Published : 01 Jul 2020 09:18 AM
Last Updated : 01 Jul 2020 09:18 AM
ஸ்நேகா
ஊசி, மாத்திரையைக் கண்டால் பயப்படாத குழந்தைகளே இருக்க முடியாது. குறும்பு செய்யும் குழந்தைகளிடம், டாக்டரிடம் போய் ஊசி போட்டுவிடுவேன் என்று மிரட்டும் பெரியவர்களும் இருக்கிறார்கள். நம் உடல் நலத்தைப் பாதுகாக்கவே மருத்துவர் ஊசியையும் மாத்திரையையும் அளிக்கிறார் என்பதை அறியும்போது, மருத்துவர்களின் மீது மரியாதை வந்துவிடும்.
மனிதர்களின் வாழ்க்கையில் மருத்துவர்களுக்கு எப்பொழுதுமே உயர்வான இடம் உண்டு. நேரம் காலம் பார்க்காமல், ஓய்வு இன்றி உழைக்கக்கூடியவர்கள் மருத்துவர்கள். கரோனா போன்ற கொள்ளை நோய் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் தியாகத்துக்கு ஈடு எதுவும் இல்லை.
உலகின் பல நாடுகளிலும் மருத்துவர்கள் தினம் வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து அனுசரிக்கப்படுகிறது. மருத்துவத்தில் சிறந்து விளங்கும் கியூபா, கரோனா நெருக்கடி காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மருத்துவர்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது. கியூபாவில் மருத்துவரும் விஞ்ஞானியுமான கார்லோஸ் ஜுவான் ஃபின்லே பிறந்த தினமான டிசம்பர் 3 அன்று மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1886-ம் ஆண்டிலேயே மஞ்சள் காய்ச்சல் கொசு மூலம் பரவுகிறது என்பதைக் கண்டுபிடித்தவர் இவர்.
இந்தியாவில் 1991-ம் ஆண்டிலிருந்து ஜூலை முதல் நாளை தேசிய மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள். மருத்துவர்களின் முக்கியத்துவம், பொறுப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மருத்துவத் தொழிலை மேம்படுத்தவும் இந்த நாளைப் பயன்படுத்துகிறார்கள்.
ஜூலை 1
டாக்டர் பிதான் சந்திர ராய் இந்தியாவின் பெருமைக்குரிய மருத்துவ மேதை. மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சைக்கான படிப்புகளை ஒரே நேரத்தில் படித்தவர். விடுதலைப் போராட்ட வீரராகவும் இருந்தார். சுதந்திரம் பெற்ற பிறகு மேற்குவங்கத்தின் இரண்டாவது முதலமைச்சராக 14 ஆண்டுகள் பதவி வகித்தார். அப்போதும் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்தார். இவரது சேவைகளைப் பாராட்டி, 1961-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ராயின் பிறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவத்துறையில் குறிப்பிடத் தகுந்த வகையில் முன்னேற்றங்களைக் கண்டுள்ள இந்தியா, இன்னும் மருத்துவர்களையே பார்த்திராத கிராமங்களுக்கும் சேவை அளிக்க வேண்டியிருக்கிறது. மனித உயிர்களைக் காக்கும் அற்புதமான பணியை மேற்கொண்டு வரும் மருத்துவர்களை இந்த நாளில் நினைவுகூர்வோம். நாம் பார்க்கும் மருத்துவர்களிடம் அன்பையும் நன்றியையும் பகிர்ந்துகொள்வோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT