Published : 16 Sep 2015 12:39 PM
Last Updated : 16 Sep 2015 12:39 PM
காலையில் எழுந்து பல் துலக்க அம்மா பிரஷை நீட்டுவார்கள் அல்லவா? தூக்கக் கலக்கத்தில் பிரஷை வாங்கி மேலும் கீழுமாகத் தேய்ப்போம். வாயை வேகமாகக் கொப்பளித்துவிட்டு உடனடியாக காபி, டீ குடிக்க வந்துவிடுவோம், இல்லையா? ஆனால், பல்லை இஷ்டத்துக்குத் துலக்கக் கூடாது. முறையாகத் துலக்க வேண்டும்.
1.முதலில் பல் துலக்கும் பிரஷை 45 டிகிரி சாய்வாக வைத்துகொண்டு,மேல் பகுதியில் உள்ள பற்களின் ஈறுகளின் மேல் சுற்றிச்சுற்றி பல் துலக்க வேண்டும்.
2.அடுத்ததாக வெட்டும் பற்களின் மேலே முன்னும் பின்னுமாகப் பற்களைத் துலக்க வேண்டும்.
3. பிறகு பல் துலக்கும் பிரஷை 45 டிகிரி சாய்வாக வைத்து, கீழ்ப் பகுதியில் உள்ள பற்களின் ஈறுகளின் மேலே சுற்றிச் சுற்றிப் பற்களைத் துலக்க வேண்டும்.
4. இறுதியாக, பற்களின் பின் புறமும், முன் புறமும் மாறிமாறி பல் துலக்க வேண்டும்.
5. பற்களைக் காலையில் துலக்கினால் மட்டும் போதாது. இரவில் படுக்கச் செல்லும் முன்பும் ஒரு முறை துலக்க வேண்டும். பகலில் நாம் சாப்பிட்ட உணவுகளின் துகள்கள் பற்களின் இடையில் சிக்கிக்கொள்ளும். அதை அப்படியே விட்டுவிட்டால் பாக்டீரியா வினைபுரிந்து பற்களைச் சொத்தையாக்கிவிடும். இரவில் பற்களைத் துலக்கினால் உணவு துகள்கள் வந்துவிடும் என்பதால்தான் இரண்டு வேளை பற்களைத் தேய்க்கச் சொல்கிறார்கள்.
இன்னொரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பிரஷ் முழுவதும் பற்பசையை எடுக்கக் கூடாது. பிரஷில் பாதியளவு இருந்தால் போதுமானது. சிலர் 10 நிமிடங்களுக்கு மேல் பற்களைத் துலக்கிக்கொண்டே இருப்பார்கள். அதிகப்பட்சமாக 3 - 5 நிமிடங்களுக்கு மேல் பற்களைத் துலக்கக் கூடாது.
தகவல் திரட்டியவர்: ஏ. ஹரிணி,
5-ம் வகுப்பு,
அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரும்புதூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT