Published : 03 Jun 2020 09:18 AM
Last Updated : 03 Jun 2020 09:18 AM

எட்டுத் திக்கும் சிறகடிக்கும் கதைகள் - போலந்து: அறிவுள்ள குருவி

யூமா வாசுகி

செல்வந்தர் ஒருவருக்கு விசாலமான பூந்தோட்டம் இருந்தது. ஒரு நாள் மாலையில் அவர் தோட்டத்தில் உலவிக்கொண்டிருந்தார். அப்போதுதான், அங்கே விரிக்கப்பட்டிருந்த வலையில் வந்து சிக்கிக்கொண்ட ஒரு குருவியைப் பார்த்தார். அதைக் கையில் எடுத்தார். என்ன ஆச்சரியம்! குருவி பேசத் தொடங்கியது:

“ஐயா! என்னை ஏன் பிடித்தீர்கள்? என்னைக் கூண்டுக்குள் அடைப்பதுதான் நோக்கமா? அப்படியானால் உங்களுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. எனக்குப் பல வண்ணச் சிறகுகள் இல்லை. எனவே, பார்த்து ரசிக்கும்படியான அழகு எனக்கு இல்லை. மற்றப் பறவைகளைப் போல நன்றாகப் பாடுவதற்கான இனிமையான குரலும் எனக்கு இல்லை. என்னைக் கொன்று தின்ன நினைத்தீர்கள் என்றால், அதனாலும் உங்களுக்கு நன்மை ஏற்படப்போவதில்லை. ஏனென்றால், என் இந்தச் சிறிய உடலில் கொஞ்சம்கூட மாமிசம் இல்லை. ஆனால், நீங்கள் என்னை விட்டுவிட்டால் நான் உங்களுக்கு மூன்று அறிவுரைகள் தருவேன்!”

செல்வந்தர் சில நொடிகள் யோசித்துவிட்டுச் சொன்னார்: “உனக்குப் பாடத் தெரியவில்லை என்றால் நீ என்னை மகிழ்ச்சிப்படுத்த முடியாது. அதனால் உன் அறிவுரைகளைச் சொல். அவை எனக்குப் பிடித்திருந்தால் நான் உன்னை விட்டுவிடுகிறேன்!” குருவி பேசத் தொடங்கியது: “ஒன்று, கடந்து போனவற்றைக் குறித்துக் கவலைப்படாதீர்கள். இரண்டு, பெற முடியாதவற்றைப் பெற ஆசைப்படாதீர்கள். மூன்று, நடக்க முடியாத காரியத்தை நம்பாதீர்கள்!”

இதைக் கேட்ட பிறகு செல்வந்தர், “உன் அறிவுரைகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. அதனால் நான் உன்னை விடுதலை செய்கிறேன்!” என்று குருவியை விடுவித்தார். அப்புறம் அவர், குருவி சொன்ன விஷயங்களைப் பற்றி ஆழமாக யோசிக்கத் தொடங்கினார். அப்போது ஒரு சிரிப்பொலி கேட்டது. பார்த்தால், அது நம் குருவிதான். அருகே ஒரு மரக் கிளையில் அமர்ந்து சிரித்துக்கொண்டிருந்தது.

செல்வந்தர் கோபத்துடன் கேட்டார்: “நீ ஏன் சிரிக்கிறாய்?”

குருவி சொன்னது: “இரண்டு காரணங்களால் நான் சிரித்துவிட்டேன். நான் எவ்வளவு சுலபமாக விடுதலை அடைந்துவிட்டேன் என்பது முதலாவது காரணம். பூமியில் உள்ள எல்லா ஜீவராசிகளை விடவும் தாங்களே அறிவாளிகள் என்று மனிதர்கள் ஆணவம் கொண்டிருக்கிறார்களே! உண்மையில் அவர்கள் எவ்வளவு முட்டாள்கள் என்று நான் இப்போது தெரிந்துகொண்டதுதான் மற்றொரு காரணம்.”

குருவி சொன்னது செல்வந்தருக்குப் புரியவில்லை. அவர் கேட்டார், “நீ ஏன் இப்படிச் சொல்கிறாய்?”
“என்னை விட்டுவிடாமல் கூண்டில் அடைத்திருந்தால் நீங்கள் மேலும் பணக்காரர் ஆகியிருந்திருக்கலாம். ஏனென்றால், என் வயிற்றுக்குள் கோழி முட்டை அளவுள்ள மிக விலையுயர்ந்த வைரம் இருக்கிறது!”

இதைக் கேட்டு செல்வந்தர் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டார். சற்று நேரத்துக்குப் பிறகு ஏமாற்றத்துடன் சொன்னார்: “சுதந்திரம் அடைந்துவிட்டதாக நீ மகிழ்ச்சியடைய வேண்டாம். சுகமான இந்தக் கோடைகாலம் சீக்கிரம் கடந்து போய்விடும். இனி குளிர்காலம் வரப்போகிறது. கடுங்குளிர் நிலவும். பலத்த பனிக்காற்று வீசும். நீர்நிலைகளில் எல்லாம் தண்ணீர் உறைந்துவிடும். தாகம் தீர்ப்பதற்கு ஒரு துளி நீர்கூட உனக்கு எங்கும் கிடைக்காது. வயல்களும் உறைபனியால் மூடப்பட்டிருக்கும்.

உன் பசிக்கு ஒரு தானியமணிகூட கிடைக்காது.”
குருவி தலையசைத்துக் கேட்டுக ்கொண்டிருந்தது. அவர் மேலும் சொன்னார்: “ஆனால் நீ என்னிடம் வந்தால், கதகதப்பான வெப்பம் இருக்கும் என் வீட்டில் நீ வசிக்கலாம். உன் விருப்பப்படி பறக்கலாம். உனக்குக் குடிப்பதற்குத் தண்ணீரும் சாப்பிடுவதற்கு சுவையான உணவும் இருக்கும். சுதந்திரம் சுதந்திரம் என்று சொல்லிக்கொண்டு கஷ்டப்படுவதைவிட, என்னிடம் வசிப்பது எவ்வளவோ நல்லது என்று உனக்கு அப்போது புரியும்.”

அவர் சொல்லி முடித்தவுடன் சின்னகுருவி மேலும் சத்தமாகச் சிரித்தது. அவரின் கோபம் அதிகரித்தது.

“நீ மீண்டும் சிரிக்கிறாயா?”
“நான் எப்படிச் சிரிக்காமல் இருப்பேன்?” குருவி கேலியாகச் சொன்னது. “பாருங்கள், நான் சொன்ன அறிவுரைகளைக்கூட நீங்கள் இதற்குள் மறந்துவிட்டீர்கள். கடந்து போனதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள் என்று நான் சொன்னேன். என்னை விடுவித்தது குறித்து நீங்கள் இப்போது கவலைப்படுகிறீர்கள். இப்படி என் முதலாவது அறிவுரையை வீணாக்கிவிட்டீர்கள்.”

செல்வந்தர் முறைத்துப் பார்த்துக கொண்டிருந்தார். குருவி மென்மையாகச் சொன்னது: “எப்போதும் ஆகாயத்தில் பறந்துகொண்டிருக்க விரும்பும் பறவை நான். என் வாழ்க்கையின் அடிப்படையே சுதந்திரம்தான். இப்படிப்பட்ட நான், தெரிந்தே எப்படி ஒரு சிறைக்குள் செல்வேன்? என்னை மீண்டும் பிடிக்க வேண்டும் என்று வீண் ஆசை கொள்வதன் மூலம் நீங்கள் என் இரண்டாவது அறிவுரையையும் கைவிட்டுவிட்டீர்கள்.”

செல்வந்தரின் முகம் இருண்டது. தொடர்ந்து சொன்னது குருவி: “நடக்காத காரியங்களை நம்பாதீர்கள் என்று நான் சொன்னேன். கோழிமுட்டையின் பாதி அளவே இருக்கும் என் வயிற்றில், எப்படி முட்டை அளவுள்ள வைரம் இருக்கும்? இப்படி என் மூன்றாவது அறிவுரையும் உங்களுக்குப் பயன்படவில்லை!”

செல்வந்தர் தலைகுனிந்தார். சின்னக் குருவி கீச்சிட்டுக்கொண்டு உயரப் பறந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x