Published : 17 Jun 2020 08:53 AM
Last Updated : 17 Jun 2020 08:53 AM
எல். ரேணுகா தேவி
எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் உதவக்கூடிய மனம் படைத்தவர்கள் குழந்தைகள்தாம். அப்படிப்பட்ட குழந்தைகளில் ஒருவர்தான் தென்றல். கரோனா பாதிப்பால் மனிதர்கள் படும் துயரங்கள் ஏராளம். அதிலும் ஏழைகளின் நிலைமை மிகவும் மோசம். இதனால் தனது ஓவியங்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை கரோனா நிவாரண நிதிக்குக் கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் தென்றல்.
புதுச்சேரியில் ஏழாம் வகுப்பு படித்துவரும் தென்றல், மூன்று வயதிலேயே ஓவியம் தீட்ட ஆரம்பித்துவிட்டார். “அப்பா கோபால் ஜெயராமன் இந்திரா தேசிய கலை மையத்தின் புதுவை மண்டல இயக்குநராக இருக்கிறார். அவர் ஓவியரும்கூட. அவரின் வேலை காரணமாகச் சில ஆண்டுகள் ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா நாட்டில் வசித்தோம். அங்குள்ள இயற்கைச் சூழல் எங்களை ரொம்பவே கவர்ந்துவிட்டது. அப்பா அடிக்கடி வரைந்துகொண்டிருப்பார். அதைப் பார்த்து எனக்கும் ஓவியம் தீட்டுவதில் ஆர்வம் வந்துவிட்டது. நான்கு வயதில் ‘ஆண் - பெண்’ சமத்துவத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட ஓவியக் கண்காட்சியில் கலந்துகொண்டேன். போட்டிகளிலும் பங்கேற்று பரிசுகளைப் பெற்றேன்” என்கிறார் தென்றல்.
இயற்கைக் காட்சிகளை ஓவியமாக வரைவதில் அதிக ஆர்வம்கொண்ட தென்றல், புதுச்சேரியில் நடைபெற்ற ‘கேம்லின்’ ஓவியப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்றுள்ளார். சுயமாக ஓவியங்கள் வரையத் தொடங்கிய இவர், தற்போது முறையாக ஓவிய ஆசிரியரிடம் பயிற்சி பெற்றுவருகிறார். கேன்வாஸ், ஆயில், அக்ரலிக், வாட்டர்கலர் என அனைத்துவிதமான ஓவியங்களையும் வரையத் தெரிந்தவராக இருக்கிறார் தென்றல்.
கரோனா நிதிக்கான ஓவியங்கள்
விடுமுறையில் விதவிதமான ஓவியங்களைத் தீட்டிக்கொண்டிருந்தபோது, கரோனாவால் மக்கள் படும் துன்பங்களைத் தெரிந்துகொண்டார். உடனே தன்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார்.
“செய்திகளைப் பார்க்கும்போது ஏழை மக்கள் படும் துயரங்களை அறிந்தேன். அதைப் பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. என் வயதுக்கு ஓவியங்களைத் தான் தீட்ட முடியும். அந்த ஓவியங்களை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் பணத்தை முதலமைச்சர் கரோனா நிதிக்குக் கொடுக்கும் முடிவை என் பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்களும் என் எண்ணத்தைப் புரிந்துகொண்டு, உதவுவதாகச் சொன்னார்கள். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. உடனே, ‘கரோனா காலத்தில் குடும்பங்களின் நிலை’ என்ற தலைப்பில் ஓவியங்கள் வரையத் தொடங்கினேன்.
பணம் கொடுத்து என் ஓவியங்களை வாங்குபவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இயற்கைக் காட்சிகள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என்று வரைந்து கொடுக்கிறேன். ‘gopaljayaraman@ymail.com’ என்ற மின்னஞ்சல் மூலமாக 500/- ரூபாய்க்கு ஒரு ஓவியத்தை விற்பனை செய்கிறேன். இதுவரை இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஓவியங்களை வாங்குவதற்காக முன்பதிவு செய்துள்ளனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து தயாராக வைத்துள்ளேன். விற்பனையைப் பொறுத்து மேலும் ஓவியம் தீட்டும் எண்ணத்தில் இருக்கிறேன். விரைவிலேயே ஓவியங்கள் மூலம் கிடைக்கும் தொகை முழுவதையும் மாவட்ட ஆட்சியர் அல்லது புதுவை முதல்வர் நிதிக்குக் கொடுத்துவிடுவேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தென்றல்.
விடுமுறையை அர்த்தமுள்ளதாகவும் பிறர் துன்பம் போக்கும் விதத்திலும் பயன்படுத்தி வரும் தென்றலின் முயற்சி வெற்றி பெறட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT