Published : 15 Jul 2020 10:12 AM
Last Updated : 15 Jul 2020 10:12 AM
எஸ். அருள் துரை
வெளியிலிருந்து கூட்டுக்குள் நுழைந்த ராணித் தேனீ, “எல்லோரும் சீக்கிரம் வாங்க” என்று பதற்றத்துடன் கத்தியது. புழுக்களுக்கு உணவு கொடுத்துக்கொண்டும் கூட்டைச் சுத்தம் செய்துகொண்டும் இருந்த வேலைக்காரத் தேனீக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. “ராணிக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படிப் பதறுகிறார்? நம் கூட்டை எதிரிகள் கைப்பற்ற வருகிறார்களா?” என்று வேலைக்காரத் தேனீக்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டன.“எதிரிகள் நம்மை நோக்கி வருகிறார்களா?” என்று கேட்டது ஆண் தேனீ.
“நாம் வலிமையானவர்கள். என்னிடம் படை பலம் அதிகம். அதனால் தேனீக்களில் எதிரிகள் யாரும் எனக்குக் கிடையாது. எல்லோருக்கும் எதிரிகள் என்றால் மனிதர்கள்தான்” என்று யோசனையில் ஆழ்ந்தது ராணித் தேனீ. “பூந்தேன் எடுக்க தோட்டத்துக்குப் போகணும். நிறைய வேலை இருக்கு. என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா கேட்டுட்டு, வேலையைப் பார்க்கக் கிளம்புவோம்” என்றது ஒரு வேலைக்காரத் தேனீ.
“இதே தெருவில் இருக்கும் வேப்பமரத்தில் கூடு கட்டியிருக்கும் என் தங்கையைப் பார்க்கப் போனேன். அந்த மரத்துக்கு அடியில் ஒரு தேநீர் கடை இருந்தது. அவர்கள் இந்தத் தெருவை அரசாங்கம் அகலப்படுத்தப் போவதாகப் பேசிக்கொண்டார்கள்.”
“சாலையை அகலப்படுத்துவதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டது ஆண் தேனீ. “இப்படி ஒரு கேள்வியை நான் எதிர்பார்க்கவில்லை. சாலையை அகலப்படுத்துவதற்காகச் சாலை ஓரத்தில் இருக்கும் மரங்களை வெட்டப் போகிறார்களாம். கட்டிடங்களை இடிக்கப் போகிறார்களாம். இந்த மரத்தையும் இதில் கட்டியிருக்கும் நம் கூட்டையும் அழித்துவிடுவார்கள்.
அதனால்தான் பதற்றத்துடன் ஓடி வந்தேன்” என்றது ராணித் தேனீ. “மனிதர்களை நாம் எல்லோரும் சேர்ந்து விரட்டிவிடலாம். கவலையை விடுங்கள் ராணி” என்றது ஒரு வேலைக்காரத் தேனீ. “ஒருத்தர் ரெண்டு பேர் என்றால் நம்மால் சமாளிக்க முடியும். பெரிய பெரிய ஜேசிபி இயந்திரங்களுக்கு முன்னால் நாம் எல்லாம் வெறும் தூசு. நாம் வேறு இடத்துக்குச் செல்வதைத் தவிர, வேறு வழியே இல்லை” என்றது ராணித் தேனீ.
“இந்த மரத்துக்குப் பக்கத்தில்தான் பூங்கா இருக்கிறது. அங்கே செடி, கொடி, மரங்களில் ஏராளமாகப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. நிறையப் பூந்தேனை எளிதாக எடுத்து வந்துவிடலாம்” என்றது ஒரு வேலைக்காரத் தேனீ. “இங்கிருந்து நாம் மட்டும்தான் இன்னொரு இடத்துக்குப் போக முடியும். கூட்டுக்குள் இருக்கும் புழுக்களை என்ன செய்வது? இதை எப்படியாவது தடுத்து நிறுத்த முடியாதா?” “கூட்டுப்புழுக்களை யோசித்தோமானால் நம்மையே இழக்க வேண்டி வரலாம். மனிதர்கள் திடீர்னு நெருப்பை வைத்தாலும் வைத்து விடுவார்கள். நாளை வேறு இடம் செல்ல எல்லோரும் தயாராக இருங்கள்” என்று சொல்லிவிட்டு, தன் அறைக்குச் சென்றுவிட்டது ராணித் தேனீ.
மறுநாள் காலை. வேலைக்காரத் தேனீக்கள் புழுக்களைப் பிரிந்து செல்ல மனம் இல்லாமல் கண்ணீரோடு அமர்ந்திருந்தன. வெளியே சென்றிருந்த ராணித் தேனீ கூட்டுக்குள் நுழைந்தது. முகத்தில் பதற்றம் எதுவும் தெரியவில்லை.
“நாம் எல்லோரும் இன்னும் கொஞ்ச நாள் இங்கே தான் இருக்கப் போறோம்” என்றது ராணித் தேனீ. வேலைக்காரத் தேனீக்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எல்லாம் உற்சாகமாக ரீங்காரமிட்டன.
“ஏன் இந்தத் திடீர் முடிவு?” என்று கேட்டது ஆண் தேனீ.
“இரவெல்லாம் எனக்குத் தூக்கமே இல்லை. வெளியே சென்றேன். இந்தப் பகுதியில் மரங்கள் அதிகம் இருப்பதால் பறவைகளும் விலங்குகளும் அதிகமாக வாழ்கின்றன. மரங்களை வெட்டினால் அவற்றுக்கு வாழ வழியிருக்காது என்பதால், சூழலியல் போராட்டக்காரர்கள் சாலையை அகலப்படுத்தும் திட்டத்துக்குத் தடை வாங்கிவிட்டார்கள். அதனால் நாம் இங்கேயே கொஞ்ச நாளைக்கு இருக்கலாம்” என்றது ராணித் தேனீ.
“சாலையை அகலப்படுத்துவதற்குத்தான் தடை வாங்கிவிட்டார்களே... இனி நிரந்தரமாக இங்கே தங்கிவிட வேண்டியதுதானே?” என்று கேட்டது ஒரு வேலைக்காரத் தேனீ.
“நல்ல கேள்விதான். தடை எல்லாம் நிரந்தரம் இல்லை. எப்போது வேண்டுமானாலும் தடையை நீக்கி, சாலையை அகலப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்படலாம். அதனால் இந்தக் கூட்டில் உள்ள புழுக்கள் தேனீக்களாக மாறும் வரை நாம் இங்கே இருப்போம். பிறகு புதிய இடத்துக்குச் சென்றுவிடுவோம். இப்போ வழக்கமான பணிகளைப் பார்க்கலாமா?” என்று ராணித் தேனீ கேட்கவும் வேலைக்காரத் தேனீக்கள் சுறுசுறுப்பாகத் தங்கள் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தன.
மாலையில் பூந்தேனைச் சுமந்துகொண்டு நான்கு வேலைக்காரத் தேனீக்கள் கூட்டுள் நுழைந்தன. “ராணி, இனிமேல் நாம் வேறு இடங்களைப் பற்றி யோசிக்கவே வேண்டாம். இந்தத் தெருவில் பாவோபாப் என்ற அரிய மரம் ஒன்று இருக்கிறதாம். அதனால் சாலையை அகலப்படுத்தும் பணியை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டனர். இந்தச் சந்தோஷமான செய்தியைப் பறவைகளும் விலங்குகளும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தன. அதைச் சொல்வதற்குதான் ஓடோடி வந்தோம்” என்றன அந்த நான்கு தேனீக்கள்.
“எவ்வளவு அருமையான செய்தியைச் சொல்லியிருக்கிறீர்கள்! சூழலுக்குத் தீங்கு இல்லாத முன்னேற்றமே சிறந்த முன்னேற்றம் என்பதை மனிதர்கள் இனியாவது புரிந்துகொள்வார்களா? இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்கு இன்று இரவு விருந்துக்கு செய்யுங்கள்” என்றது ராணித் தேனீ. விருந்தில் வேப்ப மரத்து தேனீக்களும் அரச மரத்து தேனீக்களும் கலந்துகொண்டன.ஓவியம்: கிரிஜா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT