்பி வீட்டுல, அவளோட தங்கச்சி ஒரே ரகளை பண்ணிட்டாளாம். ஞாயிற்றுகிழமை அன்னிக்கு நூடுல்ஸ் கேட்டு ஒரே அடமாம். அவுங்க அம்மா நூடுல்ஸ் இல்லைன்னு சொல்லிட்டாங்களாம். அதனால ரொம்ப நேரமா அழுதுகிட்டே இருந்தாளாம்.

வாண்டு: பப்பியோட அம்மா சொன்னது சரிதானே. எனக்குக்கூட நூடுல்ஸ்ன்னா ரொம்பப் பிடிக்கும். நூடுல்ஸ்ல ஒரு சத்தும் இல்லைன்னு எங்கம்மா எனக்குப் புரிய வைச்சாங்க.

பாண்டு: உங்க அம்மா என்ன சொன்னாங்க?

வாண்டு: நூடுல்ஸ்ன்றது மைதாவில் சில ரசாயனங்களை சேர்த்துத் தயாரிக்கிற ஒரு உணவுப் பொருளாம். மைதாவே கோதுமையோட சக்கையில் இருந்துதான் தயாரிக்குறாங்களாம். மத்த உணவுகள்ல இருக்குறது மாதிரி நூடுல்ஸ்ல நார்ச்சத்து, புரதச் சத்து, வைட்டமின்னு எந்தச் சத்தும் இல்லைன்னு எங்கம்மா சொன்னாங்க.

பாண்டு: எங்கப்பாக்கூட அன்னைக்கு எங்க அம்மாகிட்ட இதைப் பத்தி பேசிட்டு இருந்தாரு. நூடுல்ஸ்ல கொழுப்பு, உப்பு, மாவுச்சத்து, ருசிக்காக டேஸ்ட்மேக்கர்னு என்னென்னமோ சேர்க்குறதா சொன்னாரு. அதனால, எனக்கு சத்துள்ள உணவை மட்டுமே வீட்டுல செஞ்சு கொடுக்கணும்னு அம்மாகிட்ட அப்பா ஆர்டர் போட்டுட்டு இருந்தாரு.

வாண்டு: ரொம்ப கரெக்ட். இதை பப்பியோட தங்கச்சிகிட்ட நீயே சொல்லு, சரியா. எனக்கு இப்போ டியூஷனுக்கு நேரமாச்சி. நான் போட்டுமா?

பாண்டு: சரி.. டாட்டா... பை பை... அடுத்த புதன்கிழமை பார்ப்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x